TNPSC Thervupettagam

அடுத்தவர் வலி ஏன் சிலருக்குப் புரிவதில்லை?

August 10 , 2024 5 hrs 0 min 27 0
  • மனித இனம் என்னதான் கூட்டமாக நாகரிகம் பேணி வாழ்ந்தாலும் அடிப்படையில் மனிதனிடம் இருப்பது ஒரு விலங்கு மனம்தான். கோபம், அடுத்தவர்களைத் தாக்கும் உந்துதல் போன்றவை இயல்பாக அவ்வப்போது நம்மிடம் வந்து செல்லும். அவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான் அமைதியான வாழ்க்கையை வாழ மனிதன் முயன்றுவருகிறான்.
  • இந்தச் சமூக ஒழுங்கு கடைப் பிடிக்கப்படுவதற்கு மனிதரது மூளை, மனதின் முதிர்ச்சி, வளரும் சமூகச் சூழல், வாழ்க்கையில் எதிர்கொண்ட சம்பவங்கள் போன்றவை காரணங் களாக அமைகின்றன. இவற்றில் பின்னடைவோ பாதிப்போ ஏற்படும் போது அது சமூகச் சிக்கலாக உருவெடுக்கிறது. குற்றச் செயல்களில் சிறுவர்கள், பதின்வயதினர் ஈடுபடுவதை இந்தக் கோணத்திலும் நாம் அணுக வேண்டும்.
  • இளம்வயதுக் குற்றவாளிகளின் (juvenile delinquency) உளவியல் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள் காலம் காலமாகவே அலசப்பட்டு வந்திருக் கின்றன. ஆனால், சமீப காலமாக அந்த எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. முன்பெல்லாம் சிறு சிறு திருட்டுச் சம்பவங்களில் சிறார்கள், பதின் வயதினர் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது.
  • ஆனால், தற்போது அதீத வன்முறையை வெளிப்படுத்தும் கொலைகள், பாலியல் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுகின்றனர். நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா வழக்கில்கூட பதின்வயது குற்றவாளி ஒருவர் இருந்தார். சாதித் தகராறு காரணமாக உடன் படிக்கும் மாணவனையே வெட்டித் தாக்கிய கொடூரச் செயலும் தென் தமிழகத்தில் நடந்து நம்மைத் திகைக்க வைத்ததை மறக்க முடியாது.

மூளையின் முதிர்ச்சியின்மை:

  • உடலின் அமைப்பைப் பொறுத்தவரை மனித மூளைதான் விலங்கு களிலேயே மிகவும் சிக்கலானது. பிறக்கும்போது மிகவும் முதிர்ச்சியற்று இருக்கும் மூளை, வளர வளர மாறுதல் அடைகிறது. மூளையின் நரம்புகள் முழுமையான வளர்ச்சி அடைவதும் நரம்புகளுக்கிடையேயான இணைப்புகள் வலுப்பெறுவதும் பதின் பருவத்தில்தான் நடைபெறும்.
  • இந்த மாறுதல்கள் எல்லாம் முடிவடைந்து ஓரளவு முதிர்ச்சியும் பொறுப்பும் வருவதற்கு 18 முதல் 25 வயது வரைகூட ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் மனதில் ஓர் உந்துதல் தோன்றியதும் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்கிற விழைவு அதிகமாக இருக்கும்.
  • இந்த வயதில் காரண காரியங்களை ஆராய்ந்து தனது உந்துதல்களைத் தள்ளிப் போடுவது மிகக் குறைவாக இருக்கும். ஆகவே இயல்பிலேயே சிறார்கள், பதின்வயதினருக்கு உந்துதல்களைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக இருக்கிறது. அதனால்தான் பைக்கோ மொபைலோ கேட்டவுடன் வாங்கித்தரவில்லை என்றால் அவர்களுக்கு அளவு கடந்த கோபம் வருகிறது.

மூளை வளர்ச்சிச் சிக்கல்கள்:

  • மூளை முதிர்ச்சி அடைவது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சில குழந்தைகளின் மூளை முதிர்ச்சியடையும்போது ஏற்படும் சில பாதிப்புகள் அதீத துறுதுறுப்பு - கவனமின்மை (Attention Deficit Hyperactivity Disorder), கற்றல் குறை பாடு (Dyslexia), பிறரது மனதைப் புரிந்துகொண்டு பழகுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆட்டிசம் போன்றகுறைபாடுகள், மூளை வளர்ச்சிக் குறைபாடு (Intellectual Disability) போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
  • சிறுவயதில் குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற பாதிப்புகள் இருக்கலாம். அதனால், இது போன்ற மூளை வளர்ச்சிக் சிக்கல் களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.

எப்படிக் கண்டறிவது?

  • குழந்தை பிறந்ததிலிருந்து வளர்ந்து பதின்வயதைக் கடக்கும் வரை மூளை முதிர்ச்சி அடைய அடைய ஒவ்வொரு விஷயமாகக் கற்றுக்கொண்டுவரும். இதை வளர்ச்சி மைல்கற்கள் என்கிறோம். பொதுவாக நான்கு வகையான மைல்கற்கள் இருக்கின்றன.

உடலியக்கம் சார்ந்த மைல்கற்கள் (Motor milestones):

  • குப்புற விழுவது, தானாக எழுந்து உட்கார்வது, யாரும் பிடிக்காமல் நிற்பது, நடப்பது போன்றவற்றை எல்லாம் குறிப்பிட்ட காலத்தில் கற்றுக்கொள்ளும். உதாரணமாக, ஒரு வயதில் குழந்தை நடக்க ஆரம்பிக்கும்.

தகவல் தொடர்பு, பேச்சு சார்ந்த மைல்கற்கள் (Communication mile stones):

  • ஒரு வயதில் அம்மா, அப்பா என ஒரு வார்த்தை பேசத் தொடங்கும். இரண்டாவது வயதில் இரண்டு வார்த்தைகளைச் சேர்த்துப் பேசத் தொடங்கும். நான்கு வயதில் ஓரளவு சரளமாக வாக்கி யங்களை அமைத்துப் பேசும்.

சமூக உறவு மைல்கற்கள் (Social milestones):

  • இவைதான் இக்கட்டுரைக்கு முக்கியமானவை. பிறரோடு பழகுவதில் முதிர்ச்சி அடைவது. பிறரைப் புரிந்துகொள்வது, அவர்களைத் துன்புறுத்தக் கூடாது; நம்மைப் போலவே அவர்களுக்கும் மனம், உணர்வுகள் இருக்கும் என்றெல்லாம் புரிந்துகொண்டு அதன்படி நடப்பது.
  • ஒரு குழந்தை மூன்று மாதத்தில் முகம் பார்த்துச் சிரிப்பதில் தொடங்கி தாய், தந்தை போன்றவர் களுடன் நெருக்கத்தை உருவாக்கிக் கொள்வது, நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது போன்றவை.

அறிவுத் திறன் சார்ந்த மைல்கற்கள் (Cognitive milestones):

  • கற்றுக்கொள்வது, கணித அடிப்படைகளைப் புரிந்து கொள்வது போன்ற திறன்கள்.

கண்ணாடி நியூரான்கள்:

  • நமது மூளையில் அடுத்தவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனை அடைவதற்குக் காரணமாக இருக்கும் செல்கள் கண்ணாடி நியூரான்கள் எனப்படுகின்றன. அதாவது நமக்குக் காலில் முள் குத்தினால் அதை உணர, மூளையில் சில இடங்கள் உதவுகின்றன. அதேபோல் அடுத்தவரது காலில் முள் குத்தினாலும் அதை உணர மூளையில் சில இடங்கள், செல்கள் உதவுகின்றன.
  • மூளை வளர்ச்சி பாதிப்பால் இந்தப் பகுதி சரியாக முதிர்ச்சி அடையவில்லை என்றால் அக்குழந்தைகளுக்கு அடுத்தவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்வது, அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என உணர்வது போன்ற திறன்கள் குறைவாக இருக்கும்.

சமூக விரோத மனப்பான்மை:

  • கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சமூக விரோத ஆளுமைச் சிக்கல் (anti social personality disorder) உடையவர்களாகக் கருதப்படு கின்றனர். இவர்கள் சிறுவயதிலேயே ஒழுக்க விதிகளை மறுப்பது, பிறரைத் துன்புறுத்துவது, விதிமீறல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். குறிப்பாக, இவர்களிடம் கீழ்படியாத்தன்மை அதிகமாக இருக்கும் (opposition defiant disorder).

ஆரம்ப அறிகுறிகள்:

  • மூளையில் ஏற்படும் பாதிப்புகளில் இது போன்ற மைல்கற்களை அடைவதில் காலதாமதம் ஏற்படும். உதாரணமாக நடப்பது, பேசுவது போன்றவை தாமதமாக இருக்கலாம். குழந்தைகளுக்குக் கற்றல் குறைபாடு இருந்தால் பள்ளியில் பாடங்களைக் கற்பதில் சிரமங்கள் இருக்கலாம். ஓரிடத்தில் அமர்வது, பொறுமையாகக் காத்திருப்பது, விதிகளை மதிப்பது போன்றவற்றில் சிக்கல்கள் இருக்கும்.
  • பள்ளியில் பிற குழந்தைகளோடு பழகுவதில் சண்டை போடுவது, வம்பிழுப்பது, அடிப்பது (bullying) போன்ற பிரச்சினைகள் இருக்கக்கூடும். மூளையின் பிற பாதிப்புகளாக வலிப்பு வருவது போன்ற பிரச்சினைகளும் இருக்கலாம்.
  • மேற்குறிப்பிட்ட சிக்கல்கள் குழந்தைகளுக்கு இருந்தால் ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற முற்பட வேண்டும். அத்துடன் உரிய ஆலோசனையின் பேரில் உடற் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை இக்குழந்தைகளுக்குப் பலன் தரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories