- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிமன்றத்துக்கு வந்தாலும்கூட, தலித்துகள் அரசியல் தளத்தில் எப்படி அழுத்தப்படுகிறார்கள் என்பதைப் பேசுகிறது மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் தலித் தலைவர் ஒருவர் சட்டமன்றத்தின் சபாநாயகராக அமரும் காட்சி ரசிகர்களால் பேசப்படுகிறது. முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழ்நாட்டில் அப்படி ஒரு தலித் தலைவர் சபாநாயகராக அமர்ந்தார். தமிழ்நாட்டின் முதல் தலித் சபாநாயகர் மட்டும் இல்லை; இந்தியாவின் முதல் மேயர் எனும் பெருமைக்கு உரியவரும் அவரே: ஜெ.சிவசண்முகம் பிள்ளை (1901 - 1975).
யார் இந்த சிவசண்முகம்?
- தன்னுடைய 31வது வயதில் சென்னை மாநகராட்சியில் உறுப்பினரானார் சிவசண்முகம் பிள்ளை. அடுத்து, 1937 நவம்பர் 9இல் சத்தியமூர்த்தி முன்மொழிந்த தீர்மானத்தின் அடிப்படையில், 36வது வயதில், சிவசண்முகம் இந்தியாவில் முதல் தலித் மேயரானார். அப்போது அவரை வாழ்த்தி காந்தி செய்தி அனுப்பினார். அடிப்படையில் சிவசண்முகம் பிள்ளை ஒரு காந்தியர். 2012இல் தமிழ்நாடு சபாநாயகராக ஜெயலலிதாவால் முன்னிறுத்தப் பட்ட தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ‘தி இந்து’ பத்திரிகை ‘ஏன் அன்சங் ஹீரோ ஆஃப் டிஎன் லெஜிஸ்லேச்சர்’ (An Unsung Hero of TN Legislature) என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் சிவசண்முகம் தொடர்பான விரிவான தகவல்களை எழுதியிருந்தார் டி.ராமகிருஷ்ணன்.
- சர் தேஜ் பகதூர் சப்ரூ தலைமையில் 1944இல் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட வரைவுக்கான கமிட்டி ஒன்று பொது வாக்காளர்களையும் உள்ளடக்கிய ரிசர்வ்டு தொகுதியா, தனி தொகுதியா என்று கேட்டறிந்தபோது சிவசண்முகம் “சட்டங்களைவிட முக்கியமானது சாதி இந்துக்களின் மனமாற்றம்” என்றாராம்.
- இதில் 1946 தேர்தலுக்குப் பின் சிவசண்முகம் முதல் தலித் சபாநாயகரானார். 1951இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலுக்குப் பின் ராஜாஜி முதல் அமைச்சரானபோது சிவசண்முகம் மீண்டும் சபாநாயகரானார். 10 வருடங்கள் தொடர்ந்து சபாநாயகராக இருந்த பின் மாநிலங்களவைக்கு 1962இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ராஜாஜியின் பகுதிநேரக் கல்வித் திட்டமானது சபையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது 138 வாக்குகள் ஆதரித்தும், 138 வாக்குகள் எதிர்த்தும் சமநிலையில் இருந்தபோது தன்னுடைய சபாநாயகரின் வாக்கினை எதிர் வாக்களிப்போடு சிவசண்முகம் பிள்ளை சேர்த்ததால் திட்ட மசோதா தோற்றதாக ஒரு குறிப்பு உண்டு.
காங்கிரஸின் தலித் தலைமை
- சிவசண்முகம் பிள்ளை, இளையபெருமாள், கக்கன் போன்றவர்கள் காங்கிரஸில் நேரடியாகப் பங்கெடுத்தவர்கள்; காங்கிரஸில் உள்ள தலித் தலைமை பாரம்பரியத்துக்கு முன்னோடிகள். எனக்குப் பொதுவாக இவர்களை காந்தியர்கள் என்று குறிப்பதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், காங்கிரஸில் இவர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடிந்ததற்கான காரணம் காந்தி காங்கிரஸுக்கு காட்டிய வழி என்றே சொல்வேன்.
- காந்தியைச் சந்தித்தபோது, “தலித்துகள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தால் காங்கிரஸின் எல்லாக் கொள்கைகளையும் ஆதரிக்க வேண்டுமா?” என்று கேட்டார் எம்.சி.ராஜா. அதற்கு காந்தி சொன்ன பதில் இது: “தேவையில்லை. தங்கள் நலனுக்கு முரணான எந்தக் காங்கிரஸ் கொள்கையையும் காங்கிரஸில் இருப்பதாலேயே அரிஜனர்கள் ஆதரிக்கத் தேவையில்லை!”
- இதை சத்தியமூர்த்தி மூலம் அறிக்கையாகவே வெளியிட வைத்தார் காந்தி. இன்று இம்மாதிரி தலித் ஆளுமைகளின் நினைவுக் கூரலில், நிகழ்ச்சிப் பதாகைகள் அல்லது போஸ்டர்களில், காந்தியும் காங்கிரஸும் பின்னுக்குத் தள்ளப்படுவதோடு சம்பந்தமே இல்லாத வேறு தமிழ்நாட்டுத் தலைவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். இங்கே ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்கள் விதிவிலக்காக காந்திய இயக்கங்களின் பணியை காந்தியர்கள் என்று அறியப் படுகிறவர்களைவிட அதிகமாக ஆராய்ந்து எழுதவும் செய்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
- அடுத்ததாக ராஜாஜி. சமீபத்தில் ஒரு புகைப்படம் என்னைத் திடுக்கிட வைத்தது. ராஜாஜியின் தோளில் கைப்போட்டபடி இருக்கும் அம்பேத்கர் புகைப்படத்தில் ‘தொடாதே என்ற ராஜாஜியின் தோளில் அம்பேத்கர் கைப் போட்டிருக்கிறார்’ என்ற படவரி சேர்க்கப்பட்ட வாட்ஸப் படம். இது அபத்தம்.
- இளையபெருமாள் 1951இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரை அம்பேத்கருக்கு அறிமுகம் செய்தவர் ராஜாஜி. சகஜானந்தர் பள்ளிக்குப் பல ஏக்கர் நிலம் அளித்தவர் ராஜாஜி. ரெட்டமலை சீனிவாசனுக்கு ‘திராவிட மணி’ என்ற பட்டம் அவர் 80ஆவது ஆண்டு நிறைவு செய்ததை ஒட்டி நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அவ்விழாவில் திரு.வி.க தலைமையில் வாழ்த்துரை வழங்கியவர் ராஜாஜி.
- நேர்மையாக விமர்சிக்க ராஜாஜி சார்ந்து நிறைய விஷயங்கள் உண்டு; ஆனால், இது மோசம்.
மறக்கப்பட்ட ஆளுமை
- சிவசண்முகத்தை ராஜாஜி சபாநாயகராக்கினார் என்று சொல்ல முடியாது; ஏனென்றால், சிவ சண்முகம் ஏற்கெனவே சபாநாயகராக இருந்தார். அதேசமயம், ராஜாஜிக்கு பங்கே இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆம், இப்படித்தான் வரலாற்றை எழுத முடியும்.
- சிவசண்முகம் பிள்ளை ஒரு மறக்கப்பட்ட பேராளுமை. அதிக தகவல்கள் இல்லாத நிலையில் இதனைகூட அவர் வகித்தப் பதவிகள் வாயிலாகத் தான் நாம் சொல்ல வேண்டி இருக்கிறது. சிவ சண்முகம் எம்.சி.ராஜாவின் சட்டசபை உரைகளைத் தொகுத்தவர், ஆதி திராவிடர் வரலாறு தொடர்பாக எழுதியவர், முதுகலைப் பட்டம் பெற்றவர்.
- சிவசண்முகம், இளையபெருமாள் போன்றவர்கள் சுய ஊக்கத்தினாலேயே பெரும்பாலும் செயலாற்றினார்கள் எனலாம். அச்செயல்பாடுகளுக்கு காங்கிரஸில் ஓர் இடம் இருந்தது என்றும் சொல்லலாம்.
நன்றி: அருஞ்சொல் (30 – 06 – 2023)