TNPSC Thervupettagam

‘ஆறாவது விரல்’ அவசியமா?

February 1 , 2025 6 hrs 0 min 14 0

‘ஆறாவது விரல்’ அவசியமா?

  • தலைப்பை வாசித்ததும் அரிதாகச் சிலரிடம் காணப்படும் ஆறாவது விரலை நினைத்துக்கொள்ள வேண்டாம். தினமும் பலரது விரலோடு விரலாக உறவாடும் சிகரெட்டைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். இந்தத் தொடரில் ‘சிகரெட் / பீடி புகைக்க வேண்டாம்; புகைபிடிப்பது இதயத் துக்கு ஆபத்து; மாரடைப்புக்கு அது வழிகாட்டும்’ என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.

என்ன காரணம்?

  • இன்றைக்கு இதயநோய்கள் குறித்து அதிகம் அச்சப்படுவதற்கு முக்கியக் காரணமே, இளம் வயதின ருக்கும் மாரடைப்பு வருகிறது என்பதுதான். இப்படி, இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கும், திடீர் மரணங்கள் ஏற்படுவதற்கும் ‘இதயத் துடிப்புக் கோளாறு’கள் (Arrhythmias) முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், இரண்டு சமூகக் காரணங்களை முக்கியமாகச் சொல் லலாம். ஒன்று, புகைபிடிப் பது. அடுத்தது, மது அருந்துவது. இந்த வாரம் புகைபிடிப்பதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பைப் பார்க்கலாம்.
  • மொத்த ஆரோக்கியமும் கெடும் உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிற ஒரு வஸ்து இருக்கிறது என்றால், அது சிகரெட்/பீடியில் இருக்கிற புகையிலைதான். புகையிலையில் 7,000க்கும் மேற்பட்ட நச்சுகள் இருக்கின்றன. அவற்றில் 350 நச்சுகள் மிகவும் ஆபத்தானவை. உதட்டில் தொடங்கி, வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை, கணையம் எனத் தூரப் பயணம் செய்து, இதயத்திலும் மூளையிலும் கொட்டகை போட்டு உட்கார்ந்து கொள்கிற மோசமான ரசாயனங்கள் இவை.
  • அதிலும், ‘நிகோட்டின்’ (Nicotine) எனும் நச்சு மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், சி.ஓ.பி.டி. (COPD), டி.ஏ.ஓ. (TAO), மலட்டுத்தன்மை, நினைவாற்றல் குறைபாடு, கைவிரல் நடுக்கம், கண் நோய்கள், குறைந்த எடையில் குழந்தைகள் பிறப்பது என 50க்கும் மேற்பட்ட நோய்களுக்குக் காரணகர்த்தா. உலகில் வருடத்துக்கு 80 லட்சம் பேரை சிகரெட் புகை மட்டுமே கொல்கிறது என்றால், இதன் பேராபத்துகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிகரெட் வேண்டுமா, கால் வேண்டுமா?

  • நம்மில் பலரும் புகைபிடிப்பதால் மாரடைப்பு வரும்; புற்றுநோய் பாதிக்கும் என்றுகூடத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், பலருக்குத் தெரியாத ஒரு நோய் கால்களைத் தாக்கும் ‘டி.ஏ.ஓ.’ (TAO – Thromboangiitis Obliterans). இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் நடப்பதற்குச் சிரமப்படுவார்கள்; போகப்போகச் சிறிது தூரம் நடந்தால்கூட, கெண்டைக் கால் வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து விடுவார்கள். இவர்களுக்கு நோய் கடுமையாகிவிட்டால், காலையே துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
  • நான் 1970களில் மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, பேராசிரியர் N.துரைராஜ் (ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்) வார்டில் இருக்கும் ‘டி.ஏ.ஓ.’ நோயாளிகளிடம், “உங்களுக்கு சிகரெட் வேண்டுமா? கால் வேண்டுமா?” என்று கேட்டு, அவர்களைச் சுற்றி நிற்கும் மாணவர் களாகிய எங்களுக்கும் சேர்த்து சிகரெட் கொண்டுவரும் கொடுமைகளை விளக்கியது என் நினைவு களில் பசுமையாக நிற்கிறது.
  • இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் தனித் தனி மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுபோல், புகை யிலையைப் பயன்படுத்துவதிலும் தனித் தனி வழிமுறைகளைக் காண முடிகிறது. தமிழ்நாட்டில் சிகரெட், பீடி, வெற்றிலை - புகையிலை, ராஜஸ்தானில் ‘குட்கா’, மற்ற வடமாநிலங்களில் ஜர்தா, பீடா, பான் எனப் பல்வேறு வேஷங்களில் புகையிலை மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இப்படி வேஷமிட்ட போதை வஸ்துகளுக்கு இன்றைய இளைஞர்கள்தான் அதிக அளவில் அடிமையாகி இருக்கின்றனர். இதன் விளைவாக, இளம் வயதி லேயே மாரடைப்பு வந்து மருத்துவமனைகளின் அவசரக் கதவுகளைத் தட்டுகின்றனர்.

நிகோட்டினும் மாரடைப்பும்:

  • இந்தியாவில் வருடந் தோறும் சுமார் 15 லட்சம் பேர் புகை பிடிப்பதா லேயே உயிரிழக்கின் றனர். இப்படி யான உயிரிழப்பில் மாரடைப்புக்குப் பெரும்பங்கு உண்டு. பயனாளிக்குப் புகைப் பழக்கம் நாள்படும்போது, நிகோட்டின் அவருடைய ரத்தக் குழாய்களைத் தடிக்கச் செய்கிறது. அப்போது அவற்றின் உள்விட்டம் சுருங்கி விடுகிறது. செல்லும் பாதை சுருங்கிவிட்டால், நெரிசல் அதிகமாகி, பயண வேகம் தடைபடும் அல்லவா? அப்படித்தான், சுருங்கிவிட்ட ரத்தக் குழாயில் ரத்தம் செல்வது குறைகிறது.
  • அதேநேரம், இந்த அசாதாரண ரத்தக் குழாய்க்குள் ரத்தத்தை உந்தித் தள்ள இதயமும் சிரமப்படுகிறது. இப்படி ஏற்படும் இரட்டைச் சுமையால், இதயம் தினமும் கதறுகிறது. அடுத்து, புகைப்பவரின் ரத்த அழுத்தத்தை நிகோட்டின் எகிற வைக்கிறது. இதனால், ரத்தக் குழாய்களில் உள் காயங்கள் ஏற்படுகின்றன. இந்த உள்காயங்களில் ரத்த உறைவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது மாரடைப்புக்குப் படி கட்டுகிறது.

சமூகக் குற்றம்:

  • இன்றைய இளைய தலை முறைக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகச் சுகாதார நிறுவனம், 1999ஆம் வருடத்தைப் புகைப்பதை நிறுத்துவதற்கான வருடமாக அறிவித்து, ‘புகைப்பதை நிறுத்தத் தேதி குறித்துவிட்டீர் களா?’ (Leave The Pack Behind) என்கிற விளம்பரத்தை எல்லா உலக நாடுகளிலும் பிரபலப்படுத்தியது. இது நடந்து கால் நூற்றாண்டுக் காலம் கடந்துவிட்டது. இம்மியளவுகூட இது பலன் தரவில்லை.
  • புகையிலை விஷயத்தில் நாம் பெரிதும் கவலைப்படுவதற்குக் காரணம், உலக அளவில், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான வர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில், நமக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றும் சேர்ந்தே வந்திருக்கிறது. அதாவது, கரோனா தொற்றுக் காலத்துக்குப் பிறகு, வளரிளம் பருவத்தினரிடமும் பெண்களிடமும் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்ப தாகவும், இந்தப் பழக்கம் பத்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்தால், இவர்களுக்குப் பத்து ஆண்டுகள் ஆயுள்காலம் குறைந்துவிடுகிற ஆபத்து இருப்ப தாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
  • சிகரெட் அல்லது பீடியிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை அதைப் பயன்படுத்துபவர் களுக்கு மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேர்த்தே ஆபத்தைக் கொண்டு வருகிறது. இம்மாதிரியான ஆபத்து களால் வருடத்துக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு நம் நாட்டுக்கு ஏற்படுகிறது. ஆகவே, இதை ஒரு சமூகக் குற்றமாகத்தான் பார்க்க வேண்டும். அதேநேரம், புகைப்பழக்கத்தைக் கைவிடுவது என்பது தனிமனித ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வும்கூட என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு முக்கியமான ஆராய்ச்சிகள்:

  • புகைப்பிடிப்பது ஆரோக்கியத் துக்கு ஆபத்தானது என்று சமூகத்துக்குச் சொல்ல வேண்டிய கடமை எல்லா மருத்துவர்களுக்கும் இருக்கிறது. ஆனால், சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய மருத்துவர்களில்கூடப் பலரும் புகை பிடிக்கும் போதைக்கு அடிமையாகி இருக்கிறார் கள் என்பதுதான் நமக்குக் கவலை அளிக்கிறது. மருத்துவர்களை வைத்தே ஓர் ஆராய்ச்சி நடத்தி, புகையிலை கொண்டு வரும் விபரீதங்களை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தியதை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
  • பிரிட்டனில், 1951லிருந்து 1991 வரை நாற்பது வருடங்கள் நடந்த நீண்ட கால ஆராய்ச்சி இது. 34,439 ஆங்கிலேய மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டார்கள். இவர்கள் அத்தனை பேரும் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 15 சிகரெட்டுகளாவது புகைக்கும் வழக்கம் கொண்ட சிகரெட் பிரியர்கள். 1951இல் ஆரோக்கியமாக இருந்த இந்த மருத்துவர்களை 1971இல் மறுபரிசோதனைக்கு அழைத்தபோது பத்தாயிரம் பேர் இறந்துபோயிருந்தனர்.
  • அடுத்த இருபது வருடங்களில் மேலும் பத்தாயிரம் பேர் இறந்து போனார்கள். இந்த இறப்பு எண்ணிக்கை, சிகரெட் புகைக்காதவர்களை வைத்துநடத்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சியில், இதே மாதிரியான கணக்கெடுப்பில் கிடைத்ததைவிட இரண்டு மடங்கு அதிகம். இப்போது சிகரெட் புகையின் விபரீதம் உங்களுக்குப் புரிந்திருக்கும். ‘சரி, டாக்டர்.
  • இத்தனை வருடங் கள் புகைபிடித்துவிட்டேன். இனிமேல் நிறுத்தி என்ன பயன்? பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்டது தானே?’ என்று சலிப்படைபவரா நீங்கள்? அப்படிச் சலிப்படைய வேண்டியது இல்லை. இப்போதும் காலம் கடந்துவிட வில்லை. எவரும், எந்த வயதிலும் புகைப் பதை நிறுத்தலாம். உங்களை ஆற்றுப்படுத்தும் வார்த்தைகள் இல்லை இவை. அறிவியல்ரீதியில் ஆதாரபூர்வமாகவே இதைச் சொல்கிறேன். அதற்கு இன்னோர் ஆராய்ச்சியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஐரோப்பிய நாடுகளில் நாற்பது:

  • வயதுக்கு மேற்பட்டவர் களில் சுமார் ஒன்பது லட்சம் பேர் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய இதயநல ஆய்விதழில் (European Heart Journal) வெளிவந்த இந்த ஆராய்ச்சியின் முடிவு என்னவென்றால், “நடுவயதில் சிகரெட் புகைப்பதை நிறுத்தி னாலும் ஆயுள் நீடிக்கும்.
  • முப்பது வயதுக்குள் சிகரெட் புகைப்பதை நிறுத்திய வர்களின் ஆயுளும் அதுவரை சிகரெட் புகைக் காதவர்களின் ஆயுளும் சமமாகவே இருக்கிறது. வயதான காலத்தில் நிறுத்தினாலும் இதய பாதிப்பு குறைந்து, அதற்குப் பிறகு ஐந்து வருடங்களுக்கு ஆயுள் நீடிக்கும். சிகரெட்டைத் தூக்கி எறிவது மாரடைப்பைத் தடுப்பதற்கு மூன்று மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்குச் சமம்”. சரி, புகைபிடிப்பதை நிறுத்தத் தயாராகிவிட்டீர்கள்தானே? உங்களுக்கு உதவ வருகிறது அடுத்த வாரக் கட்டுரை.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories