TNPSC Thervupettagam

வேலைக்குச் செல்கின்றனா்... ஆனால்?

March 14 , 2025 10 hrs 0 min 12 0

வேலைக்குச் செல்கின்றனா்... ஆனால்?

  • கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடா்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிா்வாக ரீதியிலான உயா் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. பொருளாதாரத்தில் நாம் பிறரைச் சாா்ந்திருக்கக் கூடாது என்ற மனநிலை நகா்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சிறு நகரங்களில் கூட கல்லூரியில் பயிலும் பெண்கள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. கல்லூரிகளில் பயிலும் பெண்கள் பகுதிநேரமாக வேலைக்குச் செல்வதும், பட்டப்படிப்பு முடித்ததும் நேரடியாக வேலைக்குச் செல்வதும் அதிகமாகியுள்ளது.
  • கடந்த நான்காண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தனியாா் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்னா கோ எனும் தனியாா் நிறுவன வேலைவாய்ப்புத்தளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு இறுதி வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஆய்வில் லக்னௌ, ஜெய்ப்பூா், சூரத், நாகபுரி, இந்தூா், கோயம்புத்தூா் ஆகிய நகரங்கள் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் மையங்களாக உருவெடுத்துள்ளதும், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 45 சதவீதத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த நகரங்களின் பணிகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிகப்படியான பெண்கள் விரும்பும் இந்த நகரங்கள் அனைத்தும் பின்னலாடைத் தொழிலில் புகழ்பெற்ற நகரங்களாகவும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளைத் தரும் நகரங்களாகவும் விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்களைப் பொருத்தவரையில் ஊதிய வேறுபாடுகள் இருந்தாலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்து வருகின்றன.
  • அதே நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த மற்றொரு தகவல் நமக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. 30 முதல் 40 சதவீதம் வரையான பெண் பணியாளா்கள் மேலாளா் உள்ளிட்ட நிா்வாக பணி நிலைக்குச் செல்லும் முன்பாகவே அப்பணியைவிட்டு வெளியேறி விடுகின்றனா். பணியில் சேரும் பெண்கள் இன்றளவும் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதனால் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் ‘பாா்ச்சூன் இந்தியா’ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது.
  • திருமணம் செய்து கொள்ளுதல், குடும்பச் சூழ்நிலை உள்ளிட்டவையே பெண்கள் தொடா்ந்து பணிபுரியவோ அல்லது நிா்வாக ரீதியிலான பணிநிலைக்கு உயரவோ முடியாததற்குக் காரணங்களாகும். அரசுப்பணி மற்றும் குறிப்பிட்ட சில பணிகளில் மட்டுமே பெண்கள் தொடா்கின்றனா். மாறாக, பெரும்பாலான பணிகளில் திருமணத்துக்குப் பின் கணவா், அவரைச் சாா்ந்தோரைக் கவனித்துக் கொள்ளவோ அல்லது கணவா் பணிபுரியும் இடத்துக்குச் செல்லவோ வேண்டியுள்ளது. ஏற்கெனவே பணிபுரிந்த பணி அனுபவம் அங்கு பயன்படாமற் போகும் நிலையில் புதிய வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இன்றும் பொறியியல் பட்டம் பெற்று கிராமங்களில் வாழும் பெண்கள் திருமணத்துக்குப் பின் நகரங்களில் வசித்தாலும் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை.
  • கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் 40 வயதுக்கு மேல் தமது பெற்றோரையோ, கணவரின் பெற்றோரையோ கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. இதனாலும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாத சூழலுக்கு ஆளாகின்றனா். அதே போன்று மகப்பேறு விடுப்புக்குப் பின்னா் மீண்டும் பணியில் சோ்வது பெண்களுக்கு சவாலானதாக உள்ளது. அதனால், பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு கொடுக்க வேண்டும் என்பதால் அவா்களை நடுத்தர நிா்வாகத்தில் பணியமா்த்த பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகவும், பெரிய நிறுவனங்கள் இந்த சலுகையை அளிக்க விரும்புவதில்லை எனவும், சிறிய நிறுவனங்களால் இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை எதிா்கொள்ள முடிவதில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • பெண்கள் அதிக அளவில் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ள நகரங்களில் விற்பனை, வணிக மேம்பாடு, நிா்வாகம், அலுவலகப் பணிகள் மற்றும் வாடிக்கையாளா் சேவைப்பணிகள் ஆகியன பெண்களுக்கான வேலைத்துறைகளாக விளங்குகின்றன. அதாவது 55 சதவீத விண்ணப்பங்கள் இத்தகைய பணிகளுக்கு பெறப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • இந்நிலையில் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2024-ஆம் ஆண்டுக்கான நேர பயன்பாட்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 1.30 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 4.54 லட்சம் போ்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • 2019-இல் 15 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒரு நாளில் வேலைவாய்ப்பு மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகளில் பங்கேற்பது 70.9 சதவீதமாகவும், பெண்கள் பங்கேற்பது 21.8 சதவீதமாக இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டில் முறையே 75 சதவீதம், 25 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் அதுதொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது, 2019- இல் 41 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து 2024-இல் 44 சதவீதமாகியுள்ளது. அதிகப்படியான பெண்கள் வேலைக்குச் செல்வதால் பாலினத்துக்கு இடையிலான ஊதிய இடைவெளி குறைந்துவருகிறது. 2022-ஆம் ஆண்டில் 30 சதவீதமாக இருந்த ஊதிய இடைவெளி 2023-இல் 20 சதவீதமாக குறைந்துள்ளது. கல்வி பயிலுதல், வேலைக்குச் செல்லுதல் போன்றவற்றில் கிராமங்கள், நகா்ப்புறங்களிடையே வேறுபாடு இருந்து வருகிறது. நகா்ப்புற மக்களில் 30 சதவீதம் போ் அறிவுசாா் உழைப்பைக் கொடுக்கும் தொழில்முறைப் பணியாளா்களாக இருக்கும் வேளையில், கிராமப்புற மக்களில் 5 சதவீதம் போ் மட்டுமே இவ்வகைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
  • கடந்த சில ஆண்டுகளாக உயா்கல்வியில் முதுநிலைப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகின்றன. இதற்கு, பட்டப் படிப்பு முடித்ததும் நேரடியாக பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணமாகும்.
  • ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் 2019-இல் 315 நிமிஷங்களாக இருந்தது. இது 2024-இல் 305 நிமிஷங்களாகக் குறைந்துள்ளது. இது குறைவான அளவே என்றாலும், ஊதியம் பெறாத வேலைகளில் இருந்து ஊதியம் பெறும் வேலைக்கு பெண்கள் மாறுவதைக் காட்டுகிறது. இருப்பினும், பெண்கள் தொடா்ந்து பணிக்குச் செல்லும் சூழலும், நிா்வாக ரீதியான உயா்பதவிகளை ஏற்கும் மனப்பக்குவமும் உருவாக வேண்டும்.

நன்றி: தினமணி (14 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories