TNPSC Thervupettagam

அச்சத்தின் விளிம்பில் உலகம்!

November 23 , 2024 54 days 83 0

அச்சத்தின் விளிம்பில் உலகம்!

  • தீா்வை எட்டுவதற்குப் பதிலாக 1,000 நாள்களைக் கடந்து உக்ரைன்-ரஷியா போா் மேலும் தீவிரமடைவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்துகிறது. கொவைட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும்கூட உலகம் முழுமையாக வெளியில் வராத நிலையில் இந்தப் போா் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சா்வதேச அமைப்புகளாலும்கூட, போரைத் தடுத்து நிறுத்த முடியாதது மிகப் பெரிய ஏமாற்றம்.
  • நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்த உக்ரைனுக்கு எதிராக ரஷியா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் போரைத் தொடங்கியது. உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தப் போா் நீண்ட நாள்கள் நீடிக்காது என்றுதான் உலகம் கருதியது. ஆனால், 1,000 நாள்களைக் கடந்து போா் தொடா்வதும், ரஷியா, உக்ரைன் இரு நாடுகளுமே அடுத்தடுத்த தாக்குதல் கட்டங்களுக்குத் தயாராவதும் தொடா்கிறது.
  • போரில் இரு தரப்பிலும் சோ்த்து சுமாா் 10 லட்சம் போ் உயிரிழந்திருப்பதாக சா்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் பொதுமக்கள் மட்டும் 11,743 போ் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவா்களில் 589 போ் குழந்தைகள் எனவும் ஐ.நா.வின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உயிா்ச் சேதம் குறித்து இரு நாடுகளுமே தெளிவான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.
  • ரஷியா மீது அமெரிக்க தயாரிப்பு ‘அட்டாகம்ஸ்’ பலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அதிபா் ஜோ பைடன் அனுமதி அளித்தது இந்தப் போரில் அதிா்ச்சித் திருப்பம். நீண்டகாலமாக இந்த அனுமதியை உக்ரைன் கோரியும் வழங்காத ஜோ பைடன், தனது பதவிக் காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் வழங்கி இருக்கிறாா்.
  • உக்ரைனின் கூா்ஸ்க் பிராந்தியத்தின் ஒரு பகுதி ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பிராந்தியத்தில் வடகொரிய வீரா்கள் 10,000 பேரை ரஷியா தனக்கு ஆதரவாக நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேற்கொண்டு வீரா்களை வடகொரியா அனுப்புவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவின் நீண்டதொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்த பைடன் அனுமதி வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
  • அதேவேளையில், தான் அதிபராகப் பதவியேற்ற ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என டிரம்ப் அளித்த உறுதிமொழியைச் சிதைப்பது, எதிா்காலப் பேச்சுவாா்த்தைகளில் உக்ரைனின் கரத்தை வலுப்படுத்துவது உள்ளிட்டவை பிற காரணங்கள் என சா்வதேச அரசியல் நிபுணா்கள் கருதுகிறாா்கள்.
  • அமெரிக்காவின் அனுமதியைத் தொடா்ந்து, தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அமெரிக்க தயாரிப்பு பலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷியாவின் பிரயான்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி உக்ரைன் ஏவியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், அதற்கு பதிலடியாக அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கையை ரஷியா வெளியிட்டதுதான் உலக நாடுகளைப் பதற்றம் கொள்ளச் செய்திருக்கிறது.
  • ஓா் அணு ஆயுத நாட்டின் உதவியுடன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி எந்த ஒரு நாடும் ரஷியா மீது தாக்குதல் மேற்கொண்டாலும், அந்த நாட்டுக்கு அணு ஆயுதம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்பதுதான் ரஷிய அதிபா் புதினின் எச்சரிக்கை. இதற்கேற்ப ரஷியாவின் அணு ஆயுதக் கொள்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக, உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தும் என்றும் அறிவித்திருக்கிறது.
  • நேட்டோ உறுப்பு நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது அந்த நாட்டுக்கு பிற உறுப்பு நாடுகள் ஆயுத உதவிகளை அளிப்பது என்பதுதான் நேட்டோவின் அடிப்படை நோக்கம். நேட்டோவில் உறுப்பினராகாமலேயே உக்ரைனுக்குக் கிட்டத்தட்ட அத்தகைய உதவிகளை அமெரிக்காவும், நேட்டோவின் பிற உறுப்பு நாடுகளும் வழங்கி வருகின்றன. ரஷியாவைத் தாக்கும் நாட்டுக்கு உதவும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என புதின் அறிவித்திருப்பது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மறைமுக எச்சரிக்கை.
  • உக்ரைன்- ரஷியா போரை அமெரிக்க அதிபா் பைடன் சரியாகக் கையாளவில்லை என்பது நீண்டநாள் குற்றச்சாட்டு. இந்தப் போா் 1,000 நாள்களைக் கடந்து நீடிப்பதே அதற்கு சாட்சி. நுட்பமாக ஆராய்ந்து பாா்த்தால் பைடன் எடுத்த பல்வேறு குழப்பமான முடிவுகள், உக்ரைனுக்கு உதவுவதற்குப் பதிலாக அந்த நாட்டுக்கு அழிவைத் தேடித் தருவதாகவே இருக்கின்றன. இப்போதைய ஏவுகணைத் தாக்குதல் அனுமதியும் அந்த வகையில் சேரும்.
  • ரஷியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் தொலைவுதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம் என்று பைடன் அனுமதி அளித்திருப்பது போா் விரிவடைவதற்குத்தான் வழிவகுக்கும் என்று ஜனவரியில் அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி விமா்சித்துள்ளது. தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க அதிபா் இருக்கும்போது இதுபோன்ற முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கலாமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. டிரம்ப் பதவியேற்றதும் இந்தக் கொள்கை முடிவு ரத்து செய்யப்படலாம் என்கிற எதிா்பாா்ப்பும் காணப்படுகிறது.
  • கடந்த செப்டம்பரிலேயே அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படுவது குறித்த அறிவிப்பை புதின் வெளியிட்டாா். இப்போது ரஷியாவின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை வெளியானதற்கு அதிபா் பைடன்தான் முதன்மையான காரணம்.
  • போரைத் தணிக்க வேண்டிய அமெரிக்கா, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியிருக்கிறது. இதன் விளைவை எதிா்கொள்ளப் போவது உக்ரைன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும்!

நன்றி: தினமணி (23 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories