ஸ்வீடன் தரும் பாடம்!
- நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தொழில்நுட்ப நுணுக்கங்கள் புத்தெழில் பெற்று வருகின்றன. முக்கியமாக, கல்வித் துறையில் தொழில்நுட்பங்களின் அறிமுகம், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளி முதல் கல்லூரி வரையில் கல்வி கற்பதிலும், கற்பிப்பதிலும் நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. நவீன கல்வி முறையானது, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் பணியையும் எளிமைப்படுத்தியுள்ளது.
- அதைக் கருத்தில்கொண்டே, எண்ம வழிக் கல்வி கற்றலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
- முக்கியமாக, எண்மவழி கல்வி கற்றலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முன்னெடுப்பு பள்ளி-கல்லூரி மாணவர்களுக்குப் பெரும் பலனை அளிக்கும் என்றாலும், அதன் பின்விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
- கல்வி கற்றலில் புதுமைகளைப் புகுத்த முயன்ற ஸ்வீடன், அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக முற்றிலும் எண்மவழி பாடப்புத்தகங்களையும், இணையவழிக் கற்றலையும் கடந்த 2009-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
- நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்ற தொலைநோக்குடன் இத்திட்டத்தை ஸ்வீடன் நடைமுறைப்படுத்தியது. தொடக்கப்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கே கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டன. கற்றல், வீட்டுப்பாடம், தேர்வுகள் என அனைத்தையும் அக்கணினிகள் மூலமாகவே சிறார்கள் மேற்கொண்டனர். காகிதங்களில் எழுதத் தேவை ஏற்படாத நிலையே ஸ்வீடனின் பள்ளிகளில் காணப்பட்டது. எழுத்து வழித் தேர்வுகளும் கையடக்கக் கணினிகள் மூலமாகவே நடத்தப்பட்டன. கல்வி கற்பித்தலுக்கும் நவீன தொழில்நுட்பங்களையே ஆசிரியர்களும் பயன்படுத்தினர்.
- தொடக்கத்தில் இத்திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு காணப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வி கற்பதன் மூலமாக மாணவர்களை எதிர்காலத்துக்கு ஏற்றவர்களாக மாற்ற முடியும் என்ற ஸ்வீடன் அரசின் முன்முயற்சிக்குப் பெற்றோர் உள்ளிட்டோர் ஆதரவு நல்கினர். ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திட்டத்தை ஸ்வீடன் அரசு கைவிட்டுள்ளது
- தற்போது எண்மவழி பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக, அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களைப் பள்ளிகளில் அந்நாட்டு அரசு மீண்டும் கொண்டுவந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், எண்மவழி கல்வி கற்றலில் மாணவர்களின் கற்றல்திறன் வெகுவாகக் குறைந்துள்ளது என்பதே. முக்கியமாக, எழுத்துத் திறனிலும் பாடப்புத்தகங்களைக் கடந்து மற்ற புத்தகங்களை வாசிப்பதிலும் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் குறைந்திருப்பதை ஸ்வீடன் அரசு கண்டறிந்தது. அதையடுத்து, அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களின் கைகளில் மீண்டும் தவழத் தொடங்கியுள்ளன.
- இணையவழியாகக் கல்வி கற்றலில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. மாணவர்களின் கவனச்சிதறல், சமூக வலைதளங்களின் அதிகரித்த பயன்பாடு, இணையவழி விளையாட்டுகள் மீதான ஆர்வம், மற்ற மாணவர்களுடன் இணக்கமாக இல்லாமல் தனித்திருக்கும் சூழல், தொழில்நுட்பங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது, பெற்றோர்-ஆசிரியர்களை மதிக்காமல் இருத்தல் உள்ளிட்டவற்றோடு சமுதாயத்துக்கும் பெரும் அச்சுறுத்தல் காணப்படுகிறது.
- மேலும், தொழில்நுட்பக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், மாணவர்களின் கண்பார்வை பாதிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் ஆர்வம் குறைவதால், உடல் பருமன் அதிகரிப்பு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன; மாணவர்களின் சமூகம் சார்ந்த கண்ணோட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதுடன், அவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிப்புகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
- அனுபவத்தின் வாயிலாக இதை உணர்ந்துகொண்ட ஸ்வீடன் அரசு, புத்தகங்கள் வழியான பாரம்பரிய கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. அதே வேளையில், எண்மவழி கல்வி கற்றலுக்கு முற்றிலுமாக அந்நாட்டு அரசு தடை விதித்துவிடவில்லை. வழக்கமான கற்றலையும் எண்மவழி கற்றலையும் சரிவிகிதமாக மாணவர்களிடத்தில் கொண்டுசேர்க்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- ஸ்வீடனின் அனுபவத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். நம் நாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் வாயிலான கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் வேளையில், பாரம்பரிய வழியான கற்றலும் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.
- கல்வி கற்பிப்பதில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும், மாணவர்களை நல்வழிப்படுத்துவதிலும் அவர்களை அறிவுச்செல்வங்களாக விளங்கச் செய்வதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு என்றும் குறைந்துவிடக் கூடாது.
- நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கல்வித் துறையில் அதன் சாதக-பாதகங்களை விரிவாக ஆராய்ந்து, மாணவர்களின் உடல்நலமும், மனநலமும், கற்றல் திறனும் பாதிக்காத வகையில் எண்மவழி கற்றல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நன்றி: தினமணி (20 – 02 – 2025)