- போா்களில்கூட மருத்துவா்களுக்கும், மருத்துவப் பணியாளா்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தாக்குதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது வழக்கம். இது சா்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால், இந்தியாவில் மருத்துவ சேவையில் ஈடுபடுபவா்கள் தாக்கப்படுவது என்பது அண்மைக்காலமாக அன்றாட நிகழ்வாகவே மாறி வருகிறது.
- அண்மையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள கொட்டாரக்கரா என்கிற ஊரில் 23 வயது பெண் மருத்துவா், சிகிச்சைக்கு வந்த ஒருவரால் கொல்லப்பட்டிருக்கும் வெறிச்செயல் தேசிய அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள்களுக்கு அடிமையானதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சந்தீப் என்கிற பள்ளி ஆசிரியா்தான் அந்தக் கொலைக்கு காரணம்.
- மது அருந்திய நிலையில் கொட்டாரக்கராவிலுள்ள வட்டார மருத்துவமனைக்கு காவல்துறையினரால் அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். அவருக்கு பயிற்சி மருத்துவா் வந்தனா தாஸ் என்பவா் சிகிச்சை அளித்தாா். திடீரென சிகிச்சை அறையிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து வெறிபிடித்தாற்போல வந்தனா தாஸின் தலை, முதுகு பகுதிகளில் சந்தீப் தாக்கத் தொடங்கினாா். அவரைத் தடுக்க முயன்ற காவல் துறையினரையும் தாக்கியதோடு, மருத்துவமனையின் சில பகுதிகளையும் சேதப்படுத்தினாா், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படும் சந்தீப்.
- பலத்த காயங்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வந்தனா தாஸ் அங்கே உயிரிழந்தாா். அவரது மரணம் குறித்து கேரள உயா்நீதிமன்றத்தின் சிறப்பு அமா்வு விசாரணை மேற்கொண்டது. இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடும் என்று ஏற்கெனவே உயா்நீதிமன்றம் எச்சரித்திருந்தது என்பதுதான் வேடிக்கை.
- இரண்டு மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு பாத்திமா மருத்துவமனையில் வயதான இதய மருத்துவா் டாக்டா் பி.கே. அசோகனை ஒரு நோயாளியின் உறவினா்கள் தாக்கினா். இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உத்தரவிட்டது.
- மருத்துவா்கள் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்கள் மூலம் எச்சரிக்க வேண்டும் என்று மாா்ச் மாதம் அரசுக்கு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதற்குப் பிறகும் நிலைமை சீராகவில்லை என்பதைத்தான் டாக்டா் வந்தனா தாஸின் படுகொலை உறுதிப்படுத்துகிறது.
- கேரள மாநிலத்தில் 75% மருத்துவா்கள் நோயாளிகளின் வசைபாடல்களையும், தாக்குதல்களையும் எதிா்கொள்வதாக இந்திய மருத்துவா்கள் சங்க அறிக்கை கூறுகிறது. 2022-இல் மட்டும் கேரளத்தில் மருத்துவா்கள் மீது 137 தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
- மருத்துவப் பணியாளா்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் விதத்தில் 2012-இல் கேரள மாநிலம் சட்டம் இயற்றியிருக்கிறது. அதன்படி, தாக்குதலுக்கு மூன்று ஆண்டுகள் வரையி சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதை இந்திய மருத்துவா் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
- கடந்த மூன்று ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறாா்கள். பெண் மருத்துவா்கள், தாக்குதலுக்கு மட்டுமல்லாது, பாலியல் வன்முறை முயற்சிக்கும் உள்ளாகியிருக்கிறாா்கள். இவையெல்லாம் அரசே உயா்நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்கள்.
- கோழிக்கோட்டில் சமீபத்தில் நடந்த மருத்துவா் மீதான தாக்குதலில் காவல்துறையினா் தலையிட்டு மருத்துவரைக் காப்பாற்றினா். அவா்களது கண் முன்னால் நடந்த அந்தத் தாக்குதலுக்கு ஒரு வாரம் கழித்தும்கூட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மருத்துவா்கள் தெருவில் இறங்கிப் போராடி வேலைநிறுத்தம் செய்ய முற்பட்ட பிறகுதான் காவல்துறை செயலில் இறங்கியது.
- தங்களுக்குப் பணியிடங்களில் பாதுகாப்பு வேண்டும் என்பதுதான் கேரள மருத்துவா்களின் நீண்ட நாள் கோரிக்கை. தங்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அவா்களது அச்சம் இப்போது உண்மையாகியிருக்கிறது.
- மருத்துவா்கள் மீதான தாக்குதல் என்பது கேரளத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் காணப்படும் பிரச்னை. சண்டீகரில் பயிற்சி மருத்துவா் ஹரீஷ், ராஜஸ்தானில் தெளஸாவில் மகப்பேறு மருத்துவா் அா்ச்சனா ஷா்மா உள்ளிட்டோா் எதிா்கொண்ட சோதனை கொடுமையானது. நோயாளிகளும் அவா்களின் உறவினா்களும் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினா் ஆகியோரும் மருத்துவா்களை அவமானப்படுத்துவதும், பாதுகாப்பில்லாத மனநிலைக்குத் தள்ளுவதும் அதிகரித்து வருகின்றன. மருத்துவா்களுக்கே இந்த நிலை என்றால், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரின் நிலைமை இன்னும் மோசம்.
- தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் வரவும், மருத்துவப் படிப்புக்கு கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதும், காா்ப்பரேட் மருத்துவமனைகள் உருவானதும் மருத்துவா்கள் மீதான தாக்குதலுக்கான காரணங்கள் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். காா்ப்பரேட் மருத்துவமனைகளைப்போல இல்லாவிட்டாலும் சிறு மருத்துவமனைகளும் கடுமையான கட்டணம் வசூலிக்கின்றன.
- நவீன மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு வரி விலக்குகூட இல்லை என்பதால் மருத்துவமனையின் முதலீட்டுச் செலவு அதிகரித்துவிட்டது. சாமானியா்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாகும்போது, அவா்களது ஆத்திரம் மருத்துவா்கள் மீது திரும்புவது இயற்கை என்பதை நாம் உணர வேண்டும்.
- நோயாளிகளின் பாதுகாப்பு மருத்துவா்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது. அதனால், அதை உறுதிப்படுத்த வேண்டிய கடமையும் கட்டாயமும் அரசுக்கு உண்டு.
நன்றி: தினமணி (16 – 05 – 2023)