TNPSC Thervupettagam

அசாம்: குடியுரிமையற்ற 19 லட்சம் பேரின் கதி என்ன?

September 3 , 2019 1894 days 1020 0
  • அசாம் மாநிலத்திலிருந்து மத்திய அரசு தொடங்கியிருக்கும் முடிவற்ற அபாய விளையாட்டு வடகிழக்கு மாநிலங்களைத் தாண்டியும் தீராத பின்விளைவுகளை உண்டாக்கும் என்று தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன்பு இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட ‘தேசியக் குடியுரிமைப் பதிவேடு’ (என்ஆர்சி) தன்னிடம் குடியுரிமை கோரி மனுசெய்த 3.3 கோடிப் பேரில் 3.11 பேருக்கு இடம் அளித்திருக்கிறது; 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இதில் விடுபட்டுள்ளன. அவர்களுடைய கதி என்னவாகும் என்ற கேள்வி அசாமை மட்டுமல்லாது, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொரு மனிதரையும் கலங்கடிக்கும் கேள்வியாக மாறியிருக்கிறது.
  • அசாமின் சோனித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய்ரா பேகம் அறுபதுகளில் உள்ள மூதாட்டி. தேசிய வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை என்ற தகவல் அவருடைய காதில் விழுந்த உளைச்சலில் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். அதே அறுபதுகளில் உள்ள இன்னொரு பெண்ணின் துயரம் வேறு வடிவில் அவரைச் சந்தித்தது. அவருடைய பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது; ஆனால், அவருடைய பிள்ளைகளின் பெயர்கள் பட்டியலில் இல்லை. அவ்வளவு ஏன்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான முகம்மது சனாவுல்லா, சட்டமன்ற உறுப்பினரான அனந்தகுமார் மாலோ ஆகியோரின் பெயர்களும்கூடப் பதிவேட்டில் இல்லை. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கதையுடன் காத்திருக்கின்றனர். ஒரே கேள்வி, இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? ஒரே பதில், அது யாருக்கும் தெரியாது; இன்றுவரை அசாம் அரசுக்கும்கூட.
பட்டியல் உருவான பின்னணி
  • வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்த அளவில் ‘பூர்வகுடிகள் எதிர் வந்தேறிகள் அரசியல்’ அங்கு மிகவும் சூடு மிக்கது. வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் இந்த அரசியல் மிகுந்த செல்வாக்கு செலுத்துகிறது. அவர்களைப் பொறுத்த அளவில் வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் மட்டும் வந்தேறிகள் அல்ல; வெளிமாநிலத்தினரும், இன்னும் சொல்லப்போனால் அந்த மண்ணைச் சாராத பழங்குடி இனக்குழுக்களும்கூட வந்தேறிகள்தான்.
  • அசாமில் குடியேறிய சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் காண்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பட்டியல் இது. பிரிட்டிஷார் காலகட்டத்தில் அசாம் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்ய பிஹார், வங்காளம் என்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டது முதலாக அசாமில் ‘வெளியார்’ எண்ணிக்கை அதிகரிக்கலானது. தேசப் பிரிவினையும் அதன் பிறகு வங்கதேச விடுதலைப் போராட்ட காலகட்டமும் இதை மேலும் அதிகரித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டில் வங்கதேச விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த அன்றைய இந்திய அரசு வங்கதேச அகதிகளை அந்நியர்களாகக் கருதவில்லை; இன்னொரு காரணமும் இதன் பின்னணியில் இருந்தது; இந்திய விடுதலைக்கு முன்புவரை அவர்களும் இந்தியர்களாக இருந்தவர்கள்.
    பிற்பாடு, இந்த அரசியல் பார்வை மெல்ல மாற ஆரம்பித்தது. பழங்குடி இனக் குழுக்கள் அவரவர் மாநிலங்களில் அதிகாரங்கள் முழுமையாகத் தங்கள் கையில் வர வேண்டும் என்று போட்டியிடத் தொடங்கிய நிலையில், தேசியக் கட்சிகளுக்கு எதிராக இந்தக் குழுக்களை ஒருங்கிணைத்து பிராந்திய சக்திகள் வலுப் பெற ‘உள்ளூர் எதிர் வந்தேறி அரசியல்’ முன்னெடுக்கப்பட்டது.
  • அசாமின் முக்கியமான கட்சியான அசாம் கண பரிஷத் அப்படி பலப்படுத்திக்கொண்டதுதான். இந்த வந்தேறிகளில் பிரதானமானவர்களான வங்கதேசிகளில் கணிசமானோர் முஸ்லிம்களாகவும் இருக்க வெறுப்பு இரட்டை வெறுப்பு ஆக்கப்பட்டது. ‘வங்கதேசக் குடியேறிகளால் அசாம் பூர்வகுடிகள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும்’ என்றும் ‘இப்படியே போனால் வங்கதேச முஸ்லிம்தான் எதிர்காலத்தில் அசாம் முதல்வர் ஆவார்’ என்றும்கூடப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூகங்களிடம் கொந்தளிப்பை உண்டாக்கிய இந்த விவகாரத்தை அன்றைய மத்திய – மாநில அரசாங்கங்கள் எதுவுமே முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவில்லை என்ற சூழலில்தான், ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை அசாம் மக்களிடையே தொடர்ந்து செல்வாக்கு பெற்றுவந்தது.
பட்டியல் உருவாக்கத்தின் குளறுபடிகள்
  • தாங்கள் குடிமக்கள் என்பதைத் தீர்ப்பாயங்கள் முன் நிரூபிக்கும் பொறுப்பு மக்களிடம் விடப்பட்டது. நீதித் துறையின் அதிகாரங்களைக் கொண்டிருந்தபோதும், நீதிபதிகளைக் கொண்டவை அல்ல இந்தத் தீர்ப்பாயங்கள்; நடைமுறையிலும் அவை நீதிமன்றம்போலச் செயல்படவில்லை. சமர்ப்பிக்கப்படும் அரசு ஆவணங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால்கூட, அதற்கும் பாதிக்கப்பட்டவர்களையே பொறுப்பாளியாக்கின இந்தத் தீர்ப்பாயங்கள். தாங்கள் குடிமக்கள்தான் என்பதை நிரூபிப்பதற்காக வாழ்நாள் சேமிப்பையெல்லாம் செலவழித்து ஆவணங்களைத் திரட்டிவந்த மக்களின் ஆவணங்களில் விளக்கங்கள் ஏதும் தேவைப்படினும்கூட அவர்களை நேரில் சந்தித்து அவை விளக்கம் கோரவில்லை. ஆக, இந்த வகையான பட்டியல் தயாரிப்பு முடிவே மோசம் என்றால், அந்தப் பட்டியல் தயாரிப்புப் பணி அதைக் காட்டிலும் மோசமாக இருந்தது. இந்திய ராணுவத்தில் சேவையாற்றியவரையே குடிமகன் அல்ல என்று அலைக்கழித்த அவலம் அரங்கேறியதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இந்த விஷயங்கள் எல்லாம் ஊடகங்களில் வெளியானாலும் அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏதும் தெரியவில்லை. இந்நிலையில்தான், இறுதிப் பட்டியல் வெளியானது.
அடுத்தது என்ன?
  • இவர்கள் மீண்டும் தங்களைக் ‘குடிமக்கள்’ என்று நிரூபிக்க சில வாய்ப்புகளை வழங்குவதாக அரசு சொல்கிறது. அதாவது, பெயர்கள் விடுபட்டவர்கள் தங்களுடைய பெயர்களைப் பதிவேட்டில் சேர்க்க விண்ணப்பிக்க 120 நாட்கள் (4 மாதம்) அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அந்நியர்கள் நடுவர் தீர்ப்பாயத்தில் (எஃப்.டி.) தங்களுடைய மனுக்களை அளிக்க வேண்டும். அசாம் குடிமகன் என்பதற்கு அவர்கள் தரும் ஆதாரங்கள் அங்கே பரிசீலிக்கப்படும். இந்த நடுவர் தீர்ப்பாயமும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தால் அடுத்து, மாநில உயர் நீதிமன்றத்திலும் அடுத்து உச்ச நீதிமன்றத்திலும் அவர்கள் முறையிடலாம். சரி, அப்போதும் நிரூபிக்க இயலாதவர்களின் கதி என்ன?
  • தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறாதவர்கள், அந்நியர்கள் நடுவர் மன்றத்தாலும் குடிமக்களாக ஏற்கப்படாவிட்டால் அவர்கள் கைதுசெய்யப்படவும், தடுப்புக் காவல் முகாம்களுக்கு அனுப்பப்படவும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி அவர்களுடைய சொந்த நாட்டுக்கு – அதாவது வங்கதேசத்துக்கு – அவர்கள் திரும்ப அனுப்பப்படும் வாய்ப்பு இருக்கிறதா? உண்மையாகவே தெரியவில்லை!
  • ஏனென்றால், அந்நியர்கள் என்று அசாமில் அடையாளம் காணப்படுவோரை இந்தியா திருப்பி அனுப்புவதாக வைத்துக்கொண்டாலும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்தனரோ அந்த நாடு (வங்கதேசம்) அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அது அந்நிலையில் இல்லை; ‘எங்கள் நாட்டவர்கள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இல்லை’ என்றே வங்கதேசம் கூறிவருகிறது. இந்தியாவும் இப்படியானவர்களைத் திரும்ப அனுப்புவது தொடர்பாக வங்கதேசத்திடம் சமீபத்திய ஆண்டுகளில் பேசவேயில்லை. மேலதிகம், தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணி தொடங்கியபோது, வங்கதேசத்திடம் பேசிய இந்திய அதிகாரிகள், ‘யாரையும் திருப்பி அனுப்ப மாட்டோம்’ என்றும் கூறியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேல் தன்னுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்துடன் நெருக்கமான உறவைப் பராமரித்துவரும் இந்தியா, சீன அரசுடன் வங்கதேசம் காட்டும் நெருக்கத்தைத் தடுப்பதற்கும் போராடிவருகிறது. கடந்த ஜூலையில் வங்கதேசத்துக்குச் சென்றபோதுகூட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு உள்துறை அமைச்சர் கானிடம் பேசுகையில், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை இந்தியா எப்படித் தயாரிக்கப்போகிறது என்று மட்டுமே தெரிவித்தார். வேறு எதையும் பேசவில்லை. இந்நிலையில் அவர்கள் கதி என்னவாகும்?
  • தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும் மறுமுறையீடு செய்யவும் அரசு அளித்துள்ள வாய்ப்புகளைப் பார்க்கும்போது, இறுதி முடிவு வருவதற்கே மேலும் பல ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் மாநிலத்தில் உள்ள தடுப்புக்காவல் முகாம்களுக்கு அனுப்பப்படுவர்; அங்கிருந்து பிணையில் அவர்கள் வெளியே வரலாம்; ஆனால், சட்ட விரோதக் குடியேறிகள் என்ற அடையாளத்துடனும், தங்களைக் குடிமக்கள் என்று நிரூபிப்பதற்கான அழுத்தத்துடனும் சமூகத்தில் அவர்கள் நடமாட வேண்டும். இறுதியாக என்னவாகும் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. ஆக, அவர்கள் உள்நாட்டிலேயே அகதிகள் ஆவார்கள். ஆனால், பிரச்சினை அத்துடன் முடியப்போவதில்லை.
  • ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்தல் கடந்த காலத்தைப் போல இன்றைக்கெல்லாம் சாதாரண காரியம் அன்று. மேலதிகம் இனி குடியேற்றத்தைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் உண்டோ அவற்றைத் தீவிரமாக்குவதும், மக்களிடையே உள்ள தேவையற்ற பதற்றத்துக்குக் காரணமான வதந்திகளைக் களைந்து தெளிவுபடுத்துவதும், இத்துடன் இந்த விவகாரத்தை முடிப்பதுமே இந்த விஷயத்தில் அரசிடம் எதிர்பார்க்கக் கூடிய நல்ல தீர்வாகும். ஓர் உதாரணம், இன்றைய பட்டியலில் தகுதியற்றவர்களாக அரசு கருதும் எண்ணிக்கையே சற்றேறத்தாழ 12 சதவிகிதம்தான். ஆனால், கடந்த காலங்களில் கிட்டத்தட்ட சரிபாதியை இந்த எண்ணிக்கை நெருங்கிக்கொண்டிருப்பதாக பீதி கிளப்பி அசாம் அரசியலில் ஆதாயம் அடைந்தவர்கள் உண்டு.
வடகிழக்கு இந்தியர்கள்
  • இதையெல்லாம் அரசு அசாம் மக்களிடம் சுட்டிக்காட்டலாம். “இன்று தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் ஏனைய பகுதிகளில் எத்தனை லட்சம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு இந்தியர்கள் பணிநிமித்தம் அடைக்கலமாகியிருக்கின்றனர்; அவர்களையெல்லாம் அந்தந்த மாநிலத்தவர்கள் குடியேறிகளாக எண்ணினால் கதி என்னவாகும்?” என்று கேள்வி கேட்டு, குடியேறிகள் பிரச்சினை ஒரு சர்வதேசப் போக்கு என்பதை விளக்கலாம். எப்படியும் மக்களிடம் பன்மைச் சமூகக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதே அரசின் நோக்கமாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். வரலாற்றைப் பழி தீர்க்க முடியாது, மாறாக, இப்போதைய போக்கையே இந்திய அரசு தொடர்ந்தால் என்னவாகும்? வடகிழக்கில் தொடங்கி நாடெங்கிலும் இந்த ‘உள்ளூர் எதிர் வந்தேறி வெறுப்பரசியல்’ பரவும். இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் இன்று எவருக்கு எதிராகவும் வளர்த்தெடுக்கப்படும் இந்த அரசியல், நாளைக்கு எந்தச் சமூகத்துக்கு எதிராகவும் மாறக்கூடும். இன்று வங்கதேச வங்காளிகளுக்கு எதிராகப் பேசுபவர்கள் நாளைக்கு மேற்கு வங்க வங்காளிகளை மட்டும் வரவேற்பார்களா என்ன?

நன்றி: இந்து தமிழ் திசை(03-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories