TNPSC Thervupettagam

அஞ்சலி: ஜேம்ஸ் சி.ஸ்காட் (1936-2024) | எதிர்ப்புவாதத்தை ஆராய்ந்த சமூக விஞ்ஞானி

August 11 , 2024 111 days 125 0
  • பிரபல சமூக விஞ்ஞானியான ஜேம்ஸ் சி.ஸ்காட் 2024 ஜூலை 19 அன்று, தனது 87ஆவது வயதில் காலமாகி​விட்​டார். நியூஜெர்​சியில் பிறந்த இவர், ஒன்பது வயதில் தன்னுடைய தந்தையை இழந்து, பின் குவாக்​கர்ஸ் என்னும் நண்பர்கள் சமய சபை நடத்தும் பள்ளியில் பயின்​றார். யேல் பல்கலைக்​கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின் பல்கலைக்​கழகத்தில் பேராசிரியராக இருந்து, பின் யேலுக்குத் திரும்பி 45 ஆண்டுகள் அரசியல், மானுட​வியல் துறையில் பேராசிரியராக இருந்​தார்.
  • பல்கலைக்கழக வளாகத்தில் போர் எதிர்ப்​பாளராக அறியப்பட்ட இவர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இனவியல் சார் ஆராய்ச்​சிகளை மேற்கொண்​டார். குறிப்பாக, ஒரு மலேசியக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி விவசா​யிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்​டார். 1958-59 ஆண்டுகளில் ரோட்டரி நிதிநல்கை உதவியுடன் மயன்மார் சென்று, அங்கு ரங்கூன் தேசிய மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்​திக்​கொண்​டார். தன்னுடைய அரசியல் சித்தாந்​தத்தை ‘Two Cheers for Anarchism’ (அதிகார மையங்​களுக்கு எதிரான அரசியல் கோட்பாட்டை வாழ்த்​துதல்) என்ற நூலில் குறிப்​பிட்​டுள்​ளார். அதிகாரத்தில் இருப்​பவர்​களிடம் அடிபணி​யாமல் இருப்பதே பின்னாள்​களில் எதிர்ப்பு இயக்கங்​களில் ஈடுபட மக்களைத் தயார்​ படுத்தும் என நம்பினார்.
  • இதுவரை தான் தொடாத ஒரு புது முயற்​சியாக, 1988இல் ‘Seeing like a State: How certain schemes to improve the human conditions have failed’ (அரசின் பார்வை: எவ்வாறு சில மனித மேம்பாட்டுத் திட்டங்கள் தோற்கின்றன) என்கிற நூலை வெளியிட்​டார். இந்நூலில், அரசு நல்லதே செய்ய முயல்​வ​தாகவும் அதிகாரவர்க்​கத்தின் செயல்​பாடுகளால் அவை தோல்வியில் முடிவ​தாகவும் கருதுகிறார். மக்களின் அன்றாட வாழ்க்கை முறை சார்ந்த அறிவை அரசுகள் புரிந்து​கொள்ளத் தவறுவதே சமூக நலன், மேம்பாடு சார்ந்த திட்டங்கள் தோல்வியடையக் காரணமாகிறது என விளக்​கு​கிறார். சமூக நலத்திட்​டங்கள் வழியாக சமூகப் பாதுகாப்பை உறுதி​செய்யாத அரசுகளை வன்மையாகவும் கண்டிக்​கிறார்.
  • மலேசியக் கிராமத்தில் தங்கி ஆய்வு நடத்திய பின்னரே, மூன்றாம் உலக நாடுகளின் தலைசிறந்த அறிஞராக இவர் அறியப்​பட்​டார். இயந்திரங்களைப் பயன்படுத்த வற்புறுத்​தப்​பட்​ட​தா​லும், வரிகள் உயர்த்​தப்​பட்​ட​தா​லும், காலம் தாழ்த்​துவது, நாசவேலை புரிவது போன்ற சிறுசிறு எதிர்ப்புகளை மலேசிய விவசா​யிகள் நிகழ்த்​தினர். இக்காலப் பின்னணி​யில்தான் இவருடைய ‘Weapons of the weak: Everyday forms of Peasant Resistance’ (1985) (பலவீனர்​களின் ஆயுதம்: விவசா​யிகளுடைய எதிர்ப்பின் அன்றாட வடிவங்கள்) என்கிற நூல் பிரபலமானது.
  • 1980களின் தொடக்​கத்தில் பேராசிரியர் ரனஜித் குஹா தன்னுடைய விளிம்​புநிலைப் பார்வைகளை ‘Subaltern Studies: Writings on South Asian History and Society’ (விளிம்​புநிலை ஆய்வு: தெற்காசிய வரலாறு, சமூகம் ஆகியவை பற்றிய எழுத்து) என்கிற நூலில் தொகுத்​தார். அதுவே பின்னாளில் ‘விளிம்​புநிலை அறிக்​கை’யாக (Subaltern Manifesto) அறியப்​பட்டது. இதே கொள்கையை ஜேம்ஸ் சி.ஸ்காட்டும் ‘எதிர்ப்​புவாதம்’ என்ற அடிப்​படையில் பார்க்​கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா தேசியப் பல்கலைக்​கழகத்தில் இருவரும் சந்தித்து உரையாடியது குறிப்​பிடத்​தக்கது. மேலாதிக்​கத்தை எதிர்க்கும் விவசா​யிகள் மேல் இருவரும் பரிவான பார்வையைக் கொண்டிருந்​தனர். எதிர்ப்​பின்மை என்பது அடிமைத்​தனத்தை ஏற்றுக்​கொண்ட​தாகி​விடாது என்கிற கருத்தை ஸ்காட் முழுமையாக நம்பினார்.
  • இவருடைய ‘Dominion and the Arts of Resistance’ (ஆதிக்​கமும் எதிர்ப்பு என்னும் கலையும்), ‘Against the Grain’ (தானியத்தை எதிர்த்து) ஆகிய நூல்கள், மனிதன் ஏன் வேட்டைத் தொழிலைக் கைவிட்டு விலங்​குகள், பயிர்களை நம்பிய நிலைத்த வாழ்வை ஏற்​றான் என்கிற கேள்​விக்கு விடையாக அமைந்​துள்ளன. விவசாயக் குடிகளைப் புரிந்து​கொள்​வதிலேயே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்​பணித்த இவர், விவசாயப் பெரு​மக்கள்​ கை​யாண்ட மேலாதிக்க எதிர்ப்​பின் வழிமுறைகளைப் ப​திவுசெய்து சென்​றிருக்​கிறார்​.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories