TNPSC Thervupettagam

அசாம் அமைதி ஒப்பந்தம் நம்பிக்கையூட்டும் நகர்வு

January 5 , 2024 372 days 283 0
  • உல்ஃபா அமைப்பின் பேச்சுவார்த்தைக்கு ஆதரவான பிரிவு, மத்திய அரசு, அசாம் மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அசாமில் அமைதி திரும்புவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் முன்னிலையில் உல்ஃபா அமைப்பின் பேச்சுவார்த்தைக்கு ஆதரவான பிரிவின் தலைவர் அரவிந்த ராஜ்கோவா உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
  • அசாமைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி, 1970களின் இறுதியில் உருவான உல்ஃபா அமைப்பு, ஆரம்பத்தில் பூர்வகுடி மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. எனினும், பின்னாள்களில் கட்டற்ற வன்முறை, பிணைத்தொகை கோரி ஆட்களைக் கடத்துவது எனச் செயல்பட்டதால் மக்களின் தார்மிக ஆதரவை இழந்தது. கூடவே, அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டது. தனிநாடு கோரிக்கையை இன்னமும் கைவிடாத உல்ஃபா (இண்டிபென்டன்ட்) பிரிவு தற்போது பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. அதன் தலைவர் பரேஷ் பருவா தற்போது வடகிழக்கு மயன்மாரில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
  • இந்நிலையில், டிசம்பர் 29 அன்று டெல்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, உல்ஃபா அமைப்பினர் வன்முறையைக் கைவிடுவது, ஆயுதங்களை ஒப்படைப்பது, முகாம்களைக் காலிசெய்துவிட்டு வெளியேறுவது, அமைப்பைக் கலைத்துவிட்டு ஜனநாயக வழிமுறைகளில் பங்கேற்பது எனப் பல்வேறு அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.
  • ஓரிரு வாரங்களில் உல்ஃபா அமைப்பு கலைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அசாமின் ஒருமைப்பாடு காக்கப்படும் என்று மத்திய அரசும் அசாம் அரசும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், அசாம் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அரவிந்த ராஜ்கோவா நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார். அரசிடமிருந்து எதிர்பார்த்ததற்கு மேலாகப் பலன்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
  • எனினும், இது மக்களவைத் தேர்தலுக்காக பாஜக முன்னெடுக்கும் அரசியல் தந்திரம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. முந்தைய ஒப்பந்தங்களில் இடம்பெற்ற அம்சங்களே வேறு தொனியில் மீண்டும் இடம்பெற்றிருக்கின்றன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொருளாதாரப் பலன்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், அசாமில் நிலவும் சமூகப் பிரச்சினைகளுக்கு இதில் தீர்வுகள் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அரசியல் தீர்வுக்கு வழிவகுக்காத இந்த ஒப்பந்தம் தலைக்குனிவை ஏற்படுத்தியிருப்பதாக உல்ஃபா (இண்டிபென்டன்ட்) பிரிவின் தலைவரான பரேஷ் பருவா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
  • அதேவேளையில், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனக்கு அழைப்பு விடுத்ததையும் பரேஷ் பருவா ஒப்புக்கொண்டிருக்கிறார். எனில், இந்தப் பிரச்சினையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தீர்வுக்கு அசாம் முதல்வர் இயன்றவரையில் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது.
  • வன்முறைச் சம்பவங்களுக்குப் பேர்போன வட கிழக்குப் பிராந்தியத்தில் இப்படியான அமைதி முயற்சிகள் தொடர வேண்டும். குறிப்பாக, 2023 மே மாதத்தில் மணிப்பூரில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்கள் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. அந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்க மத்திய, மணிப்பூர் மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories