TNPSC Thervupettagam

அடையாளம் தெரியாத வாகனங்களும் அநியாய இழப்புகளும்

December 5 , 2024 38 days 46 0

அடையாளம் தெரியாத வாகனங்களும் அநியாய இழப்புகளும்

  • சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராகவும் வாடகை இரு சக்கர வாகன ஓட்டியாகவும் பணிபுரிந்துவந்தார். நவம்பர் 20இல் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் ஒரு கார் அவரது வாகனத்தின் மீது மோதியதில், அவர் பாலத்துக்குக் கீழே வீசப்பட்டு உயிரிழந்தார். கார் உரிமையாளர் தலைமறைவானார்.
  • ஜூனில் ஒரு நாள், வழக்கம்போல வேலைக்குக் கிளம்பிய ரேவதி, தன் தாயும் மகளும் விபத்தில் இறப்பார்கள் என்று எதிர்​பார்த்திருக்கவே மாட்டார். ரேவதியின் குழந்தையை மருத்​துவரிடம் காட்டு​வதற்காக அவருடைய அம்மா, உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற​போது, திருமழிசை அருகே பின்னாலிருந்து வந்த ஒரு பைக் மோதியது. பேத்தியும் பாட்டியும் சாலையிலேயே உயிரிழந்​தனர்.
  • விபத்தை ஏற்படுத்திய பைக் உரிமை​யாளர் மின்னல் வேகத்தில் மறைந்​து​விட்​டார். இப்படி நிறைய சம்பவங்கள். விபத்தை ஏற்படுத்​தியவர் உடனடி​யாகத் தப்பிச் செல்லும் விபத்து​களில் (hit and run) பாதிக்​கப்​படு​பவர்​களின் துயரக் கதைகள் முடிவே இன்றித் தொடரக்​கூடிய​வையாக இருக்​கின்றன.
  • இந்தியாவில் ஒரு மணி நேரத்​துக்குச் சராசரியாக 53 சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. 19 பேர் பலியாகின்​றனர். சாலை விபத்தின் தீவிரம் (crash severity) என்பதில் 38.15 புள்ளி​களுடன் உலகின் மிக மோசமான 20 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்​கிறது. இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்து நிகழ்​வதில் அக்டோபர், 2023 நிலவரப்படி, தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்​கிறது. விபத்தால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் துயரம் எந்தச் சொல்லிலும் அடங்காதது. அதிலும் மொத்த சாலை விபத்து​களில் 10.36 சதவீதம், ‘ஹிட் அண்டு ரன்’னாகவே இருக்​கிறது.

வஞ்சிக்​கப்​பட்​ட​வர்கள்:

  • விபத்தை ஏற்படுத்​தி​யவர், அடிபட்டவரை அப்படியே விட்டு​விட்டு, காவல் துறைக்கும் தெரிவிக்​காமல் உடனடி​யாகத் தலைமறைவு ஆவது ‘ஹிட் அண்டு ரன்’. இதன் காரணமாகப் பலியானவர்​களும் காயமுற்​றோரும் வஞ்சிக்​கப்​பட்​ட​வர்கள் எனலாம். போக்கு​வரத்து குறைவான பகுதி​களில் இத்தகைய விபத்து நிகழும்​போது, அடிபட்டவர் தன்னந்​தனியாக உயிருக்குப் போராடும் நிலைக்கு உள்ளாகிறார்; இக்கட்டான நேரத்தில் அவருக்குக் கிடைக்க வேண்டிய முதலுதவி இல்லாமல் போகிறது.
  • 2022இல் நிகழ்ந்த இவ்வகை விபத்து​களில் பாதிக்கும் குறைவானவற்றில்தான் குற்றம் நிரூபிக்​கப்​பட்டது. இந்தப் போக்கு, வாகன ஓட்டு​தலில் இருக்க வேண்டிய பொறுப்பு ​உணர்வை மக்களிடையே மழுங்​கடிக்​கிறது என்றே கூறலாம். சென்னையைச் சேர்ந்த ஒருவர், 2019இல் டிரக் மோதி இறந்தார். அவரது 70 வயது தந்தை 3 ஆண்டுகளாக விசாரணைக்காக அலைந்​தார். அந்த டிரக் காப்பீடு செய்யப்​பட்​டிருக்க​வில்லை.
  • ஓட்டுநர் ராஜஸ்​தானைச் சேர்ந்​தவர். கவனக்​குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்​பட்​டிருந்​தா​லும், நேரில் பார்த்த சாட்சி இல்லை என்பதால் அவர் தண்டனை ஏதும் இன்றித் தப்பித்து​விட்​டார். இத்தகைய விபத்து​களுக்கு நேரடிச் சாட்சிகள் இருப்​பினும், அவர்கள் நீதிமன்​றத்​துக்கு வரத் துணிவ​தில்லை.
  • பல வேளைகளில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டறியப்​ப​டாமல், ‘அடையாளம் தெரியாத வாகன’​மாகவே பதிவு செய்யப்​பட்டு, அவை முடிவே காணாத வழக்குகள் ஆகின்றன. பாதிக்​கப்பட்ட குடும்​பங்கள், உரிய நிவாரணம் பெறுவதும் தடைபடு​கிறது. 2009இல் மாதவரத்தில் நிகழ்ந்த ஒரு விபத்து தொடர்பாக இழப்பீடு கோரும் வழக்கு 2023இல் சென்னை உயர் நீதிமன்​றத்தில் விசாரணைக்கு வந்தது.
  • தந்தையைப் பறிகொடுத்த தனக்கு இழப்பீடு வேண்டும் என ஒரு பெண் மனு தாக்கல் செய்திருந்​தார். ஆனால், வழக்கில் போலியான வாகனம் அப்பெண்ணின் தரப்பில் பதிவுசெய்​யப்​பட்​டிருந்ததை இழப்பீட்டுக்கான தீர்ப்​பாயம் கண்டறிந்தது. அதை உறுதிப்​படுத்திய நீதிமன்றமும் அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்தது.
  • விபத்தில் பாதிக்​கப்​பட்​ட​வர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்​காத​போது, குறுக்கு​வழியில் இறங்கக்​கூடும் என்பதற்கு இது ஓர் உதாரணம். “சாலை விபத்துகள் குறித்து காவல் துறை சரியாக விசாரணை செய்வ​தில்லை; ‘ஹிட் அண்டு ரன்’ விபத்து​களில் குறைவான இழப்பீடே கிடைப்​பதால் போலியான வாகனம் பதிவு செய்யப்​படுவது அதிகம் நிகழ்​கிறது” என அந்த வழக்கில் நீதிப​திகள் கவலை தெரிவித்​தனர். ‘ஹிட் அண்டு ரன்’ விபத்து​களில் பாதிக்​கப்​பட்​டோருக்கு இழப்பீடு வழங்கும் தற்போதைய முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்​தினர்.

அற மதிப்​பீடா, சட்ட நடவடிக்கையா?

  • அதீத வேகம்தான் ‘ஹிட் அண்டு ரன்’ விபத்து​களுக்கு முதன்மைக் காரணம். மற்றவர்​களுக்கு இடைஞ்சலோ ஆபத்தோ இல்லாதவாறு வாகனம் ஓட்டுவது ஒரு கலாச்​சாரமாக வளர்த்​தெடுக்​கப்பட வேண்டும். இது ஓர் அற மதிப்​பீடாகப் பள்ளி, கல்லூரி மாணவர்​களிடையே நிலைபெறுவது, பெரிய​வர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் எடுப்​ப​தை​விடப் பயன் கொடுக்கும்.
  • சிறை செல்ல வேண்டி​யிருக்கும் என்கிற அச்சத்​தோடு, சுற்றி​யிருப்​பவர்கள் தாக்கு​வார்கள் என்கிற யதார்த்​தமும் ஓட்டுநரை அந்த இடத்திலிருந்து தலைமறை​வாகச் செய்கிறது. விபத்தை ஏற்படுத்​தி​ய​வரைத் தாக்குவது பிரச்​சினைக்குத் தீர்வல்ல என்கிற புரிதல் சமூகத்தில் ஏற்படுத்​தப்பட வேண்டும். கண்காணிப்பு, அபராதம் உள்ளிட்ட அணுகு​முறை, அதீத வேகத்தில் வாகனம் ஓட்டு​வதையும் குறைக்​கும்.
  • தேசிய நெடுஞ்​சாலைகளிலும் மாநிலச் சாலைகளிலுமே விபத்துகள் அதிகம் நிகழ்​கின்றன. தங்க நாற்கரச் சாலைகளின் வருகைக்குப் பிறகு, கிராமங்கள் நெடுஞ்​சாலைகளால் இரண்டு பகுதி​களாகத் துண்டிக்​கப்​பட்டு​விட்டன. அன்றாடத் தேவைக்காக கிராம மக்கள் அடிக்கடி சாலையைக் கடக்கின்​றனர். நடைமேம்​பாலங்கள் அமைப்பது, சாலைக்கு நடுவே தடுப்புச்​சுவர் அமைப்பது போன்றவை விபத்து​களைத் தடுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்​றனர்.
  • டிசம்பர், 2023இல் புதிதாகக் கொண்டு​வரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்​தின்படி, ‘ஹிட் அண்டு ரன்’ விபத்தை ஏற்படுத்​தி​ய​வருக்கான சிறைத் தண்டனைக் காலம் 10 ஆண்டுகள் வரைக்கும் அதிகரிக்​கப்​பட்​டிருக்​கிறது. இதைக் கண்டித்து மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்​களைச் சேர்ந்த லாரி, டிரக் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
  • பனிமூட்டம், மழை போன்ற இயற்கைக் காரணிகள், மோசமான சாலைகள், பாதசா​ரிகள் அல்லது சக வாகன ஓட்டுநர்​களின் தவறுகள்கூட விபத்​துக்கு வழிவகுக்​கும்​போது, அதற்கான பழியை ‘ஹிட் அண்டு ரன்’ ஓட்டுநர்கள் மீது மட்டுமே சுமத்தக் கூடாது என்பது அவர்களது வாதம். இதில் உள்ள நியாயங்களை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

கேள்விக்​குரிய​தாகும் இழப்பீடு:

  • இந்தியாவில் 2022இல் 67,387 ஹிட் அண்டு ரன் விபத்துகள் நிகழ்ந்தன. இவற்றில் மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 161இன்படி, 205 விபத்து​களில்தான் இழப்பீடு கேட்கப்​பட்டது. அவற்றில் 95 கோரிக்கைகள்தான் நிறைவேற்​றப்​பட்டன. ஜனவரி, 2024இல் உச்ச நீதிமன்றம் இந்தப் பற்றாக்குறை குறித்துக் கேள்வி எழுப்​பியதோடு, இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்​கு​மாறும் அறிவுறுத்​தியது.
  • பாதிக்​கப்​பட்​ட​வர்கள் இழப்பீடு பெற முடியும் என்றுகூடத் தெரியாத நிலையில் இருப்பது குறித்து வருந்திய உச்ச நீதிமன்றம், வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி இழப்பீடு பெற்றுத்​தரும் பொறுப்பும் உடையவர் எனவும் மாவட்​டம்​தோறும் இயங்கும் சட்ட உதவி மையங்​களுக்கு இதைக் கண்காணிக்கும் பொறுப்பு உள்ளதாகவும் கூறியது.
  • சென்னை போன்ற நகரங்​களில் போக்கு​வரத்​துக்கு என்றே தனிப் பிரிவுகள் இருப்​ப​தால், விபத்து வழக்குகளை விரைவாக விசாரிக்க முடிகிறது. மற்ற மாவட்​டங்​களில் ஒரே காவல் நிலையமே சட்டம் - ஒழுங்குப் பிரச்​சினை​களையும் விபத்து தொடர்பான புகார்​களையும் கையாள வேண்டி​யிருக்​கிறது.
  • இது விபத்து வழக்கு​களில் தீர்வு கிடைப்​பதைத் தாமதப்​படுத்து​கிறது. சட்டத்தை இறுக்​க​மாக்​கிக்​கொண்டே செல்வதைவிட, சமூகம் தன்பொறுப்புடன் நடந்து​கொள்வதே இதற்கு நிலையான தீர்வாக இருக்க முடியும். சாலையைச் சரியான முறையில் கடக்க வேண்டிய ​பாத​சா​ரியி​லிருந்து வாகன ஓட்டுநர்கள், ​காவல் துறை​யினர் வரைக்​கும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories