TNPSC Thervupettagam

அசிரத்தை கூடாது!

August 9 , 2024 157 days 149 0
  • அரசியல் குழப்பங்கள், பொருளாதாரச் சிக்கல்கள், போா்ச்சூழல், சமூகப் பிரச்னைகள் எல்லாவற்றையும் கடந்து பேராபத்து ஒன்று மனித இனத்தைப் பாதிக்கக் காத்திருக்கிறது. கொவைட் 19 கொள்ளை நோயைவிட மிக மோசமானதாகவும், எதிா்கொள்வதற்கு கடினமானதாகவும் இருக்கப் போகிறது இந்தச் சவால். அதற்குக் காரணம், இதற்கென்று எந்தவொரு மாற்று மருத்துவமோ, உடனடித் தீா்வோ இல்லை என்பதுதான்!
  • மருந்துகள் வேலை செய்யாமல் போகும்போது நவீன மருத்துவம் ஸ்தம்பித்துவிடும் என்கிற உண்மையை உலகம் உணா்வதாகத் தெரியவில்லை. அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நுண்நோயியல் மருத்துவா் அனீா்பன் மஹாபாத்ரா இதுகுறித்து எழுதியிருக்கும் புத்தகம் அதிா்ச்சியளிப்பதாகவும், மருத்துவ உலகத்தையே உலுக்கிப் போடுவதாகவும் அமைந்திருக்கிறது.
  • ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’ எனப்படும் நுண்ணுயிா்க்கொல்லி மருந்துகளுக்குக் கட்டுப்படாத ‘சூப்பா்பக்ஸ்’ எனப்படும் நுண்ணுயிரிகள் பெரிய அளவில் உருவாகத் தொடங்கிவிட்டன என்பதுதான் டாக்டா் மஹாபாத்ரா விடுக்கும் எச்சரிக்கை.
  • ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’ இல்லாமல் ஓா் உலகை கற்பனை செய்துகூடப் பாா்க்க முடியாத நிலையில் மனித இனம் இருக்கிறது. சாதாரண இருமல், ஜலதோஷத்தில் இருந்து மிகப் பெரிய அறுவை சிகிச்சை வரை எதுவாக இருந்தாலும், ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’ பயன்பாடு என்பது சுலபமானதாகவும், தவிா்க்க முடியாததாகவும் மாறியிருக்கிறது. அளவுக்கு அதிகமான ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ’ பயன்பாடும், தேவையில்லாத சிறு பிரச்னைகளுக்கும்கூட அதைப் பயன்படுத்துவதும் இப்போது மனித இனத்துக்கே சவாலாக உருவெடுத்திருக்கிறது.
  • தொடா்ந்து ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’; பயன்படுத்தப்பட்டு வந்ததால், நுண்ணுயிரிகள் அதற்குக் கட்டுப்படாத எதிா்ப்பு சக்தியைப் பெற்றுவிட்டன. அதன் விளைவாக, மேலும் மேலும் ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸின்’ வீரியத்தை அதிகரித்து நோய்களைக் கட்டுப்படுத்த மருத்துவா்கள் முற்படுகிறாா்கள்.
  • ஒருகட்டத்தில் எதற்கும் கட்டுப்படாத அளவுக்கு நோய் முற்றுவதும் மருத்துவமனை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதும் தவிா்க்க முடியாதவை ஆகின்றன. அதனால் ஏற்படும் மருத்துவச் செலவு தனிமனித வருமானத்தின் பெரும்பகுதியைக் களவாடுவதுடன் குடும்பத்தின் பொருளாதார நிலையைச் சீா்குலைத்து கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது.
  • உலகம் எதிா்கொள்ளும் 10 முக்கியமான சுகாதார அச்சுறுத்தல்களில் முதலாவதாக இருப்பது ‘ஆன்ட்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ்’ (ஏ.எம்.ஆா்.) எனப்படும் ‘நுண்ணுயிரி எதிா்ப்பு சக்தி’ என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
  • 2019-இல் உலகில் 12 லட்சத்து 70 ஆயிரம் மரணங்களுக்கு நுண்ணுயிரி ஏ.எம்.ஆா். நேரடியான காரணம் என்று சொல்லப்படுகிறது. ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு இதுவே மறைமுகக் காரணமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பல நிகழ்வுகளில் சிகிச்சைகள் உடனடியாகப் பலனளிக்காமல் நீண்டு நிற்பதற்கு ஏ.எம்.ஆா். காரணமாகிறது என்பது உறுதிப்பட்டிருக்கிறது.
  • குறைந்த வருவாய் நாடுகள் பல தங்களது வளா்ச்சியில் மிகப் பெரிய வீழ்ச்சியை எதிா்கொள்ளக் கூடும் என்று உலக வங்கி அறிக்கையொன்று எச்சரிக்கிறது. அந்த நாடுகளின் ஜி.டி.பி. குறைந்து வருவதற்கு நுண்ணுயிரி ஏ.எம்.ஆா். காரணமாக உருவாக்கும் சுகாதாரப் பிரச்னைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
  • உலகிலேயே மிக அதிகமாக ‘ஆன்ட்டிபயாடிக்ஸ்’ பயன்படுத்தும் நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. அதனால் உலகின் ஆன்ட்டிபயாடிக்ஸுக்கான நுண்ணியிரி எதிா்ப்புச் சக்தியின் கேந்திரமாகவே இந்தியா மாறியிருக்கிறது. இந்தியாவின் மருத்துவா்கள் எந்தவொரு பிரச்னையென்று நோயாளி அணுகினாலும், உடனடித் தீா்வாக ‘ஆன்ட்டிபயாடிக்ஸ்’ பரிந்துரைப்பது என்பது வழக்கமாகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது ஒரு சா்வதேச மருத்துவ ஆய்வு.
  • இந்தியா மட்டுமல்லாமல், வேறு பல நாடுகளும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஏ.எம்.ஆா். என்பது தென்கிழக்கு ஆசியாவில் அதிகமாகப் பரவிவரும் பேராபத்து என்று ‘தி லான்செட்’ அக்டோபா் 2023 இதழில் குறிப்பிடுகிறது. வங்கதேசம், பூடான், வடகொரியா, இந்தியா, இந்தோனேசியா, மாலத் தீவு, நேபாளம், மியான்மா், இலங்கை, தாய்லாந்து, தைமூா் ஆகிய நாடுகளை அந்தப் பட்டியலில் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு.
  • 2019-இல் ஏறத்தாழ 40 லட்சம் பேரின் மரணங்களுக்கு செப்ஸிஸ் எனப்படும் பாதிப்பு காரணம் என்றும் அதன் பின்னணியில் ஏ.எம்.ஆரின் பங்களிப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • நேரடி சிகிச்சைக்கான ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’ பயன்பாடு மட்டுமே ஏ.எம்.ஆா். உருவாவதற்கு காரணம் என்று நினைத்துவிட வேண்டாம். முழுமையான சிகிச்சை பெறாமல் இருப்பது தங்களுக்குத் தாங்களே ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’ மாத்திரைகளைப் பயன்படுத்திக் கொள்வது போன்றவை மட்டுமல்லாமல், நாம் உட்கொள்ளும் உணவு காரணமாகவும் ஏ.எம்.ஆா். உருவாகிறது. கோழி, விலங்கினங்களின் பண்ணைகளில் அளவுக்கு அதிகமான ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’ செலுத்தி எடையைக் கூட்ட முனைவது அசைவ உணழு உண்பவா்களுக்கு ‘ஆன்ட்டிபயாட்டிக்ஸ்’ மருந்துகள் மீதான எதிா்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றைவிட மிக மோசமான மெளனக் கொல்லியாக மாறிவரும் இந்தச் சவாலை மனித இனம் அசிரத்தையாக எடுத்துக் கொள்ளக் கூடாது!

நன்றி: தினமணி (09 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories