- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நிலப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகள், ஆறுகள் உள்ளிட்ட 11 இடங்களுக்கு, சீன மொழி, திபெத்திய மொழி மற்றும் பின்யின் எழுத்து வடிவில் பெயர்களைச் சூட்டியதன் மூலம், மீண்டும் இந்தியாவைச் சீண்டியிருக்கிறது சீனா. இதையடுத்து, அருணாச்சலப் பிரதேசம் என்றைக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என இந்தியா பதிலடி தந்திருக்கிறது.
- அருணாச்சலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பளவைச் சொந்தம் கொண்டாடிவரும் சீனா, அதை ‘ஸாங்க்னான்’ என அழைக்கிறது. திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியாக சீனாவின் வரைபடத்திலும் இப்பகுதி குறிக்கப்பட்டிருக்கிறது.
- ‘தரப்படுத்தப்பட்ட பெயர்கள்’ எனும் பெயரில் இப்படியான பெயர் சூட்டுதலை ஏற்கெனவே இரண்டு முறை சீனா நிகழ்த்தியிருக்கிறது. 2017இல் அருணாச்சலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, அங்கு உள்ள ஆறு இடங்களுக்குத் தன்னிச்சையாகப் பெயர் சூட்டியது. 2021இல் அருணாச்சலப் பிரதேசத்தின் 15 இடங்களுக்கான பெயர்ப் பட்டியலை வெளியிட்டது. இந்தியா அதை வெளிப்படையாகக் கண்டித்தது.
- பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட மெக்மகோன் எல்லைக் கோட்டை ஏற்க சீனா மறுத்து விட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எப்போதும்சீனாவுடன் இணக்கமான போக்கையே நாடிவந்திருக்கிறது.
- ஆனால், சீனாவோஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, வெளியே நட்பு பாராட்டுவதாகக் காண்பித்துக்கொண்டு முதுகில் குத்துவது, அடுத்தவர் நிலத்துக்கு ஆசைப்பட்டு ஆக்கிரமிப்பது, திருட்டுத்தனமாக நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் இது போன்ற செயல்களைக் கண்டிக்காமல் அமைதி காப்பதும் அவ்வப்போது சீனாவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பதும் கேலிக்கூத்தான விஷயம்.
- இதற்கிடையே ‘தி இந்து’ நாளிதழின் பெய்ஜிங் செய்தியாளர் ஆனந்த் கிருஷ்ணன், ‘பிரசார் பாரதி’ செய்தியாளர் அன்ஷுமன் மிஸ்ரா ஆகியோரின் விசாக்களை சீன அரசு முடக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் இவ்விருவரும் மீண்டும் சீனாவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘இது சீனப் பத்திரிகையாளர்களை இந்திய அரசு நியாயமற்ற வகையில் நடத்தியதற்கான பதில் நடவடிக்கை’ என்று சீன அரசு கூறுகிறது.
- ஆனால், இந்தியாவில் அண்மைக் காலத்தில் சீனப் பத்திரிகையாளர்கள் யாரும் வெளியேற்றப் படவும் இல்லை; அவர்களுக்கான விசா மறுக்கப்படவும் இல்லை. இந்தியாவில் பணியாற்றிவந்த சீன அரசு செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்களை 2016இல் இந்தியா வெளியேற்றியது.
- அவர்கள் பத்திரிகையாளர் பணிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவதாகப்பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டியிருந்ததே அதற்குக் காரணம். சீனா, இப்போது இந்தியப் பத்திரிகையாளர்களை வரவிடாமல் தடுப்பதை, எல்லைப்பிரச்சினையில் இந்தியாவின் எதிர்வினைகளுக்கான பழிவாங்கல் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
- இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடும் சீன அரசையும், உள்நாட்டில் ஜனநாயகத்துக்கு வழியின்றி ஒற்றைத் தலைமையைத் தொடரும் அதிபர் ஷி ஜின்பிங்கையும் உலக நாடுகள் ஒன்றிணைந்து கண்டித்தே தீர வேண்டும்.சர்வதேச நாடுகளின் தார்மிக ஆதரவுடன் சீனாவின் நகர்வுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்தியாவுக்கும் இருக்கிறது.
நன்றி: தி இந்து (06 – 04 – 2023)