TNPSC Thervupettagam

வெற்றியை தரும் பொறுமை

October 3 , 2024 2 hrs 0 min 12 0

வெற்றியை தரும் பொறுமை

  • பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருந்தால், ஒருவரால் எதிலும் வெற்றி காண முடியும். இவற்றை அனைவரும் கடைபிடித்து அனைத்து தடைகளையும் முறியடிக்க வேண்டும். 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மக்காவில் பிறந்த நபிகளார் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தை அப்துல்லாவையும், தனது 6-ம் வயதில் தாய் ஆமினாவையும் இழந்திருந்தார்.
  • பாட்டனார் அப்துல் முத்தலிப், பெரியதந்தை அபூதாலிப் ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்தாலும், நபிகளார் தாய் தந்தையற்றவர்களின் கஷ்டத்தையும் மனவலியையும் தமது இளமையிலேயே நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் ஏழைகளுடனும், ஆதரவற்றவர்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களோடும், தனது உறவையும் உதவியையும் நெருக்கமாக்கிக் கொண்டார்.
  • 39-ம் வயது வரை மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்றிருந்த நபிகளார் ‘அஸ்ஸா திக்’ (உண்மையாளர்), ‘அல்அமீன்’ (நம்பிக்கை குரியவர்) ஆகிய சிறப்புப் பெயர்களால் போற்றப்பட்டார். தனது 40-வது வயதில் அவர் ‘இறைவன் ஒருவனே.. நான் அவரது தூதர்’ என்று மக்களுக்கு போதனை செய்தபோது, அவருடைய கொள்கையை முதலில் சிறிய அளவில் மக்கள் ஏற்றுக் கொண்ட போதிலும், பலர் அவரை மூர்க்கத்தனமாக எதிர்க்கத் தொடங்கினர்.
  • நபிகளாருக்குச் சொல்லொணா துயரத்தை தந்தனர். அவர் நடந்து சென்ற பாதையில் முற்களை பரப்பினர். உணவு தயாராகும் பானையில் கற்களை போட்டனர். அவரது தலையில் மண்ணை வாரி எறிந்தனர். தொழுகையின்போது அவரது முதுகில் ஒட்டகத்தின் பெருங்குடலைச் சுமத்தினர்.
  • ஓட ஓட அவர்மீது கற்களை வீசினர். அவரது கொள்கைகளை ஏற்றவர்களை நடுவீதியில் வைத்துக் கொடூரமாக கொன்றனர். நபிகளாரின் குடும்பத் தினர் அனைவரையும் ஊரைவிட்டே 3 ஆண்டுகள் விலக்கி வைத்தனர். மக்காவின் எல்லையில் உள்ளப் பள்ளத்தாக்கில் நபிகளாரின் குடும்பத்தினர் சரியான உணவின்றியும், மக்கள் தொடர்பின்றியும் சிரமப்பட வேண்டிய தாயிற்று.
  • இப்படி பல கொடுமைகளை 13 ஆண்டு காலம் பொறுமையுடன் சகித்து வந்த நபிகளார் தனது உயிருக்கு ஆபத்து என்கிற சூழலில் இறைவனின் ஆணைப்படி பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து தனது தாயின் ஊரான மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார். அங்கு சென்ற பின்னரும் நபிகளாரை மக்காவாசிகள் நிம்மதியாக இருக்கவிடவில்லை. அவர்களின் மீது போரை திணித்தனர்.
  • தனது சமூக மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு பல போர்களையும் நபிகளார் சந்தித்தார். அதன்பின் 9 ஆண்டுகள் கழிந்ததும் தனது பல்லாயிரக்கணக்கான தோழர்களுடன் மக்கா சென்று முற்றுகையிட்டு உயிர் சேதமின்றி தான் பிறந்த மக்கா மண்ணை வென்றெடுத்தார். நீண்டநாள் பகைவர்களையும் மன்னித்தார். மனிதனுக்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருக்குமானால் அவன் மகத்தான வெற்றியைப் பெறமுடியும் என்பதற்கு நபிகளாரின் இந்த வாழ்வியல் மிகச் சிறந்த சான்றாக உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories