TNPSC Thervupettagam

அஞ்சலி: ஈழக் கவிஞர் மு.பொன்னம்பலம்

November 10 , 2024 67 days 111 0

அஞ்சலி: ஈழக் கவிஞர் மு.பொன்னம்பலம்

  • ​மு.பொ. என்றழைக்​கப்​படும் கவிஞர் மு.பொன்னம்​பலம், ‘மெய்​யுள்’ என்கிற புதிய இலக்கியக் கோட்பாட்​டையும் உருவத்​தையும் தமிழில் உருவாக்கி அளித்த மு.தளை​யசிங்​கத்தின் தம்பி. மு.பொவும் மு.தவைப் போல மெய்யுளைத் தொடர்ந்த எழுத்​தாளர், விமர்​சக​ராகவே இருந்​தார்​.
  • மெய்யுள் ஒரு புதிய இலக்கிய உருவமாகும். அது பூரண உருவமாகவும் இருப்​பதால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்கிற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் ஓர் உருவமாகவும் இருக்​கும். செய்யுள், உரைநடை என்கிற வித்தி​யாசங்​களையும் அது மதிப்​ப​தில்லை. மெய்யுள் கற்பனைக் கோலங்கள் சகலவற்​றையும் குலைத்​துக்​கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்​துக்​கொண்டு, நித்திய சத்தி​யத்தை நோக்கிய நேரடி அனுபவரீ​தியான ஊடுருவல்​களுக்​குரிய கலை, இலக்கிய உருவமாகும். இதற்கு வகைமா​திரியான படைப்புகளையும் உருவாக்கி அளித்தார் மு.த. அதைத் தொடர்ந்தார் மு.பொ.
  • பொன்னம்​பலம், மெய்யுளின் தொடர்ச்​சியைப் பல விதமாகப் பரிசோ​தித்​ததோடு, தன்னுடைய தளத்தில் நின்று கவிதை, சிறுகதை, நாவல், விமர்​சனம், சிறார் இலக்கியம், இதழியல் எனத் தொடர்ச்​சியாக, தீவிரமாக இயங்கினார். ஏறக்குறைய 60 ஆண்டு​களுக்கு மேலாக மு.பொவின் செயல்பாடு இருந்தது. மெய்யுள் வலியுறுத்திய உருவத்தை உடைப்​பதில் மு.பொ. எவ்வளவுக்கு பிரக்​ஞைபூர்​வ​மாகச் செயல்​பட்​டிருக்​கிறார் என்கிற கேள்வி இருந்​தாலும், சிந்தனைப்​போக்கில் மு.த.வைத் தவறாமல் தொடர்ந்​தார். அதனுடைய வெளிப்​பாடுகளாக அவருடைய பல தொகுதி எழுத்துகள் உண்டு.
  • மு.பொ.வின் முதற்​கட்டம், மு.தளை​யசிங்​கத்தோடு தொடங்​கியதும் இணைந்து செயல்​பட்​டதுமாக இருந்தது. தளையசிங்​கத்தின் பிரபஞ்ச யதார்த்​தவாதத்தை மட்டுமல்ல, அவருடைய சமூக, அரசியல் நோக்கிலும் செயல்​பாட்​டிலும் ஒன்றாகி நின்றார். உள்மன யாத்திரை​யிலும் கலையாக்க வெளிப்​பாட்​டிலும் மு.பொ.வின் தீவிரமிருந்தது. மெய்யுளின் சிந்தனை வரையறை​யின்றித் தொடர்வது. அது சமூக விளைவும் வளர்ச்​சியின் அடிப்​படை​யு​மாகும்.
  • மு.பொ.வின் இரண்டாம் கட்டம், மெய்யுளைத் தன் வழியில் பரிசோ​தித்துப் பார்ப்​ப​தோடு, இலக்கி​யத்தின் பன்முக வெளிப்​பாட்டில் தன்னை ஈடுபடுத்துவதாக இருந்தது. கவிதைகளில் அதிகமாகப் பரிசோதனைரீ​தியான உடைப்பைச் செய்துபார்த்​தார். அதனுடைய வெளிப்பாடே ‘அகவெளிச் சமிக்​ஞைகள்’, விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள் போன்றவை. கட்டுரைகளில்தான் (அவை கட்டுரைகள் இல்லை என்பதே மெய்யுளின் விவாத​மாகும்) விரிவான உரையாடல்கள் நடந்தன.
  • நாவல்​களிலும் சிறுகதைகளிலும் மெய்யுளின் அடிப்​படைகள் குறைவாகவே உள்ளன. மெய்யுளின் சிந்தனைப்​போக்கைச் சார்ந்த தொனியோடு உருவாக்​கப்பட்ட நாவல்​களில் உருவ – வடிவரீ​தியான கலைப்புகள் நிகழவில்லை. மு.பொவின் முக்கியமான பங்களிப்பு, அவர் முன்வைத்த விமர்​சனங்​களாகும். மிகக் கூர்மையான விமர்​சனங்கள் மு.பொ.​வினுடையவை. அதேவேளை பதற்றம் நிறைந்​தவையும் உண்டு. எம்.ஏ.நுஃ​மான், அ.மார்க்ஸ், வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றோருடன் காட்டமான தொனியில் விவாதங்​களையும் எதிர்​வினை​களையும் ஆற்றி​யிருக்​கிறார் மு.பொ. எதிர்​நிலைப் பார்வைகளாக இருந்​தாலும் விவாதங்கள் எப்போதும் அறிவெழுச்​சிக்கு உரியவை என்கிற அடிப்​படையில் முக்கிய​மானவை. மு.பொ. அதைச் செய்தே வந்திருக்​கிறார்.
  • மு.பொ.​வினுடைய சிறார் கதைகளும் கவிதைகளும் (பாடல்​களும்) முக்கிய​மானவை. மரபார்ந்த கற்பனைத் தளத்தில் அவற்றை உருவாக்கு​வதை​விடப் பல கோணங்​களில் சிந்திக்கும் வகையிலான அறிவியல் பண்பில் சிறார் இலக்கியம் உருவாக்​கப்பட வேண்டும் என்பதே அவருடைய நம்பிக்கை. அதைச் செய்தும் பார்த்​தார். அதில் அவர் வெற்றியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். பொன்னம்​பலத்தின் இன்னொரு பரிமாணம், அவருடைய இதழியல் பங்களிப்பு. மு.த.​வினால் தொடங்​கப்பட்ட ‘பூரணி’யில் பங்களித்​திருக்​கிறார். 1980களின் பிற்பகு​தியில் யாழ்ப்​பாணத்​திலிருந்து வெளிவந்த ‘திசை’ என்கிற வாரப் பத்திரி​கையின் ஆசிரியராகப் பணியாற்றினார். வழமைக்கு மாறான வகையில் மு.பொ.வின் ஆளுமை​யாலும் சிந்தனைப் போக்கினாலும் அது ஒரு மாற்றுப் பத்திரி​கையாக வெளிவந்தது. பின்னாளில் கொழும்​பிலிருந்து வந்த ‘சரிநிகர்’ வாரப் பத்திரி​கைக்கு முன்னோடி ‘திசை’யே. அரசியல், கலை, பண்பாடு, சமூகவியல், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் ‘திசை’யின் பங்களிப்பு மிகப் பெரியது. ‘A Country Entrapped’ (Poem - 2007) என ஆங்கிலக் கவிதைத் தொகுப்​பையும் மு.பொ. எழுதி வெளியிட்​டார். இன்னொரு ஆங்கிலக் கவிதை நூல் ஏ.ஜே.க​னகரட்​னாவின் மொழிபெயர்ப்பில் வந்தது.
  • மு.பொன்னம்பலம் எழுதிய ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்கிற நூலுக்கு மலேசி​யாவில்  சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் அனைத்​துலகப் புத்தகங்​களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது. ‘தமிழ் நிதி’ விருதை கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிக் கௌரவித்தது.
  • பன்னிரண்டு வயதில் கவிதை எழுதி, இலக்கி​யத்தில் ஈடுபடத் தொடங்கிய மு.பொ. தன்னுடைய இறுதி நாள்கள் (86 வயது) வரை தொடர்ந்து எழுதிக்​கொண்டும் விவாதித்​துக்​கொண்டுமே இருந்​தார். இளையோரின் வெளிப்​பாடு​களில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் அவற்றைக் குறித்து எழுதிய பண்புடைய பங்களிப்பு​களும் மதிப்​புக்​குரியவை. ஒரு முன்னோடியின் பங்களிப்பு​களாகவும் பண்பாகவும் மு.பொ.​வினுடைய அடையாளம் வரலாற்றின் நினைவில் அழியாததது. இன விடுதலை, ஈழப் போராட்டம், தமிழர் அரசியல் போன்ற​வற்றில் மு.பொ.வின் பார்வை விமர்​சனபூர்​வ​மானதாக – உண்மையைக் கண்டறியும் வேட்கையோடு இருந்தது. இதனால் அவர் விமர்​சனங்​களையும் எதிர்​கொண்​டார். அதை முன்னிட்ட வருத்​தமேதும் அவருக்கு இருக்க​வில்லை. பதிலாக மகிழ்ச்​சியில் திளைத்​தார். அதேவேளை சமூகத் துயர் அவரைப் படுத்​தியது. அன்பொழுக அணைத்துப் பேசும் தன்னியல்புச் சித்திரமாக வாழ்ந்த மு.பொ.வின் விடைபெறுதல், சத்தியத்தின் ஒளியை – மெய்யுளை – நம் நெஞ்சிலே ஏற்றுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories