TNPSC Thervupettagam

அடிப்படை வசதிகள் தேவை

May 4 , 2023 566 days 433 0
  • கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தாலும் சிறப்பான பயிற்று முறை, போதிய அடிப்படை வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக பெற்றோர் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
  • மக்களின் மாறிவரும் மனநிலைக்கேற்ப தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை ஒரு காலகட்டத்தில் அதிகரித்தது. அதிகப்படியானோர் சிறப்பான பயிற்றுமுறை, போதுமான அடிப்படை வசதிகள் போன்றவற்றை எதிர்பார்த்து தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
  • அங்கு பயிலும் சிறார்கள் எண்ணிக்கை குறைவு, மாணவர்கள் இல்லாததால் பள்ளிகள் மூடல் என்ற பல்வேறு நிலைகளை அரசுப் பள்ளிகள் எதிர்கொண்டன.
  • இந்நிலையில் கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் அரசுப் பள்ளிகளில் எதிர்பாராத அளவில் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது.
  • இதனால் 2020-21 காலகட்டத்தில் நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. 2020-21-ஆண்டின் கல்விக்கான மாவட்ட அளவிலான தகவல் அறிக்கையில் அந்த ஆண்டில் 15.09 லட்சமாக இருந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 2021-22-இல் 14.89 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட இதர நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிகள் மூடப்பட்டதாலேயே பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • பெருந்தொற்றின் தாக்கத்தால் பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முந்தைய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக சரிந்தது. எனினும் 2020-21-இல் 25.38 கோடியாக இருந்த தொடக்க நிலையிலிருந்து உயர்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கை 2021-22-இல் 25.57 கோடியாக அதிகரித்தது. இது 7.85 சதவீத உயர்வாகும்.
  • பெருந்தொற்று காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுப் பள்ளிகளே அடைக்கலம் அளித்தன. அவ்வாறு அதிகரித்த மாணவர் சேர்க்கை தொடர்ந்து வரும் காலங்களிலும் அதிகரிக்க வேண்டுமானால், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
  • பொதுவாக அரசுப் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பிற்குப் பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெறும். இதுவே தனியார் பள்ளிகளுக்கு சாதகமான அம்சமாக இருந்து வ்நதது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளிகளில் அதிகரித்து வந்த மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளில் சரியத் தொடங்கியது. இதற்கு பெருந்தொற்று மட்டுமின்றி வேலைவாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு, உயர்கல்வியில் நிதியுதவி போன்றவையும் காரணங்களாகும்.
  • அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. மாவட்டந்தோறும் "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' எனும் தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.
  • இத்தகைய செயல்பாடுகள் மட்டுமே அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரித்துவிடாது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைப் பெருக்குவது அவசியமான ஒன்றாகும்.
  • கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் அரசுப் பள்ளிகள் ஓரளவு மேம்பட்டிருக்கின்றன. இருப்பினும் குடிநீர், கழிவறை வசதிகள் அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • ஏனெனில், அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகள் அதிக அளவிலான பெற்றோரை ஈர்ப்பதற்கு பயிற்று முறையோடு போதிய குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிளும் காரணமாகும். அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒன்று வீதம் குடிநீர் குழாய், 50 மாணவர்களுக்கு ஒன்று வீதம் கழிப்பறை அமைந்திருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அரசாணை தெரிவிக்கிறது.
  • ஆனால், இவ்வாறு அமைந்துள்ள அரசுப் பள்ளிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பற்றாக்குறை அளவில் இவ்வசதிகள் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மத்தியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் இல்லாத பள்ளிகளும் இருக்கவே செய்கின்றன.
  • இன்று தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் விளையாட்டு பாடவேளையை இதர பாடங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறன்றன. இதனால் விளையாட்டு மைதானம் சுருங்கியும், சுத்தமற்றதாகவும் மாறிவருகிறது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற நிலை இருப்பதற்கு வாய்ப்பில்லை.
  • அதனால் அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளைக் கண்டறிந்து அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆரம்பப் பள்ளிகள் தொடங்கி மேல்நிலைப் பள்ளி வரையில் அதிகப்படியானோர் பயிலும் பள்ளிகளைக் கண்டறிந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுதான் அரசுப் பள்ளிகள் மீது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.
  • அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர் தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை உருவாகி அரசுப் பள்ளிகள் மாணவர்களின்றி மூடப்படும் நிலை ஏற்படுமாயின் அது எதிர்கால சமூகத்திற்கு உகந்ததல்ல. ஆரோக்கியமான சமூகத்தில் புதிய பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமே தவிர, இருக்கும் பள்ளிகள் மூடப்படக்கூடாது.
  • ஒரு பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டால்கூட அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். மாறாக அங்கு பணிபுரியும் ஆசிரியர்களையும், பயிலும் குழந்தைகளையும் அருகிலுள்ள பள்ளிக்கு மாற்றுவது சரியான தீர்வாகாது. அடிப்படை வசதிகளைப் பெருக்கி அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் தீர்வாகும்.

நன்றி: தினமணி (04 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories