- சீனாவில் பெரும் தொழிலதிபர்கள் தொடர்ச்சியாக மாயமாகி வரும் நிலையில், அதிபர் ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமான அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் தென்படாமல் போவதும், பின்னர் நீக்கப்படுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தென்படாமல் மாயமானார். இதேபோன்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்ஃபூ கடந்த ஆகஸ்டிலும், ராணுவத்தில் அணுசக்தி ஏவுகணைகளுக்குப் பொறுப்பாளரான கமாண்டர் ஜெனரல் லி யுசாவோ, துணைப் பொறுப்பாளரான ஷூ ஸோங்போ ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும் இருந்து தென்படவில்லை.
- ஜின்பிங்கின் நெருங்கிய வட்டத்தில் "மிகுந்த நம்பிக்கை'க்கு உரியவர்களான இவர்கள் அனைவருமே கடந்த 2022 அக்டோபரில் நடந்த கட்சியின் மாநாட்டில்தான் (காங்கிரஸ்) இந்தப் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்கள் மாயமானது தொடர்பாக மெளனம் சாதித்து வந்த சீன அரசு, கின் காங் நீக்கப்பட்டதாக கடந்த ஜூலையிலும், லி ஷாங்ஃபூ, லி யுசாவோ, ஷூ ஸோங்போ நீக்கப்பட்டதாக கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியும் அறிவித்தது. மெளனம் தொடர்ந்தபோதே, கின் காங்குக்கு பதிலாக வாங் யீ வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- ஜின்பிங்கின் சீடராக அறியப்பட்ட கின் காங்கின் பெற்றோர்களும், அவர்களது முந்தைய தலைமுறையினரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டவர்கள். அங்கு இதுபோன்ற தலைமுறை இப்போது அருகி வருகிறது. கட்சியின் சித்தாந்தத்தில் அதிதீவிரப் பிடிப்பு உள்ளவர் கின் காங். வெளிப்படையாகப் பேசக் கூடியவர். அவருக்கு கடந்த மார்ச்சில்தான் அமைச்சர்களிலேயே கூடுதல் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
- அமெரிக்காவில் சர்வதேசத் தலைவர்களைப் பேட்டி எடுக்கும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஃபு ஷியோடியானுடன் கின் காங்குக்கு உள்ள திருமணம் கடந்த உறவினாலேயே அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் அதிகார வர்க்கத்தில் நெருக்கமானவர்கள் நீக்கப்படுகின்றனர் என்றால், மறுபுறம் பெரும் தொழிலதிபர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
- தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா குழும நிறுவனரான ஜாக் மா குறுகிய காலத்தில் சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் முதன்மையானவராக ஆனார். 2020 அக்டோபரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் ஜாக் மா பேசியபோது, பாரம்பரிய வங்கிகள் "அடகுக் கடை மனோநிலை'யில் செயல்படுவதாகப் பேசியது அவரது எதிர்காலத்துக்கே உலைவைத்தது.
- அடுத்த மாதம், அவரது நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் சீன அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் கடந்த 3 ஆண்டுகளாகப் பொதுவெளியில் எங்குமே தென்படவில்லை. ஆனால், மற்ற தொழிலதிபர்களைப்போல இவர் கைது செய்யப்படவில்லை.
- இதற்கு முன்னதாக, இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வோல்வெர்ஹாம்ப்டன் வான்டெரெர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்த ஃபோசன் நிறுவனத்தின் தலைவரான குவோ குவாங்சாங் 2015 டிசம்பரில் காணாமல் போனார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அறிவிக்கப்பட்டது.
- அதன் பின்னர், "டுமாரோ ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் தலைவரான ஷியாவோ ஜியான்ஹுவா 2017-இல் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டார். "கண்துடைப்பு' விசாரணைக்குப் பின்னர் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 பில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
- மனைவணிகப் பெரும்புள்ளியான ரென் ஸிகியாங், அதிபர் ஜின்பிங்கின் பெயரைக் குறிப்பிடாமல் கரோனா தீநுண்மி தொற்றைக் கையாளும் விதம் கோமாளித்தனமாக உள்ளது என கடந்த 2020 மார்ச்சில் கருத்து கூறினார். வந்தது வினை. பின்னர் காணாமல் போனார். கைது செய்யப்பட்டார். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தானே முன்வந்து ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
- ஊழல் குற்றச்சாட்டில், சீன ஆயுள் காப்பீட்டு நிறுவன முன்னாள் தலைவர் வாங் பின்னுக்கு கடந்த செப்டம்பரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது."சீனா ரெனாய்சென்ஸ்' முதலீட்டு வங்கியின் நிறுவனரான பாவோ ஃபேன் கடந்த பிப்ரவரியில் மாயமானார்.
- இந்தப் பட்டியலில் அண்மையில் இணைந்திருப்பவர் டோயு நிறுவனத்தின் நிறுவனரும் பெரும் தொழிலதிபருமான சென் ஷாவோஜி (39). அந்த நாட்டில் மிகவும் பிரபலமான ஆன்லைன் நேரலை விளையாட்டுத் தளமாக டோயு உள்ளது. இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் தென்படவில்லை.
- கடந்த 2022 அக்டோபரில் நடந்த மாநாட்டில்தான் (காங்கிரஸ்) ஜின்பிங் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டார். 1980-களுக்குப் பிறகு அதிபர் பதவியில் யாரும் 2 முறைக்கு மேல் இருந்ததில்லை. அந்த நிலையை மாற்றி, காலவரம்பின்றி அதிபராகத் தொடரவும், கட்சியின் பொதுச் செயலராகவும் மத்திய ராணுவ ஆணையத்தின் (கமிஷன்) தலைவராகவும் நீடிக்கும் வகையிலும் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார். அதன் பின்னர் அவரது செயல்பாடு உடும்புப்பிடியாக ஆகியுள்ளது.
- ரஷிய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் போல தனக்கு எதிராக முணுமுணுப்பவர்களை மாயமாக்கிக் களையெடுக்கும் பாணியில் ஷி ஜின்பிங் செயல்படுகிறார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதிபர்கள் அதிரடியாக மாற்றப்படுவதும், அவர்கள் மற்றவர்களை ஓரங்கட்டுவதும் ரஷியா, சீனா போன்ற கம்யூனிஸ சர்வாதிகாரம் நடக்கும் நாடுகளில் புதிதொன்றுமல்ல. அதனால், அடுத்தது யார் என்று சீனா மட்டுமல்ல, உலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நன்றி: தினமணி (15 – 11 – 2023)