TNPSC Thervupettagam

அணுகுமுறையில் தெளிவு!

June 19 , 2019 1977 days 1069 0
  • இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நரேந்திர மோடி பங்கேற்ற முதலாவது சர்வதேச மாநாடு என்பதால்,  கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில்  கூடிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) உச்சி மாநாடு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. எதிர்பார்த்தது போலவே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நரேந்திர மோடி அரசின் அணுகுமுறை குறித்து ஓரளவுக்கு எஸ்.சி.ஓ. மாநாடு  தெளிவை ஏற்படுத்தியது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
  • சீனாவும் ரஷியாவும் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இதில் ஆப்கானிஸ்தானும், முந்தைய சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து போன மத்திய ஆசிய நாடுகளான  உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக  இருக்கின்றன.
  • 2017-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்த அமைப்பில் ரஷியா, இந்தியா, சீனாவைத் தவிர ஏனைய நாடுகள் அனைத்துமே இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும்கூட, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ரஷியா-சீனா ஆகிய இரு நாடுகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது.
  • உலகிலுள்ள பல நாடுகளும் ஏதாவது ஒரு வல்லரசின் தலைமையில் இயங்கும் அமைப்புடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன. இதனால் பாதுகாப்பு ரீதியாகவும்,  வர்த்தக ரீதியாகவும்  அந்த நாடுகள் பயன் பெறுகின்றன. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க், பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் வலுவிழந்து போய்விட்ட நிலையில், இந்தியாவுக்கு  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பலவிதத்திலும் உதவியாக இருக்கிறது.  குறிப்பாக, நமக்கு பாகிஸ்தானுடனும், ஆப்கானிஸ்தானுடனுமான தொடர்புக்கு இந்த அமைப்பு மட்டும்தான்இப்போதைக்கு உதவுகிறது.
  • இந்தியா ஒருபுறம் அமெரிக்காவுடனும், இன்னொரு புறம் சீனாவுடனும் மறுபுறம் ரஷியாவுடனும் தனது நட்புறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சீனாவுக்கும் ரஷியாவுக்கும் எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக ரீதியிலான போரை முன்னெடுத்திருக்கும் நிலையில்,  இந்தியாவுக்கு சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
வர்த்தகக் கொள்கை
  • அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை இந்தியாவையும் பாதித்திருக்கிறது என்கிற நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைக்கு எதிராக, பிரதமர் நரேந்திர மோடி உரக்க எழுப்பிய குரல் சீனாவையும் ரஷியாவையும் ஆச்சரியப்படுத்தி இருக்கக்கூடும். பிஷ்கெக் மாநாட்டில்  இதற்கு முன்னர் காணப்படாத உற்சாகத்துடனும், துணிவுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணப்பட்டதை அனைவருமே  உணர்ந்தனர். இந்தியாவின் புதிய வாய்ப்புகளும், அவருக்குத் தேர்தல் மூலம் கிடைத்திருக்கும் மறு அங்கீகாரமும் அவரது முக்கியத்துவத்தை அதிகரித்திருப்பது தெளிவாகவே தெரிந்தது. அவரது உரை அதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
  • சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான தனது தனிப்பட்ட நெருக்கத்தை வெளிப்படுத்திய அதே நேரத்தில் சீனாவின் வர்த்தக சாலைத் திட்டத்தை அவர் எதிர்த்ததும், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற சீனாவின் வேண்டுகோளை நிராகரித்ததும் இந்தியாவின் தெளிவான கண்ணோட்டத்தைக் காட்சிப்படுத்தின.
  • இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் நான்கு முறை பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்திக்க இருக்கிறார்கள். அதன் முன்னோட்டமாக பிஷ்கெக்கில் அவர்களிடையே நடந்த25 நிமிஷ சந்திப்பு  சில தெளிவுகளை இருவருக்கும் ஏற்படுத்தி இருக்கக்கூடும். இரண்டு தலைவர்களுமே உடனடியான பிரச்னைகளையும், ராஜதந்திர ரீதியிலான நிர்ப்பந்தங்களையும் தாண்டி, சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்தும் விவாதித்திருக்ககூடும் என்று  கூறப்படுகிறது.
வாராணசியில்….
  • பிரதமரின் தொகுதியான வாராணசியில் இரு நாடுகளுக்கு மிடையே நடக்க இருக்கும் நட்புறவுக் கூட்டத்துக்கு  வரும் அக்டோபர் 11, 12 தேதிகளில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைக்கப்பட்டிருக்கிறார். விரைவிலேயே ஜப்பானில் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டில் இருவரும் மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். பிஷ்கெக்கில் நடந்த சந்திப்பில்,  தீவிரவாதம் முற்றிலுமாக அகற்றப்பட்ட நிலையில் மட்டுமே இஸ்லாமாபாதுடனான எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா முன்வரும் என்பதைச் சீன அதிபரிடம் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.
  • அதனால்தான் பயங்கரவாத நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று துணிந்து, அழுத்தமாகப் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பதிவு செய்திருக்கிறார் என்று  தோன்றுகிறது.
  • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்திப்பதற்கு பிஷ்கெக்கில் ஏழு வாய்ப்புகள் அமைந்தும்கூட பிரதமர் மோடி அதைத் தவிர்த்துவிட்டார். ஒரே ஒருமுறை சம்பிரதாயத்துக்காகக் கைகுலுக்கியதுடன் அவர் நிறுத்திக் கொண்டதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தானை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு, திடீர் திருப்பமாக நட்பு பாராட்டுவது இந்தியாவில் தன் மீதான பிம்பத்தைச் சிதைத்துவிடும் என்றுகூட அவர் தயங்கியிருக்கலாம்.
  • பாகிஸ்தானுடனான உறவு, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை ஆகியவற்றில் மிகத் தெளிவான அணுகுமுறையை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்தியா வெளிப்படுத்தியது.
  • முந்தைய பிரதமர் மோடிக்கும் இப்போதைய பிரதமர் மோடிக்கும் இடையே மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. அந்த மாற்றத்தின் அறிகுறிதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை.

 

நன்றி: தினமணி (19-06-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories