TNPSC Thervupettagam

அடிப்படைத் தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம்

September 26 , 2019 1887 days 1016 0
  • இந்தியா 2023-இல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகும் இலக்குடன் ஒருபுறம் நடைபோடுகிறது. இன்னொருபுறம், சில அடிப்படைத் தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை அனைவருக்கும் உறுதிப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. 
  • இந்தியாவின் மிகப் பெரிய பலம், நமது மனித வளம் என்றால்,  நமது மிகப் பெரிய பலவீனம் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் ஆரோக்கியமானவர்களாக இல்லாமல் இருப்பது. இந்தியாவின் தேசிய சொத்தான குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினர் குறைந்த எடையுடன்தான் பிறக்கிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. 
யுனிசெஃப் அமைப்பு – ஆய்வு
  • ஐ.நா. சபையின் யுனிசெஃப் அமைப்பு ஓர் ஆய்வை நடத்தியது. அதன்படி, கடுமையான ஊட்டச்சத்தின்மை இந்தியாவில் பல குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.
  • ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர். அதிக அளவிலான குழந்தைகள் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறார்கள்.
  • ஐந்தில் ஒரு பகுதியினர் முற்றிலுமாக உடல் ரீதியாகவும், மூளை ரீதியாகவும் செயல்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • ஊட்டச்சத்துக் குறைவு என்பது உடல் வளர்ச்சிக் குறைவு மட்டுமல்லாமல், பல்வேறு உடல் ரீதியான குறைபாடுகளுக்கும், மரணத்துக்கும் வழிகோலுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய்த்தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அந்தக் குழந்தைகளுக்கு இல்லாமல் இருப்பதால், தொடர்ந்து பலவீனமாகவும், உடல் நலக் குறைபாடுகளுடனும்தான் அப்படிப்பட்ட குழந்தைகள் வளர்கின்றனர். 
பாதிப்புகள்
  • உடல் ரீதியான இதுபோன்ற பாதிப்புகள் அந்தக் குழந்தையின் நினைவாற்றலைப் பாதிப்பதால், அவர்கள் கல்வி கற்பதிலும் திறமை குறைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள்.
  • குழந்தைப் பருவத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைவு அந்தக் குழந்தை வளர்ந்த பிறகும்கூட தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களின் பணியாற்றும் திறன் குறைந்து காணப்படுவதுடன், தவிர்க்க முடியாத பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக நுரையீரல் பாதிப்புகள் அவர்களை எளிதில் தொற்றிக்கொண்டு விடுகின்றன. 
  • அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 35.7% குழந்தைகள் பிறக்கும்போதே எடை குறைவாகப் பிறக்கிறார்கள்.
  • 38.4% குழந்தைகள் வளர்ச்சி குறைவாகக் காணப்படுகிறார்கள். மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைவின் காரணமாக 7.5% குழந்தைகள் செயல்பாட்டுக் குறைவுடனும், ஆரோக்கியமில்லாமலும் வளர்கின்றனர். 
ஊட்டச்சத்துக் குறைபாடு
  • குழந்தை பிறந்த முதல் ஆயிரம் நாள்களில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் பாதிப்புகளை அந்தக் குழந்தைகள் வளர்ச்சி அடைந்து சத்தான உணவை உட்கொண்டாலும்கூட மாற்றிவிட முடியாது.
  • அதாவது, லட்சக்கணக்கான குழந்தைகள் வளர்ச்சிக் குறைவுடன் தங்களது வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பது மட்டுமல்ல, எல்லா நோய்த்தொற்றுக்கும் உள்ளாகவும் செய்கிறார்கள். 
  • கடுமையான ஊட்டச்சத்துக் குறைவும் மிதமான ஊட்டச்சத்துக் குறைவும் சமூக ஆய்வாளர்களால் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அப்படியிருந்தும்கூட, சமூக ரீதியிலான விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தால் மிதமான ஊட்டச்சத்துக் குறைவு உள்ள குழந்தைகளும், கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு நிலைக்குத் தள்ளப்படும் அவலம் அடித்தட்டு மக்களிடையே மிக அதிகமாகவே காணப்படுகிறது. 
  • கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைவு அரசின் கவனத்தை ஈர்க்காமல் இல்லை. பேறுகால தாய்மார்களையும், சிசுக்களையும், குழந்தைகளையும் கவனத்தில் கொண்டு பல்வேறு ஊட்டச்சத்துத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 
  • அவசர நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1975-இல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (இன்டக்ரேட்டட் சைல்டு டெவலப்மென்ட் ஸ்கீம்) அன்றைய இந்திரா காந்தி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு
  • குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு, ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றுவதற்கான உணவு வழங்குதல் உள்ளிட்டவை அந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.
  • 6 வயதுக்கும் கீழான  சுமார் 4 கோடி குழந்தைகளும், 70 லட்சம் கர்ப்பகால, பிரசவகால தாய்மார்களும் அந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டனர்.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கடந்த 44 ஆண்டுகளில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவிலிருந்து பல கோடி குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறது என்றாலும்கூட, குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பிரச்னை இன்னும் முழுமையாக எதிர்கொள்ளப்படவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய நிலைமை. உலக வறுமைக் குறியீட்டில் 118 வளர்ச்சி அடையும் நாடுகளில் மலாவி, மடகாஸ்கர், கெளதமாலா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் பின்னால்தான் 90-யும் தாண்டிய நிலையில் இன்னும் இந்தியா இருக்கிறது. 
  • கேரளம், தமிழ்நாடு, கோவா, திரிபுரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊட்டச்சத்துக் குறைவை ஓரளவுக்கு எதிர்கொண்டிருக்கின்றன என்றாலும்கூட, இந்தியாவின் பல மாநிலங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் முறையாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்படாத அவலம் தொடர்கிறது.
  • பொருளாதார வல்லரசாவது முக்கியமல்ல, ஆரோக்கியமான குடிமக்களும், ஊட்டச்சத்துக் குறைவில்லாத குழந்தைகளும் உள்ள தேசமாக மாறுவதுதான் முக்கியம். இது குறித்தும் கவலைப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நன்றி: தினமணி (26-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories