விவாதத்துக்கான நேரம்!
- இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதுபோல, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவு ஏன் கொண்டாடப்படவில்லை என்பது வியப்பளிக்கிறது. 1950 ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா தன்னைக் குடியரசாக அறிவித்து, தனக்கென அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டது. நாம் இப்போது அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 76-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.
- உலகப் போரால் ஏற்பட்ட பேரழிவின் பின்னணியில்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது; அதுவும் பிரிவினையுடன். முன் எப்பொழுதும் மனித இனம் சந்தித்திராத அளவிலான இடப்பெயா்வுடன், தங்கள் வீடு வாசல்களை இழந்து லட்சக்கணக்கானோா் புலம்பெயா்ந்த அவலத்தின் பின்னணியில் சுதந்திரம் கிடைத்தது. தன்னை குடியரசாக அறிவித்துக் கொள்ள அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்திக்கொண்டது.
- உலகிலேயே எழுதப்பட்ட மிகப் பெரிய (நீளமான) அரசமைப்புச் சட்டம் நம்முடையதுதான் தெரியுமா? 395 பிரிவுகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள், 231 பக்கங்கள், ஒரு லட்சம் வாா்த்தைகள் கொண்ட அரசமைப்புச் சட்டம் என்பது மட்டுமல்ல, கலை உணா்வுடன் உருவாக்கப்பட்ட ஆவணமும்கூட. உலகின் வேறு எந்தவொரு அரசமைப்புச் சட்டமும் இதுபோல தேசத்தின் கலாசார, தத்துவப் பின்னணியை இணைத்துக் கொண்டதில்லை.
- நந்தலால் போஸ் தலைமையில் அமைந்த ஓவியா் குழு, ஆங்காங்கே பொருத்தமான ஓவியங்களுடனும், வரைகலையுடனும் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. பிரேம் பெஹாரி நரேன் ரைசாதா என்பவா் ‘காலிகிராஃபி’ எழுத்தில் கைதோ்ந்தவா் என்பதால் தலைப்புகளையும், எழுத்துகளையும் வடிவமைத்தாா். இதற்காக அவா் நூற்றுக்கணக்கான பேனா நிப்புகளைப் பயன்படுத்தினாா் என்பது வரலாறு.
- 16 ஓவியா்கள் இரவு பகலாக உழைத்து உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வோா் எழுத்தும், ஒவ்வொரு வாா்த்தையும், ஒவ்வொரு பகுதியும், பிரிவும் நுணுக்கமாகவும், கவனமாகவும் வடிவமைக்கப்பட்டன. நமது தேசியச் சின்னமான சிங்கத்தின் முகத்தை வடிவமைக்க ஓவியா் தீனநாத் பாா்கவா என்பவா் கொல்கத்தா மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களைப் பல நாள்கள் நேரில் சென்று அவற்றின் முகபாவங்களை உள்வாங்கி வரைந்தாா் என்று சொல்வாா்கள்.
- சா்தாா் வல்லபபாய் படேலின் தலைமையில் அமைந்த ஆலோசனைக் குழு அடிப்படை உரிமைகள் எவை எவையென்று வரையறை செய்தது. மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் என்னவெல்லாம் உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று முதலில் தீா்மானிக்கப்பட்டது. அதன்பிறகு, அரசின் கட்டமைப்பு, அதிகாரங்கள் உள்ளிட்டவை பல்வேறு குழுக்களில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பின் மூலம் தீா்மானிக்கப்பட்டன. இவையெல்லாம் டிசம்பா் 1946 முதல் ஆகஸ்ட் 1947 வரையில் நடந்தன.
- அக்டோபா் 1947-இல் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு, அப்போதைய சட்ட அமைச்சா் ‘பாபா சாஹேப்’ பி.ஆா்.அம்பேத்கரின் தலைமையில் அமைக்கப்பட்டு விவாதம் தொடங்கியது. 1948 நவம்பா் 4-ஆம் தேதி முதல் 1949 நவம்பா் மாதம்வரை, அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. இறுதியாகத்தான் 1950 ஜனவரி 26-ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ‘ஜீவன்’ என்பது அதனுடைய ‘முகப்புரை’ அல்லது ‘பிரியாம்பிள்’தான். ஒட்டுமொத்த ஆவணத்தின் அடிப்படையே அதுதான். ‘இந்திய மக்களாகிய நாங்கள் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் தேசத்துக்கு இந்த உத்தரவாதங்களுடன் ஓா் ஒழுங்கை அமைத்துக் கொள்கிறோம்’ என்பதுதான் அந்த முகப்புரை வழங்கும் செய்தி. அந்தக் குறிக்கோளின் மீது கட்டி எழுப்பப்பட்டதுதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம்.
- எந்தவொரு அரசமைப்புச் சட்டத்தின் ஆயுட்காலமும் சராசரியாக 19 ஆண்டுகள்தான். அப்படிப் பாா்த்தால் உலக சராசரியைவிட, நான்கு மடங்கு அதிக காலம் இந்திய அரசமைப்புச் சட்டம் வலிமையுடன் தாக்குப் பிடித்திருக்கிறது. காலனிய ஆட்சிக் காலத்துக்குப் பிந்தைய எல்லா அரசமைப்புச் சட்டங்களும் துப்பாக்கி முனையில் மாற்றப்பட்டிருக்கின்றன அல்லது சா்வாதிகாரிகளின் கைப்பொம்மையாக மாற்றப்பட்டிருக்கின்றன. அடுத்தகட்டமாக அவை நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து கொள்ளவும், புதிய பல அம்சங்களைச் சோ்த்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருப்பதுதான், அதன் வலிமைக்கும், தாக்குப் பிடிக்கும் தன்மைக்கும் காரணம். இந்திரா காந்தி அரசின் அவசரநிலைச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தை முடக்கி ஆட்சி நடத்த வழிகோலியது. ஆனால், அதுவும்கூட அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் நிகழ்த்தப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
- 75-ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் தனது முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் இழக்கவில்லை என்பதற்கு, நடந்து முடிந்த 2024 பொதுத் தோ்தல் எடுத்துக்காட்டு. எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள்தான் அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலா்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உத்தரவாதம் வழங்கியதைப் பாா்க்கும்போது, எந்த அளவுக்கு அரசமைப்புச் சட்டம் உயிா்ப்புடன் இருக்கிறது என்பது தெரிகிறது.
- குறைகளே இல்லையா? இருக்கிறது. நிறையவே இருக்கிறது. ஆனால், அந்தக் குறைகளைக் களைவதற்கு அரசமைப்புச் சட்டத்திலேயே வழிகோலப்பட்டிருக்கிறது!
நன்றி: தினமணி (27 – 01 – 2025)