TNPSC Thervupettagam

அசாஞ்சே

April 16 , 2019 2096 days 1294 0
  • விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரும், அதன் ஆசிரியர் என்று தன்னை வர்ணித்துக் கொள்பவருமான ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் காவல் துறையினரால் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
அசாஞ்சே
  • ஈக்வடார் அரசு தனது தூதரகத்தில் அவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக அளித்துவந்த அடைக்கலம் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகள் அவரை பிரிட்டன் காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஜூலியன் அசாஞ்சேயின் கைது சர்வதேச அளவில் விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
  • அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை அமெரிக்க ராணுவ கணினியிலிருந்து திருட்டுத்தனமாகப் பெற்று வெளியிட்டமைக்காக அவர் மீது அமெரிக்காவில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணினி நிபுணரான அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கி, அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளின் ரகசியங்களையும், தவறுகளையும் அம்பலப்படுத்த முற்பட்டார்.
பாதை
  • 2010-இல் அவரால் வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸ் ஆவணங்கள் உலகம் முழுவதும் மிகப் பெரிய பரபரப்பையும், விவாதத்தையும் எழுப்பின. அதற்கிடையே ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். 2012-ஆம் ஆண்டு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, ஜாமீனும் வழங்கப்பட்டது.
  • பாலியல் வழக்கு தொடர்பாக தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்தக்கூடாது என்கிற அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
  • ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த அசாஞ்சே, தூதரகம் விதித்திருந்த நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. தனக்கு அடிப்படை உரிமைகள் தூதரகத்தில் மறுக்கப்படுவதாக ஜூலியன் அசாஞ்சே எழுப்பிய குற்றச்சாட்டு தூதரக அதிகாரிகளையும், ஈக்வடார் அரசையும் ஆத்திரப்படுத்தியதில் ஆச்சரியமில்லை.
  • மத்திய லண்டன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஜூலியன் அசாஞ்சே, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
  • 2010-இல் ஜூலியன் அசாஞ்சேயால் வெளியிடப்பட்ட விக்கி லீக்ஸ் ஆவணங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பானவை. அமெரிக்க அரசின் ரகசிய கண்காணிப்பு, ராஜாங்க ரீதியிலான தகவல் பரிமாற்றம், பொது மக்கள் - ராணுவத்தினர் ஆகியோரின் பாதுகாப்பு குறித்த அமெரிக்க நிர்வாகத்தின் அக்கறையின்மை, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய போர்களின் பின்னணியில் உள்ள தகவல்கள், அமெரிக்கா எப்படி தனது நட்பு நாடுகளையே உளவு பார்க்கிறது என்பது தொடர்பான ஆவணங்கள் போன்றவையெல்லாம் ஜூலியன் அசாஞ்சேயால் விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் பொதுவெளியில் கசியவிடப்பட்டன.
2016
  • 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது விக்கிலீக்ஸ் சில ஆவணங்களை வெளியிட்டது. அதிபர் பதவி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டன. ஹிலாரி கிளிண்டனாலும், ஜனநாயகக் கட்சியாலும் ஜூலியன் அசாஞ்சே ரஷியாவின் பின் துணையுடன் எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
  • அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை கணினியிலிருந்து திருட்டுத்தனமாக உள்நுழைந்து எடுத்து வெளியிட்டமைக்காக அவர் தண்டிக்கப்படலாம். ஆனால், அமெரிக்க ராணுவ உளவுத் துறையில் வேலை பார்த்த செல்ஸி மேனிங் என்பவர் மூலம் அந்தத் தகவல்களை விக்கிலீக்ஸ் பெற்றிருப்பதால், அசாஞ்சேவை முதல் குற்றவாளியாக்க முடியாது.
உண்மை
  • மேலும் போர்க்குற்றங்கள், அத்துமீறிய அக்கிரமங்கள் ஆகியவை குறித்த ஆவணங்கள் என்பதால் அவற்றைப் பொதுவெளியில் கசியவிட்டது தவறல்ல என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆவணங்கள் திருட்டுத்தனமாகப் பெறப்பட்டது, உண்மையை வெளிக்கொணர்வதற்காகக் கையாளப்பட்ட முயற்சி என்பதால், பத்திரிகைச் சுதந்திரத்தின் போர்வையில் அதை அணுகும் வாய்ப்பு ஜூலியன் அசாஞ்சேவுக்கு உண்டு.
  • ரஷிய உளவுத் துறையின் உதவியுடன் விக்கிலீக்ஸின் செயல்பாடுகளைச் சம்பந்தப்படுத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், அமெரிக்க அரசின் மீதும், ராணுவத்தின் மீதும் மக்களது அவநம்பிக்கையை விக்கிலீக்ஸ் ஆவணக் கசிவுகள் ஏற்படுத்தின என்பதை மறுக்க முடியாது.
  • அதன் மூலம் உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றைச் சிதைத்து, புதிய தேசிய வாதத்துக்கு அசாஞ்சே வழிகோலினார் என்று பலரும் கருதுகிறார்கள். தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, "நான் விக்கிலீக்ûஸ ஆதரிக்கிறேன்' என்று வெளிப்படையாகவே டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைக் குறிப்பிட வேண்டும். தனது ஆதரவாளர்களுக்கு அசாஞ்சே, இணைய காலகட்டத்தின் நவீன மலைக்கள்ளனாகக் காட்சியளிக்கிறார்.
  • ஆனால், ஆட்சியாளர்களுக்கு நிர்வாகக் கட்டமைப்பை குலைத்து ஆட்சி முறையின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் தீய சக்தியாக காட்சியளிக்கிறார். அசாஞ்சேவை ஊடகவியலாளராக ஏற்றுக்கொள்ள முடியுமா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நிர்வாக ரகசியத்தன்மையை அகற்றி வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த விரும்பும் இடித்துரைப்பாளர்களுக்கு ஜூலியன் அசாஞ்சேயின் கைது மிகப் பெரிய பின்னடைவு.
வெளிப்படைத்தன்மை
  • உலகமயச் சூழலில் வெளிப்படைத்தன்மைக்கான போராளிகளுக்குப் பாதுகாப்பும் அடைக்கலமும் கிடையாது என்பதைத்தான் அசாஞ்சேயின் கைது எடுத்துரைக்கிறது.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories