வெற்றியா, சாதனை வெற்றியா என்பதுதான் கேள்வி! வயநாடு இடைத் தேர்தல் களம்
- இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தேசிய அளவில் கவனக்குவிப்பு பெறும் தொகுதிகளில் ஒன்றாக கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் உயர்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ராகுல் காந்தி வாக்குப் பதிவு முடிந்த பிறகு, உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி ரே பரேலி மக்களவைத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். அவர் வயநாடு மக்களவைத் தொகுதியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. புதன்கிழமை (நவ.13) வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு.
- எதிர்பார்த்தது போலவே, ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி. முதல்முறையாக அரசியல் களத்தில் பிரியங்கா காந்தி வதேரா நேரடியாக போட்டியிடுவதால், காங்கிரஸ் கட்சியினருக்கு மிகப் பெரிய கெüரவப் பிரச்னையாக வயநாடு இடைத்தேர்தல் மாறியிருக்கிறது.
- ஆபத்தான ஒன்பது கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து வயநாட்டை அடைய வேண்டும். அதைவிடக் கடினம் வயநாடு வாக்காளர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது. மிகப் பெரிய இயற்கைப் பேரிடரிலிருந்து மீண்டெழுந்திருக்கும் வயநாடு, இடைத்தேர்தல் காரணமாக உற்சாகத்துடன் உயிர்த்தெழுந்திருக்கிறது.
- விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸக்கு செல்வாக்குள்ள பகுதி வயநாடு. வனப் பகுதியான வயநாடு புரட்சிக்காரர்களின் மறைவிடமாகவும் இருந்த பகுதி. ஆனாலும்கூட, மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளால் வெற்றிபெற முடிந்ததில்லை. அதனால்தான், நேரு குடும்பத்தின் வாரிசுகள் தங்களது மக்களவைப் பிரவேசத்துக்கு வயநாட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
- ஏழு மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, கல்பட்டா, சட்டப்பேரவைத் தொகுதிகளும், கோழிக்கோடு மாவட்டத்தின் திருவம்பாடி, மலப்புரம் மாவட்டத்தின் ஏரநாடு, நிலம்பூர், வண்டூர் தொகுதிகளும் அடங்கியது வயநாடு மக்களவைத் தொகுதி. 2009-இல் உருவான இந்தத் தொகுதியில் நடந்த முதல் தேர்தலில் 1.54 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஐ.ஷாநவாஸ் வெற்றிபெற்றார்.
- 2019-இல் தனது அமேதி தொகுதியில் தோல்வி அடையக் கூடும் என்று பயந்த ராகுல் காந்தி, இரண்டாவது தொகுதியாக வயநாட்டைத் தேர்ந்தெடுத்தபோது அது தேசிய கவனத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில் மாநில வரலாற்றில் 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் ராகுல் காந்தி. 2024-இல் வாக்குகள் குறைந்தாலும்கூட, 3,64,422 வாக்கு வித்தயாசத்தில் வெற்றி பெற்றார்.
- மக்களவைத் தேர்தலில் தேல்வியடைந்தாலும்கூட, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மானந்தவாடி, திருவம்பாடி, நிலம்பூர் தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறை இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி களமிறக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஷாநவாஸிடம் 2014 தேர்தலில் 20,870 வாக்குகள் வித்தியாசத்தில்தான் சத்யன் மொகேரி தோல்வி அடைந்தார் என்பதை மறந்துவிட முடியாது.
- விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்ற காலத்தில் சத்யனின் தலைமையில் "கிஸôன் சபா' வயநாட்டில் பாதயாத்திரை நடத்தியதும், விவசாயிகளுக்குத் துணை நின்றதும் அடித்தட்டு மக்களால் எளிதில் மறந்துவிடக் கூடியவை அல்ல. 1987 முதல் 2001 வரை கேரள மாநில நாதாபுரம் எம்எல்ஏவாக இருந்த சத்யன் சிறந்த நாடாளுமன்றவாதியாக கருதப்படுபவரும்கூட.
- கடந்த ஏப்ரல் மாதம் வயநாட்டில் போட்டியிடும்போது "ஒரு நாளும் வயநாடு தொகுதியைக் கைவிட மாட்டேன்' என்று வாக்குறுதி அளித்த ராகுல் காந்தி, வாக்குப்பதிவு முடிந்தவுடன் உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். ரே பரேலி தொகுதியை தக்கவைத்துக் கொண்டு இந்தத் தொகுதியை ராஜிநாமா செய்ததை இடதுசாரிகளும், பாஜகவினரும் தங்களது பிரசாரத்தில் முன்வைக்கிறார்கள்.
- 2024-இல் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசம் 67,348 வாக்குகள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி, மக்கள் மத்தியில் நேரு குடும்பத்துக்கு எதிரான மனநிலை காணப்படுவதாகப் பிரசாரம் செய்கின்றனர். ஐந்து ஆண்டுகள் வயநாடு எம்.பி.யாக இருந்தபோது ராகுல் காந்தி தொகுதிக்குப் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை என்பதும் அவருக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு.
- 2024 தேர்தலில் பாஜக வேட்பாளரான மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் 1.41 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். கேரள அரசியலில் பாஜகவின் புதிய வியூகம் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் திருச்சூர் மக்களவைத் தொகுதியை வெற்றி பெற வழிகோலியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் சார்பு, கேரளத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் அதிருப்தியை பாஜக தனக்குச் சாதகமாக திருப்ப முயற்சிக்கிறது.
- பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் நவ்யா ஹரிதாஸ் மென்பொருள் பொறியாளர்; கோழிக்கோடு மாநகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர். அவரது கடுமையான உழைப்பும், பிரசாரமும், "நம்ம ஊர் பெண்' என்கிற தோற்றமும் ஆதரவைத் தேடித் தருவதுபோல வாக்குகளையும் பெற்றுத் தருமா? என்று சொல்ல முடியவில்லை.
- பிரியங்கா காந்தி வெற்றி பெறுவார் என்பதில் காங்கிரஸ் கட்சியினருக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ராகுல் காந்தி வாங்கிய வாக்குகளைவிடக் குறைவாக பெற்றாலோ, வாக்கு வித்தியாசம் குறைந்தாலோ, அதை மிகப் பெரிய ஏமாற்றமாக கருதுகிறார்கள்.
- ராகுல் காந்தியைப்போல வந்துபோகாமல், பிரியங்கா காந்தி நாள் கணக்காக வயநாடு தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்வது; தேசியத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் முதல்வர்கள் சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுக்கு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், சச்சின் பைலட் என்று பலரும் வரிசைகட்டி பிரசாரத்துக்கு வந்தது; கிராமம் கிராமமாக, வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டது இவையெல்லாம் ராகுல் காந்தியின் 2019 சாதனையை பிரியங்கா காந்தி முறியடிப்பதற்காக...
- வெற்றி பெறுவார் என்பது உறுதி. ராகுல் காந்தியின் சாதனையை முறியடிப்பாரா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை...
நன்றி: தினமணி (13 – 11 – 2024)