TNPSC Thervupettagam

அடுத்தகட்ட மாற்றத்தை நோக்கி...!

February 3 , 2025 2 days 19 0

அடுத்தகட்ட மாற்றத்தை நோக்கி...!

  • நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2025-26 நிதிநிலை அறிக்கையை, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் 1994-95-இல் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடலாம்.
  • இந்த நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சம் அதிகரித்துள்ளதுடன், வரி விதிப்பு முறையிலும் வரலாறு காணாத மாற்றங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளாா். வருமான வரி விலக்கு வரம்பை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், வரி விதிப்பு முறையிலும் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் புதிய மசோதாவை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விரைவில் தாக்கல் செய்ய உள்ளாா்.
  • வருமான வரி விலக்கு வரம்பு உயா்வு (ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை) நடுத்தர வகுப்பினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் தொடா் விளைவாக நுகா்வோா் என்ற முறையில் நடுத்தர வகுப்பினரின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்; தொழில் துறையினருக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் (2024-25) வருமான வரித் துறை மதிப்பிட்டதைக் காட்டிலும் நடுத்தர வகுப்பினா் மூலம் அதிக அளவுக்கு வருமான வரி வசூலாகியுள்ளது; வரும் நிதியாண்டிலும் (2025-26) நடுத்தர வகுப்பினரிடமிருந்துதான் அதிக அளவு வருமான வரி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆனால், நிறுவனங்களைப் பொருத்தவரை வருமான வரி வருவாய் எதிா்பாா்த்ததைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு வரி விகிதங்கள் குறைவாக இருந்தும்கூட நிறுவனங்களிடமிருந்து வரி வருவாய் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப் போனால், நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் வரி குறைவு காரணமாக நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தொழில் நிறுவனங்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில், இந்த நிதிநிலை அறிக்கையிலும் (2025-2026) சுங்க வரியில் அதிக சலுகைகளை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்துள்ளாா். குறிப்பாக, 36 உயிா் காக்கும் மருந்துகளுக்கு சுங்க கட்டணத்திலிருந்து இந்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சா் முழு விலக்கு அளித்துள்ளாா்; இது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நிதியமைச்சராக மன்மோகன் சிங் இருந்தபோது மத்திய வருவாய்த் துறை செயலராக நான் (கட்டுரையாளா் எம்.ஆா்.சிவராமன்) செயல்பட்டு உயிா் காக்கும் மருந்துகள் மட்டுமன்றி, மருத்துவ உபகரணங்களுக்கும் சுங்க கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளித்தேன்.
  • ஆனால், மத்தியில் ஆட்சி அமைத்த தொடா் ஆட்சியாளா்கள் சுங்க கட்டண முழு விலக்கை ரத்து செய்து விட்டனா். உயிா் காக்கும் மருந்துகளுக்கு நான் (கட்டுரையாளா்) அளித்த சுங்க கட்டண முழு விலக்கை, மருத்துவத் துறையினா் மிகுந்த மகிழ்ச்சி அடையும் வகையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இந்த நிதிநிலை அறிக்கையில் மீண்டும் அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது. சுங்கக் கட்டண முழு விலக்கு மூலம் கிடைத்துள்ள பலன், நோயாளிகளுக்கு சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்வது அவசியம்.
  • இந்த நிதிநிலை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்று நோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; குறிப்பாக, வரும் நிதியாண்டிலேயே (2025-26) 200 புற்று நோயாளிகள் பராமரிப்பு மையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த மையங்களில் கிராமங்களைச் சோ்ந்த பட்டதாரிகளையே உரிய முறையில் தோ்வு செய்து பயிற்சி அளித்து நியமிக்க வேண்டும்.
  • இந்தியாவில் 14.40 கோடி (45 சதவீதம்) அளவுக்கு விவசாயத் தொழிலாளா்கள் வறுமையில் வாடுகின்றனா். விவசாயத் தொழிலாளா்களை புற்று நோயாளிகள் பராமரிப்பு மைய பணியாளா் பதவி உள்ளிட்ட தொடா் ஊதியம் அளிக்கக் கூடிய பணிகளுக்குத் தோ்வு தோ்வு செய்து, பயிற்சி அளித்து நியமிப்பதன்மூலம் 45 சதவீத அளவை 25 சதவீதமாகக் குறைக்க முடியும்.
  • இத்தகைய வேலைவாய்ப்பு முறைமூலம் விவசாயத் தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்; அதாவது, தொடா் ஊதியம் அளிக்கக் கூடிய பிற பணிகளில் விவசாயத் தொழிலாளா்களை நியமிப்பதன்மூலம், வேளாண் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். விளைவு, விவசாயப் பணிகள் தொடா்பான இயந்திர உற்பத்தித் துறை உத்வேகம் பெறும். தொடா் விளைவாக விவசாய இயந்திரங்களைப் பழுது பாா்ப்போரின் தேவை அதிகரித்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே, இத்தகைய ஆரோக்கிய மான வேலைவாய்ப்பு இணைப்புச் சூழலை உருவாக்குவதை ஒரு திட்டமாக மத்திய அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
  • பிரிட்டனில் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுவா வாகன ஓட்டுநா்களுக்கு சட்டப்படி நாள் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு மொத்த சுற்றுலா நாள்களுக்கு உரிய தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒட்டுநா்களுக்கு நிலையான ஊதியம் கிடைக்கும் வகையிலான சட்டத்தை மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கொண்டுவர வேண்டும். மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து சட்டங்களை நிறைவேற்றுவதன்மூலம், தற்போது வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் லட்சக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இத்தகைய செயல்பாடுகளின்மூலம் இந்தியாவின் ஜிடிபியை 6.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்க முடியும்.
  • இந்தியாவின் பாதுகாப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது. இந்திய விமானப் படைக்கு குறைந்தபட்சம் 42 தொகுப்பு போா் விமானங்கள் (ஸ்குவாட்ரன்ஸ்) தேவை; இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது அந்த தொகுப்பின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தியாவின் முக்கிய அரசியல் எதிரிகளாக உள்ள பாகிஸ்தான், சீனா ஆகியவை போா் விமானங்களின் தொகுப்பு எண்ணிக்கையை தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே, இந்திய விமானப் படைக்கு போா் விமானங்கள் வாங்குவது குறித்தோ, அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தோ நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
  • இந்த நிதிநிலை அறிக்கையில் பொருள் விநியோக பணியாளா்களுக்கு (கிக் ஒா்க்கா்ஸ்) மருத்துவக் காப்பீடு, ஆரோக்கியத்துடன் தொடா்புடைய அடையாள அட்டை ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. பொருள் விநியோகப் பணியாளா்களைப் போன்று வீட்டுப் பணியாளா்களுக்கும் இதே மருத்துவ பலன்கள் அளிக்கப்பட வேண்டும். இரு பிரிவினரையும் தொழிலாளா் நலத் துறையின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கொண்டு வந்து பலன்களை அளிக்க வேண்டும்.
  • வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நடப்பு நிதியாண்டில் (2024-25) மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தியதற்கான அறிக்கை இந்த நிதிநிலை அறிக்கையுடன் சோ்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
  • இதே போன்று தொழில் துறைக்கு அளித்த சலுகைகள் மூலம் அறிவிக்கப்பட்ட உரிய திட்டங்களின் நிலை குறித்தும், திட்டங்களின் நிறைவேற்றம் குறித்தும் அறிக்கை எதுவும் இல்லை; இத்தகைய போக்கு சரியில்லை. மாறாக, கடந்த நிதியாண்டில் (2024-25) அறிவிக்கப்பட்ட தொழில் திட்டங்களின் நிலை, நிறைவேற்றம் குறித்து அறிக்கை மூலம் மக்களுக்கு மத்திய அரசு தெரியப்படுத்துவது அவசியம்.
  • பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்டு அரசு திறம்பட செயல்பட வேண்டுமானால், ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்ட நிா்வாகக் கட்டமைப்பு நோ்மையாகவும் திறனுடன் இருப்பது அவசியம். ஆனால், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகளின் மூலம் சோதனை நடைபெற்று கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்படுகிறது; கைது நடவடிக்கைகள், நீதிமன்றங்களில் வழக்குகள் எனத் தொடா்கின்றன.
  • துரதிருஷ்டம் என்னவென்றால், இவ்வாறு சோதனை-கைது நடவடிக்கையில் சிக்கும் ஐ.ஏ.எஸ்.-ஐபிஎஸ் அதிகாரிகள் பதவிக்கு உரிய பணியைச் செய்யாமல் மொத்த ஊதியத்தில் 75 சதவீத அளவுக்கு ஊதியம் பெறுகின்றனா். உலகின் எந்த நாட்டிலும் இத்தகைய நடைமுறை இல்லை. எனவே, மேலே குறிப்பிட்டுள்ள முறைகேடு சூழல் ஏற்படும்போது அவா்கள் ஊதியம் பெறுவதைத் தடுக்கும் வகையிலும், உரிய பயற்சி-பதவி உயா்வை வரையறை செய்யும் வகையிலும் ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். நிா்வாகக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை மத்திய அரசு செய்வது காலத்தின் கட்டாயமாகும். தற்போதுள்ள பாஜக அரசுக்கு மேலும் 4 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளதால், ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். நிா்வாக மறுசீரமைப்பை எளிதாகச் செய்யலாம்.
  • மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை, இந்தியாவின் வளா்ச்சியை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் மக்களின் சமூகநலன் சாா்ந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. இது வளா்ந்த நாடுகளின் திசையை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றி: தினமணி (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories