TNPSC Thervupettagam

அடையாள அங்கீகாரம் - கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு

April 13 , 2023 595 days 457 0
  • நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு முதன்மையானது. அரசியல் கட்சிகளை தேசிய கட்சிகளாகவும், மாநில கட்சிகளாகவும் வகைப்படுத்தி அங்கீகாரம் அளிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி. இந்தத் தகுதியின் அடிப்படையில்தான் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
  • கடந்த 2014, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள், 2014-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய 21 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் அடிப்படையில் அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலின்படி, இதுவரை தேசிய கட்சிகளாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை அந்தத் தகுதியை இழந்துள்ளன. தில்லியிலும் பஞ்சாபிலும் ஆட்சியிலுள்ள ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • தேசிய கட்சியாக தகுதி பெற, நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு குறைந்தபட்சம் 6 % வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்; அல்லது மக்களவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் போட்டியிட்டு, 2 % இடத்தில் வென்றிருக்க வேண்டும். இன்றைய நிலையில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மக்கள் கட்சி (சங்மா), ஆம் ஆத்மி கட்சி ஆகிய ஆறு கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக உள்ளன.
  • இதே போல, மாநில கட்சிகள் அந்தஸ்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாநில கட்சியாகத் தகுதி பெற, கடைசியாக நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 6 % வாக்குகளைப் பெற்றதுடன் குறைந்தபட்சம் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களையாவது பெற்றிருக்க வேண்டும்; அல்லது கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஏதாவது ஒரு மாநிலத்தில் 6 % வாக்கும் ஒரு எம்.பி.யும் பெற்றிருக்க வேண்டும்; அல்லது மாநில சட்டப்பேரவையில் மொத்த இடங்களில் 3 % இடத்தில் வென்றிருக்க வேண்டும்.
  • இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்ததில், பாரத ராஷ்டிர சமிதி (ஆந்திர பிரதேசம்), ராஷ்ட்ரீய லோக்தளம் (உ.பி.), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (மேற்கு வங்கம்), பாமக (புதுச்சேரி) உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்ட மாநிலங்களில் மாநில கட்சி என்ற தகுதியை இழந்துள்ளன. தேசிய கட்சிகளாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் (மேற்கு வங்கம்), தேசியவாத காங்கிரஸ் (மஹாராஷ்டிரம்) ஆகியவை மாநில கட்சிகளாக மாறி உள்ளன. மாநில கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி (தில்லி, பஞ்சாப்) தேசிய கட்சியாகி இருக்கிறது.
  • தேசிய கட்சி என்ற தகுதியை இழந்துள்ள கட்சிகளில் தேசியவாத காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் 1990-களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து உருவானவை. இக்கட்சிகளால் மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தைக் கடந்து தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த இயலவில்லை. அதேசமயம், 1925-இல் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காலவெள்ளத்தில் மக்கள் செல்வாக்கை இழந்திருப்பது கவலை அளிக்கிறது.
  • சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று மக்களவைகளில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1964-இல் நிகழ்ந்த கட்சிப் பிளவாலும், தனது தவறான அரசியல் முடிவுகளாலும் தனது முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது. மாறாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (சிபிஐ) பிரிந்து உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்டது. மேற்கு வங்கம், திரிபுராவில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகித்த சிபிஎம், தற்போது கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை வகிக்கிறது.
  • இடதுசாரி அணியின் தலைமைப் பொறுப்பை மார்க்சிஸ்ட் கட்சியிடம் இழந்த தாய் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது தேசிய கட்சி அந்தஸ்தை இழந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான இடதுசாரி கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்தவைதான். இக்கட்சிகள் ஒன்றுசேர வேண்டியதன் தேவையை, தேர்தல் ஆணைய அறிவிப்பு உணர்த்துகிறது.
  • 2012-இல் இந்தியாவில் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஸாரே நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக உருவான ஆம் ஆத்மி கட்சி, 11 ஆண்டுகளில் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது கவனிக்க வேண்டியதாகும். இதற்கான முழு பாராட்டும் அதன் நிறுவனரான அரவிந்த் கேஜரிவாலையே சாரும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • தலைநகர் தில்லியில் நிலவிய அரசியல் வெற்றிடத்தை மிக எளிதாக நிரப்பிய கேஜரிவால், அடுத்து சிறிய மாநிலமான பஞ்சாபைக் குறிவைத்து இயங்கி அங்கும் தனது கட்சியின் ஆட்சியை அமைத்திருக்கிறார். தவிர, கோவா, குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க சதவீத வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக குஜராத்தில் 2022 பேரவைத் தேர்தலில் 12.92 % வாக்குகளைப் பெற்றதுதான் அக்கட்சி தற்போது தேசிய கட்சியாக தகுதி உயரக் காரணம்.
  • வெளிப்படையான நிர்வாகம், கவர்ச்சியான அறிவிப்புகள் ஆகியவையும், மத்தியில் ஆளும் பாஜகவின் முதன்மை எதிரியாகத் தன்னை முன்னிறுத்தியதும் அரவிந்த் கேஜரிவாலின் தேர்ந்த அரசியல் நகர்வுகள். காங்கிரஸ் கட்சி கொஞ்சம் பிசகினாலும் அக்ட்சியின் இடத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது.
  • தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் அங்கீகாரம் வழங்குவதுடன் நின்றுவிடக் கூடாது. அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (13 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories