‘ரீல்ஸ்’ மோகம் எல்லை மீறலாமா?
- சமீபத்தில் இளைஞர் ஒருவர், ரயில் படுக்கையை கத்தியால் கிழித்து, அவற்றை ஜன்னல் வழியாக வீசி எறியும் காட்சியை ‘ரீல்ஸ்’ ஆக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.
- கன்னியாகுமரியில் இளைஞர்கள் சிலர் தாங்கள் பைக்கில் சாகசம் செய்வதை காணொலியாக எடுத்துத் தரும்படி அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரை கேட்டுள்ளனர். அவரும் காணொலி பதிவு செய்யும்போது ஆர்வமிகுதியால் சாலையின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதுபோன்று நெடுஞ்சாலைகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்டபடியே இளைஞர்கள் ‘ரீல்ஸ்’ எடுக்கும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவங்கள் அடிக்கடி பதிவாகின்றன. சாகசம் செய்யும் முயற்சியில் ரயில் வரும்போது அதன் முன்பாக நின்று ‘ரீல்ஸ்’ எடுத்து விபத்தில் சிக்குகின்றனர். உத்தரபிரதேசத்தில் நேற்று ஒரு இளைஞர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து அதை ‘ஸ்லோ மோஷன்’ மூலம் காட்டும் முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவில் கார் ஓட்டத் தெரியாத ஒரு பெண், காரை ‘ரிவர்ஸ்’ எடுப்பதை காணொலியாக பதிவு செய்ய முயற்சிக்கும்போது, பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததில் கார் பின்னோக்கி வேகமாக சென்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இப்படி இளைஞர்களின் ‘சாகச’ சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும், நாம் வெளியிடும் காணொலிகளை லட்சக்கணக்கானோர் பார்த்து ‘லைக்ஸ்’களை அள்ள வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் தனலாகக் கொதிக்கிறது.
- இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு கருவியாக சமூக வலைதளங்கள் உருவெடுத்துள்ளன. இதை லட்சக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு தரப்பினர் ஆபத்தான காரியங்களில், குறிப்பாக உயிரைப் பணயம் வைத்து ‘ரீல்ஸ்’களை உருவாக்க முயலும்போது சில சம்பவங்கள் விரும்பத் தகாதவையாக மாறி விடுகின்றன. பொழுதுபோக்குக்காக, மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக ‘ரீல்ஸ்’களை உருவாக்கி வெளியிடுவது நல்ல விஷயம் என்றாலும் அதற்கு ஒரு எல்லை உண்டு. உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு இளைஞர்கள் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர வேண்டும்.
- சக இளைஞர்கள் சமூக வலைதளங்களில் காணொலிகளைப் பதிவிடும்போது அதைப் பார்க்கும் மற்ற இளைஞர்களும் அவர்களை மிஞ்சி காணொலிகளை வெளியிட முயல்கின்றனர். நடைபெற்று வரும் தொடர் சம்பவங்கள் இதுபோன்ற போட்டி மனப்பான்மைக்கு முடிவு கட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. விபரீத ‘ரீல்ஸ்’களை வெளியிடு வோருக்கு கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்தும், அவர்கள் மற்றவர்களையும் அதுபோல செய்வதற்கு தூண்டுகோலாக இருப்பதைக் காரணம் காட்டி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.
- இதுபோன்ற ‘ரீல்ஸ்’களை வெளியிடாமல் தடை செய்வது குறித்தும், விதிமுறைகளை உருவாக்கவும் சமூக வலைதள நிறுவனங்களுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்போது தான் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் போட்டி மனப்பான்மையில் விபரீத ‘ரீல்ஸ்’ எடுக்கும் நடைமுறை முடிவுக்கு வரும்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2025)