அடேங்கப்பா அமெரிக்க அதிபர்கள்!
- அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கப் போகும் நேரம் இது. இந்த நேரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர்களைப் பற்றிய சில வியக்க வைக்கும் விந்தையான தகவல்களை அமெரிக்க மக்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
- அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பது தெரிந்த தகவல்தான். அவரது பெயரில்தான் அமெரிக்காவின் தலைநகரத்துக்கு வாஷிங்டன் என்று பெயர் சூட்டப்பட்டது.
- ஆனால், ஜார்ஜ் வாஷிங்டனும் சரி, அவருக்குப்பிறகு அமெரிக்காவின் 16ஆவது அதிபராக பதவியேற்ற ஆபிரகாம் லிங்கனும் சரி, ஹேப்லோ குரூப் என்கிற ஒரே மரபணுவைச் சேர்ந்தவர்கள் என்பதை நம்ப முடிகிறதா?
- அது என்ன ஹேப்லோ குரூப்?
- இப்போது கசக்ஸ்தான் என்று அழைக்கப்படும் மத்திய ஆசியப் பகுதியிலே பழங்காலத்தில் நியாண்டர்தால், டெனிசோவன் இன மக்கள் வாழ்ந்தார்கள். 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது ஹோமோசேபியன் இனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தார்கள்.
- இந்த மூன்று இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒரு புதிய மரபணு உருவானது. அந்த மரபணுவைச் சேர்ந்தவர்கள்தான் ஹேப்லோ குரூப் என்று அழைக்கப்படுகிறார்கள்.
- ரஷியாவின் ரொமனோவ் அரச வம்சத்தைச் சேர்ந்த மகா பீட்டர், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, டென்மார்க், நார்வே அரச குடும்பத்தினர் எல்லோரும் ஹேப்லோ குரூப் மரபணுவைக் கொண்டவர்கள்தான். அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கனும் கூட அதே மரபணு கொண்டவர்கள்தான் என்பது ஒரு வியப்பான விஷயம் இல்லையா?
- பிரீமேசன் என்கிற அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு ரகசிய அமைப்பு. அமெரிக்க அதிபர்களில் 14 பேர் பிரீமேசன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.
- அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன், கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் மேல் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார். அந்த பைபிள் நியூயார்க் நகரத்தில் உள்ள மேசானிய அமைப்பின் முதல் எண் லாட்ஜில்தான் இருக்கிறது. அமெரிக்க அதிபர்கள் ஒவ்வொரு முறை பதவியேற்கும்போதும் குறிப்பிட்ட அதே பைபிளைத்தான் பயன்படுத்துவது வழக்கம். அமெரிக்க அதிபர்களில் ஜெரால்ட் போர்டு உள்பட மொத்தம் 14 பேர் பிரீமேசன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது.
- அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார் என்பது நமக்குத் தெரியும். அமெரிக்க அதிபர்களில் கொலை செய்யப்பட்டு இறந்த முதல் அதிபர், ஆபிரகாம் லிங்கன்தான். உலக வரலாற்றை அப்போது உலுக்கி எடுத்த ஒரு துன்பியல் நிகழ்ச்சி அது.
- 1865ஆம் வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி, ஜான் வில்கின்ஸ் பூத் என்பவர் லிங்கனைச் சுட்டார். ஒரு நாடகக் கொட்டகையில் இந்த சம்பவம் நடந்தது.
- சுடப்பட்ட ஆபிரகாம் லிங்கன் உடனடியாக இறக்கவில்லை. காயத்தோடு அவர் மரணப் படுக்கையில் போராடிக்கொண்டிருந்தார். அப்போது லிங்கனின் மகன் ராபர்ட் டோட் அருகில் இருந்தார். அப்பாவின் உயிர் பிரிவதை சிறுவன் ராபர்ட் டோட் கண்முன்னால் பார்த்தார்.
- இதே லிங்கனின் மகன் ராபர்ட் டோட், அதன்பிறகு இன்னும் இரண்டு அமெரிக்க அதிபர்களின் மரணங்களை நேரில் பார்த்தார் என்பது ஓர் ஆச்சரியமான விஷயம். அமெரிக்க அதிபர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஏ.கார்பீல்ட் இறந்தபோதும், 1901ஆம் ஆண்டு மற்றொரு அமெரிக்க அதிபர் வில்லியம் மெக்கன்லி படுகொலை செய்யப்பட்டபோதும் அவர்களின் அருகில் இருந்தார் ராபர்ட் டோட்.
- அமெரிக்க அதிபர்களில் லிங்கன், ஜான் எஃப்.கென்னடி இருவரும் அதிபர் பதவியில் இருந்தபோது சுடப்பட்டு இறந்தவர்கள் என்பது தெரிந்ததுதான். இந்த இரண்டு பேருக்கும் இடையில் இருந்த சில ஒற்றுமைகள் இப்போதும்கூட பலரைத் திகைக்க வைக்கின்றன.
- லிங்கன் 1860ஆம் ஆண்டு அதிபரானார். கென்னடி 1960ஆம் ஆண்டு அதிபரானார். லிங்கனின் செயலாளர் ஒருவரது பெயர் கென்னடி. கென்னடியின் செயலாளர் ஒருவரது பெயர் லிங்கன்.
- லிங்கனின் மனைவி மேரி, கென்னடியின் மனைவி ஜேக்குலின். இவர்கள் இருவருமே அதிபரின் மனைவியராக வெள்ளை மாளிகையில் வாழ்ந்தபோது குழந்தைகளை இழந்தவர்கள்.
- லிங்கனுக்கு எட்வர்ட், ராபர்ட் என்று இரண்டு சகோதரர்கள். இவர்களில் எட்வர்ட் 3ஆவது வயதில் இறந்துபோனார். ராபர்ட் நீண்டகாலம் வாழ்ந்தார். கென்னடிக்கு ராபர்ட், எட்வர்ட் என்று இரண்டு சகோதரர்கள். இவர்களில் ராபர்ட் படுகொலையானார். எட்வர்ட் நீண்ட காலம் வாழ்ந்தார்.
- லிங்கன், கென்னடி இருவருமே ஒரு வெள்ளிக்கிழமையன்று சுடப்பட்டார்கள். இரண்டு பேருமே தலையின் பின்புறமாகச் சுடப்பட்டு இறந்துபோனார்கள்.
- லிங்கனை துப்பாக்கியால் சுட்டவர் ஜான் வில்கின்ஸ் பூத். கென்னடியைச் சுட்டதாகக் கருதப்படுபவரின் பெயர் லீ ஹார்வி ஆஸ்வால்ட். இவர்களில் பூத், ஒரு நாடக கொட்டகையில் வைத்து லிங்கனைச் சுட்டார். பிறகு அவர் கிட்டங்கி ஒன்றில் வைத்து பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். ஆஸ்வால்ட், டல்லாஸ் நகரில் கிட்டங்கி ஒன்றின் அருகே கென்னடியைச் சுட்டார். பிறகு ஒரு நாடக கொட்டகையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
- லிங்கனுக்குப்பிறகு அமெரிக்க அதிபரானவர் ஆண்ட்ரூ ஜான்சன். அவர் 1808ஆம் ஆண்டு பிறந்தவர். கென்னடிக்குப்பிறகு அதிபர் பொறுப்பை ஏற்றவர் லிண்டன் ஜான்சன். இவர் 1908ஆம் ஆண்டு பிறந்தவர்.
- இதுபோல லிங்கன், கென்னடி இடையே இன்னும் சில பொருத்தங்களும் உள்ளன. அந்தப் பொருத்தங்கள் இன்னும்கூட பலரை வியப்படைய வைக்கின்றன.
- அமெரிக்கா பல்வேறு நாட்டவர்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு. அமெரிக்க அதிபர்களில் 37 பேர் ஆங்கில, ஐரீஸ் (ஐயர்லாந்து) வழித்தோன்றல்கள். அதேவேளையில், அமெரிக்க அதிபர்களில் மார்ட்டின் வான் புரன், தியோடர் ரூஸ்வெல்ட், பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆகிய மூன்று பேரும் நெதர்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள். ரூஸ்வெல்ட் என்றால் டச்சு மொழியில் ரோஜா வயல் என்று அர்த்தம்.
- அதேப்போல, அமெரிக்க அதிபர்களில் ஹுவர், ஐசனோவர் இரண்டு பேர்களும் ஜெர்மன்-சுவிஸ் வழித்தோன்றல்கள்.
- அமெரிக்க அதிபர்களில் ஒருவராக இருந்தவர் தியோடர் ரூஸ்வெல்ட். இவரது பெயரில்தான் கரடி பொம்மை டெடி பியர் என அழைக்கப்படுகிறது.
- அமெரிக்க அதிபர்களின் வரலாற்றில், ஊழல் பிரச்னை காரணமாக பதவியைத் துறந்தவர் ஒரேயொருவர்தான். அவர் ரிச்சர்ட் நிக்சன். அவர் தொடர்பான வாட்டர்கேட் ஊழல் உலகப்புகழ் பெற்றது.
- பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா என்ற பெண்மணி, பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் 44ஆவது அதிபராக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் வருவார் என்று கணித்திருந்தார். அதேப்போல அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பதவியேற்றவர் பராக் ஒபாமா. அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் ஒபாமாதான்.
- இந்த பராக் ஒபாமா, 1980ஆம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்குப் போய்வந்தார் என்று கூறி அமெரிக்கர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது பெயர் ஆண்ட்ரூஸ் டி பாசியாகோ. இவர் யார் என்று கேட்கத் தோன்றுகிறதா?
- பாசியாகோ, டைம் மெஷினில் ‘காலப்பயணம்’ செய்து பழைய வரலாற்றுக் காலங்களுக்குப் போய்வந்ததாகச் சொல்லிக் கொள்பவர். ‘1863ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம்தேதி காலப்பயணமாக டைம் டிராவல் செய்து அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள கெட்டிஸ்பர்க் பகுதிக்குப் போனேன். அங்கே ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற சொற்பொழிவைக் கேட்டேன்’ என்று சொன்னவர்தான் இந்த பாசியாகோ. காலப்பயணம் செய்த நேரம் அங்கிருந்த ஒருவரை வற்புறுத்தி தன்னை புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தை வேறு ஆதாரமாகக் காட்டியவர் பாசியாகோ. அந்த புகைப்படத்தில் பாசியாகோவும் இருந்தார்.
- அமெரிக்காவில் ஸ்கல் அண்ட் போன்ஸ் என்ற அமைப்பு உண்டு. அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் எச். புஷ்சின் அப்பாவான பிரெஸ்காட் புஷ்சுக்கு இந்த அமைப்புடன் தொடர்பு உண்டு என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
- அதன்பின் அதிபரான ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன் போன்றவர்களும்கூட அமெரிக்காவின் சில ரகசிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இன்றும்கூட இருக்கிறது.
நன்றி: தினமணி (08 – 11 – 2024)