TNPSC Thervupettagam

அணு ஆயுத அச்சுறுத்தலும் அமைதிப் பரிசும்

October 18 , 2024 37 days 80 0

அணு ஆயுத அச்சுறுத்தலும் அமைதிப் பரிசும்

  • சமகால நிகழ்வு​களுடனான பொருத்​தப்​பாட்டுடன் அமைந்​து​விடும் அங்கீ​காரங்கள் மதிப்பு மிக்கவை. அந்த வகையில், அணு ஆயுதத் தாக்குதல் பதற்றம் அதிகரித்​திருக்கும் இன்றைய சூழலில், அணு ஆயுதங்​களுக்கு எதிராகப் போராடிவரும் ‘நிஹான் ஹிடாங்க்யோ’ என்னும் ஜப்பானிய அமைப்​பினருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு​இருப்பது மிகுந்த முக்கி​யத்துவம் பெறுகிறது.
  • ஜப்பானில் அமெரிக்கா நிகழ்த்திய அணு ஆயுதத் தாக்குதலின் 80ஆவது நினைவு நாள் அடுத்த ஆண்டில் அனுசரிக்​கப்​பட​விருக்கும் நிலையில், இந்தப் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது. அணு ஆயுதம் இல்லா உலகம் என்னும் இலக்கை எட்டு​வதற்காக உழைத்து​வரும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு லட்சத்​துக்கும் மேற்பட்​டோரும், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா நிகழ்த்திய அணுகுண்டுத் தாக்குதலில் எப்படியோ உயிர் பிழைத்​தவர்கள்.
  • அணுகுண்டுக் கதிர்​வீச்சு காரணமாக உடல் ரீதியாக ஏராளமான பாதிப்பு​களுக்​குள்ளான இவர்கள் ‘ஹிபாகுஷா’ என்னும் பெயரில் விளிக்​கப்​படு​கின்​றனர். இன்றைய போர்ப் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் இந்த அமைப்​பினரின் கதை உலகையே உலுக்​கக்​கூடியது!

இரக்கமற்ற தாக்குதல்:

  • இரண்டாம் உலகப் போரின்போது முக்கிய எதிரியான ஜெர்மனியை​விடவும் அமெரிக்​காவின் கண்களை உறுத்​திக்​கொண்​டிருந்த நாடு ஜப்பான்​தான். அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஜப்பான் மீது அமெரிக்கா வஞ்சம் வைக்க ‘பேர்ல் ஹார்பர்’ மீதான அதிரடித் தாக்குதல் ஒரு காரணம். அத்துடன், ஒரு காலத்தில் தனது மறைமுக உதவியைப் பெற்று வளர்ந்த ஜப்பான், ஆசியாவில் தனக்கு வணிகப் போட்டி​யாளராக உருவெடுத்​ததும் அமெரிக்​காவின் ஆத்திரத்​துக்கு ஒரு காரணமாகச் சொல்லப்​படு​கிறது.
  • 1945 ஆகஸ்ட் 6இல் ஹிரோஷிமா மீது, ‘லிட்டில் பாய்’ என்கிற அணுகுண்​டும், ஆகஸ்ட் 9இல் நாகசாகி மீது ‘ஃபேட் மேன்’ என்கிற அணுகுண்டும் வீசப்​பட்டன. இரு நகரங்​களிலும் தலா 1.2 லட்சத்​துக்கும் மேற்பட்டோர் கொல்லப்​பட்​டனர். அந்த அணுகுண்​டு​களின் கதிர்​வீச்சு காரணமாக ஏற்பட்ட பல்வேறு பாதிப்பு​களால் இதுவரை 4 லட்சத்​துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்​திருக்​கிறார்கள்.

முடக்​கப்பட்ட குரல்கள்:

  • இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மறுகட்​டமைப்பு என்ற பெயரில் 1945 – 1952 காலக்​கட்​டத்தில் ஜப்பானில் அமெரிக்​காவின் ஆதிக்கம் வியாபித்​திருந்தது. அப்போது அணுகுண்டு வீச்சுப் பாதிப்பு குறித்துப் பேசவே ஹிபாகுஷாக்​களால் இயலவில்லை.
  • கூடவே, புற்று​நோய், தோல் நோய்கள், கருச்​சிதைவு, சிசு இறப்பு என ஏராளமான பாதிப்பு​களுக்கு ஆளான அவர்களும் அவர்களது சந்ததி​யினரும் சமூகரீ​தியிலான புறக்​கணிப்​பையும் எதிர்​கொள்ள நேர்ந்தது. திருமண உறவு முதல் வேலைவாய்ப்பு வரை பல்வேறு தளங்களில் அவர்களில் பலர் ஒதுக்​கிவைக்​கப்​பட்​டனர்.
  • 1956இல் ஹிபாகுஷாக்கள் ஒருங்​கிணைந்து தங்கள் கனத்த மெளனத்தைக் கலைத்​தனர். நிஹான் ஹிடாங்க்யோ அமைப்பை நிறுவி, அணு ஆயுதங்​களுக்கு எதிரான உலகளாவிய அறப்போரைத் தொடங்​கினர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்குச் சென்று தங்கள் கண்ணீர்க் கதைகளை விவரித்​தனர்.
  • 1976இல் நிஹான் ஹிடாங்க்​யோவின் பிரதி​நி​தியாக டெடுமி தனாகா அமெரிக்கா​வுக்குச் சென்றிருந்த​போது, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சு தொடர்​பாகப் பலருக்குச் சரியான தகவல் தெரிய​வில்லை என்பதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​தார். உயிரிழப்பு​களின் எண்ணிக்கை குறித்து ஐநா அவையே சரியான தகவல்​களைக் கொடுக்க​வில்லை என்பதுதான் நிதர்​சனம். எனினும், இந்த அமைப்பின் முயற்​சியால் அணு ஆயுதம் தொடர்பான விழிப்பு​ணர்வு உலக நாடுகளிடம் பரவலாக்​கப்​பட்டது.
  • அதேவேளை​யில், வரலாற்றின் மிக மோசமான பேரழி​வுக்குப் பின்னரும் அணுசக்தித் துறையில் அமெரிக்கத் தொழில்​நுட்​பங்​களையும் நிதி உதவியையும் ஜப்பான் சார்ந்​திருந்தது வரலாற்றின் விநோதங்​களில் ஒன்று. 2011இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய பேரிடர்​களின்போது ஃபுகுஷிமா அணு உலையில் நிகழ்ந்த விபத்து, அணு ஆபத்து குறித்த உரையாடல்களை மீண்டும் தொடங்கி​வைத்தது.

சமகாலச் சூழல் மீதான பார்வை:

  • அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டது தொடர்​பாகப் பேசிய நிஹான் ஹிடாங்க்யோ அமைப்பின் தலைவர் தொஷியுகி மிமாகி, காஸாவில் அமைதியை நிலைநாட்டப் போராடு​பவர்கள் இந்த விருதை வென்றிருக்க வேண்டும் எனக் கூறியிருப்பது, இந்த அமைப்பின் உன்னத நோக்கத்​துக்கு ஒரு சான்று.
  • காஸாவில், உடலெங்கும் ரத்தம் வழியும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தங்கள் கைகளில் ஏந்தி​யிருக்கும் காட்சிகள் 80 ஆண்டு​களுக்கு முந்தைய ஜப்பானின் காட்சிகளைத் தனக்கு நினைவூட்டு​வ​தாகக் கண்ணீருடன் தெரிவித்​திருக்​கிறார் மிமாகி.
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், காஸா மீதான இஸ்ரேலின் போர் என இரண்டு போர்கள் நிகழ்ந்​து​கொண்​டிருக்கும் இன்றைய சூழலில், அணு ஆயுத அச்சுறுத்​தல்கள் அதிகரித்​திருக்​கின்றன. உக்ரைனில் மட்டுமல்​லாமல், ஐரோப்​பா​விலும் அமெரிக்​கா​விலும் அணு ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்​படும் என்று எச்சரித்​திருக்கும் ரஷ்ய அதிபர் புடின், அணு ஆயுதம் இல்லாத நாடு ரஷ்யாவைத் தாக்கினாலும், அந்நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்​படும் என்று மிரட்​டிவரு​கிறார்.
  • ஹிஸ்புல்லா அமைப்​பினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்​களால் ஆத்திரமடைந்​திருக்கும் ஈரான் மேலும் சினம் கொண்டு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்ற அச்சமும் பரவலாக எழுந்​திருக்​கிறது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்​களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் அணு உற்பத்தி மையங்கள், எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்​படு​கிறது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தூபம் போடுவது கவனிக்​கத்​தக்கது.

குலைந்​துபோன நம்பிக்கை:

  • ஈரானின் அணு ஆயுத உற்பத்​தியைத் தடைசெய்வதை முதன்மை நோக்க​மாகக் கொண்டு உருவாக்​கப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம் ஒபாமா ஆட்சிக் காலத்தில் 2015இல் கையெழுத்​தானது. அமெரிக்கா​வுடன் ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஈரானுடன் இந்த ஒப்பந்​தத்தை மேற்கொண்டன. ஆனால், ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்​தத்தை எதிர்த்துவந்த டிரம்ப், “வரலாற்றிலேயே மிக மோசமான ஒப்பந்தம்” என அதிபர் தேர்தலுக்கான பிரச்​சா​ரங்​களில் முழங்​கினார்.
  • அவர் அதிபரான பின்னர் 2018இல் இந்த ஒப்பந்​தத்​திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. மீண்டும் அந்த ஒப்பந்தம் உயிர் பெறுமா என்னும் எதிர்​பார்ப்புகள் நிலவினாலும், ஜோ பைடன் அரசு அதில் அதிக முனைப்புக் காட்ட​வில்லை என்று விமர்​சிக்​கப்​படு​கிறது. இந்தச் சூழலில் ஈரானுடன் இஸ்ரேல் மல்லுக்கு நிற்ப​தால், இனி அந்த ஒப்பந்​தத்​துக்குள் ஈரான் வரும் என்கிற நம்பிக்கையும் குலைந்​திருக்​கிறது.
  • ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்​றப்​பட்​டிருந்தால் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்​சினைகள் நடைபெறாமல் தடுக்​கப்​பட்​டிருக்​கும். ஈரான் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்காது என ஒபாமா ஆட்சி​யின்போது துணைப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பெஞ்சமின் ஜே.ரோட்ஸ் சுட்டிக்​காட்​டி​யிருக்​கிறார்.
  • அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர்க் காலத்​திலும் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையிலான அணு ஆயுத மோதல் நடக்கலாம் என்கிற அச்சுறுத்தல் முக்கியப் பங்கு வகித்தது. இன்றைய தேதியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்​தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதம் வைத்திருப்​ப​தாகக் கருதப்​படு​கிறது. இதில் பல நாடுகள் அணு ஆயுதங்​களின் எண்ணிக்கையை அதிகரித்​துக்​கொண்டே வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
  • ஹிரோஷிமா, நாகசாகி பேரழி​வுக்குப் பிறகு உலகில் எங்கும் அணு ஆயுதத் தாக்குதல் நடைபெற​வில்லை என்றாலும் அணு ஆயுத நாடுகள் அவற்றை நவீனப்​படுத்து​வதில் ஆர்வம் செலுத்து​வ​தாக​வும், வேறு பல நாடுகளும் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இடம்பெற முயல்​வ​தாகவும் நோபல் பரிசுக் குழு கவலையுடன் தெரிவித்​திருக்​கிறது.
  • போரில் ஈடுபடும் நாடுகளைத் தார்மிகரீ​தியில் கண்டிப்​பதைத் தாண்டி, அவற்றின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில் ஐநா அவை வலுவாக இல்லை என்பதால், தற்காப்​புக்காக அணு ஆயுதங்​களைத் தயாரிக்கவோ, அணு ஆயுத நாடுகளைச் சார்ந்​திருக்கவோ வேண்டிய நிலையில் பல நாடுகள் இருக்​கின்றன.
  • இப்படி அணு ஆயுதம் தொடர்பான சர்ச்​சைகள், போர்ச் சூழல் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில்​தான், ஹிபாகுஷாக்​களுக்கு அமைதி நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது. “நாங்கள் உயிருடன் இருக்​கும்போதே அணு ஆயுதங்களை ஒழித்து​விடுங்கள்” என நிஹான் ஹிடாங்க்யோ அமைப்பின் தலைவர் மிமாகி உருக்கமாக வேண்டுகோள் விடுத்​திருக்​கிறார்.
  • குழந்தைகள் மீதும், மருத்​துவ​மனைகள் மீதும் ஏவுகணை வீசிப் படுகொலை செய்யத் தயங்காத நாடுகள், சர்வதேச அரங்கில் துணிச்​சலுடன் வலம் வரும் நிலையில், மனித குலத்தின் அடிப்படை விழுமி​யங்​களைக் கைவிடா​மலிருக்கக் கோரும் இதுபோன்ற இறைஞ்​சல்கள் செவிமடுக்​கப்​படுமா என்ன?

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories