TNPSC Thervupettagam

அண்ணல் அம்பேத்கரின் புத்தக வாசிப்பும் புரட்சியும்

April 14 , 2024 273 days 316 0
  • அண்ணல் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர் 37 ஆண்டுகள் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஏப்ரல் 14 அன்று உலகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
  • கிராமங்களில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கூறி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • நவீன இந்தியாவை வடிவமைத்த மாபெரும் தலைவர்களில் ஒருவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். அண்ணலின் சிந்தனைகள் எழுத்துக்கள் அனைவருக்குமானவை. அண்ணலின் பிறந்த நாளை அனைத்து சமூகங்களும், அனைத்து சாதிகளும் இணைந்து நடத்துகின்ற மாபெரும் விழாவாக மக்கள் கொண்டாடவேண்டும். அண்ணல் அம்பேத்கரை நாம் கொண்டாடுவது, அடிப்படையில் நமக்குள் இருக்கும் சாதி, மத, இன உணர்வை அழிப்பதற்கான வழிகளில் ஒன்றாகும்.

வறுமையும் கல்வியும்

  • வீட்டில் படுக்கக் கூட வசதி இல்லாதபோதும் ஆட்டுக்குட்டிக்கும் தானிய மூட்டைக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டும், மண்ணெண்ணயின் அசைந்தாடும் ஒளியில் இரவு பகல் என்று பாராமல் கண்விழித்தும் படித்தார். சுபேதார், ரமாபாயின் கடின உழைப்பால் அண்ணல் அம்பேத்கர் மெட்ரிக் தேர்வில் ‘மகர்’ ஜாதியில் முதல் ஆளாக வெற்றி பெற்றார். கெலுஸ்கர் என்பவர் அம்பேத்கரைப் பாராட்டி கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். இந்தப் புத்தகம் தான் பின்னாளில் அண்ணல் அம்பேத்கர் புத்த மதம் சேர்வதற்கு காரணமாக அமைந்தது. சுபேதாரின் மறைவுக்குப் பின் குடும்பம் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியது. ஆனாலும் ரமாபாய் தன் கணவரின் லட்சியங்களுக்காகக் கிழிந்த ஆடையுடன் கூலி வேலை செய்து இரவு - பகல் பட்டினி கிடந்து சாலையோரத்தில் சாணி அள்ளிக் கொண்டிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் டாக்டர் பட்டங்களும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
  • அண்ணல் அம்பேத்கர் லண்டனில் ‘ரூபாயின் சிக்கல்’ ஆய்வேட்டை எழுதிய தருணத்தில், பிள்ளைகளுக்குப் பால் வாங்கவும் மருந்து வாங்கவும் ரூபாய் இல்லாமல் ரமாபாய் கஷ்டத்தில் தவித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அண்ணல் அம்பேத்கர், “கங்காதர் எப்படி இருக்கின்றான்? அவனை வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கி சார்ந்த பணிகளைக் கற்றுக்கொடு” என ரமாபாய்க்குக் கடிதம் எழுதுகிறார்.
  • அதற்கு “ரமாபாய் கங்காதர் நலமாக இருக்கின்றான். அவனை வங்கிக்கு அழைத்துச் சென்றேன் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறான்” என்று பதில் கடிதம் அனுப்பினார். லண்டனில் படிப்பு முடிந்து வந்த அண்ணல் அம்பேத்கர், “கங்காதர் எங்கே?” எனக் கேட்டபோது, கங்காதர் ஓராண்டுக்கு முன்பே இறந்துவிட்டான் என ரமாபாய் கதறினார். கங்காதர் மரண செய்தியைக் கூறினால், அண்ணல் அம்பேத்கர் தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்துவிடுவார் என்பதால் அந்த பெருந்துயரத்தை ரமாபாய் தனக்குள்ளே புதைத்துக் கொண்டிருக்கிறார். வறுமையின் கொடுமைக்கு நான்கு பிள்ளைகள் பலியானார்கள். பள்ளிக்கூடத்தில் ஒரு கோணிப்பையைப் போட்டுத் தனியாக உட்கார வைக்கப்பட்டவர்தான் அண்ணல் அம்பேத்கர். பின்னாளில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாக உட்கார வைக்கப்பட்டார் என்பது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பாகும்.

புத்தக வாசிப்பும் – சேகரிப்பும்

  • பரோடா மகாராஜா சாயாஜிராவின் தயவால் லண்டனில் படிக்கச் சென்ற அண்ணல் அம்பேத்கர் 1917இல் இந்தியாவுக்குத் திரும்பினார். புத்தகப் படிப்புடன் அண்ணல் அம்பேத்கர் வேறு ஒரு முக்கிய வேலையும் செய்துள்ளார். அதாவது, புத்தகங்களைச் சேகரிப்பது, அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது. நியூயார்க்கில் அண்ணல் அம்பேத்கர் இருந்த காலத்தில், அங்கிருந்து மட்டுமே சுமார் 2000 ஆயிரத்துக்கும் அதிகமான, மிகவும் அரிதான புத்தகங்களை சேகரித்தார் என்று அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் பதிவு செய்துள்ளார்.
  • அண்ணல் அம்பேத்கர் தான் சேகரித்த புத்தகங்களை ஒரு சரக்குக்கப்பலில் அனுப்பிவிட்டு, மற்றொரு கப்பலில் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியாவில் வந்து இறங்கிய அண்ணல் அம்பேத்கருக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று காத்திருந்தது. அது என்னவென்றால் தன் புத்தகங்களை சுமந்து வந்த கப்பல் மூழ்கிவிட்டது என்பதுதான் அது! அதைப்பற்றி அவர் மனம் தளராமல் புத்தகங்களைத் தேடித்தேடி மீண்டும் சேகரித்தார்.
  • 1930ஆம் ஆண்டு மும்பையில் குடியமர்ந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது சேகரிப்பில் இருந்த புத்தகங்களைப் பத்திரப்படுத்துவதற்காகவே வீடொன்றைக் கட்டினார் அண்ணல் அம்பேத்கர். புத்தகங்களுக்காக தான் கட்டிய வீட்டுக்கு, பண்டைய புத்த சாம்ராஜ்யத்தின் ‘ராஜகிரகம்’ என்ற பெயரைச் சூட்டினார். அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் ராஜகிரகத்தில் இருந்த மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை சுமார் 69,000 ஆயிரம் என்கிற செய்தி நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது. இவ்வளவு புத்தகங்களையும் வாசித்துள்ளார்.
  • அன்றைய ஆசியத் துணைக்கண்டத்தில் அண்ணல் அம்பேத்கருடையது தான் மிகப்பெரிய தனிநபர் நூலகம் ஆகும். இந்நூலகத்தில் இருந்த பல நூல்கள், அவர் தொடங்கிய ‘மக்கள் கல்விக் கழகத்திலும்’ ‘சித்தார்த்த கல்லூரியிலும்’ இருக்கின்றன. அவற்றையெல்லாம் அண்ணல் அம்பேத்கர் நன்கொடையாக அளித்துள்ளார். இப்படிப்பட்ட அவரது நூலகத்தில், தமிழ்நாட்டிலிருந்து வெளியான இரண்டு புத்தகங்கள் இடம்பெற்று இருந்தன. ஒன்று, சென்னையில் பேராசிரியராகப் பணியாற்றிய பி. லட்சுமிநரசு எழுதிய ‘தி எஸ்சென்ஸ் ஆஃப் புத்திசம் (1907)’ எனும் புத்தகம் மற்றொன்று நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. சிதம்பரம் எழுதிய ‘ரைட் ஆஃப் டெம்பிள் எண்டரி (1929)’ எனும் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1931ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது சுமார் 32 பெட்டிகளில் அடங்கும் அளவுக்கு அண்ணல் அம்பேத்கர் புத்தகங்களை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இலண்டன் மியூசியத்தில் காலையில் நுழைந்து இரவு காவல்காரர் வந்து வெளியேறச் சொல்கின்ற வரைக்கும் வாசித்துக்கொண்டே இருப்பார். அவரது படிப்பு கல்விக்கூடங்களோடும், மியூசியத்தோடும் நிற்கவில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் கூட அது தொடர்ந்திருக்கின்றது.
  • அண்ணல் அம்பேத்கருடைய படுக்கையில் எப்பொழுதும் புத்தகங்கள் இருக்கும். இரவு நெடுநேரம் கண்விழித்து படித்துக்கொண்டே இருப்பார். இரவில் பசிக்கு நாலு சுட்ட அப்பளம் ஒரு தேநீர் அவ்வளவுதான். விடியற்காலை வரைக்கும் ஓய்வின்றி பல மணி நேரம் வாசிப்பு என்றே வாழ்ந்துள்ளார். நூலக நேரம் முடிந்த பிறகும் படித்துக் கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கரைப் பல சமயங்களில் நூலகங்களின் காவலாளிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிகழ்வுகள் குறித்து நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், அண்ணல் அம்பேத்கர் புத்தக வாசிப்பாளராக மட்டும் நின்றுவிடவில்லை; புரட்சியாளராகவும் திகழ்ந்தார்.

அரசியலமைப்பை வடிவமைத்தவர்

  • அரசியலமைப்பு அவைக்குள் நுழையவே அனுமதிக்கப்படாத புரட்சியாளர் அம்பேத்கர்தான், கடைசியில் அந்த அரசியலமைப்புக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர். பல தடைகளைக் கடந்து உள்ளே நுழைந்த அவர் தன் திறமையால் அதன் வரைவுக்குழு தலைவரானார். சபையில் அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைக்காத போதும் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் கடுமையாக உழைத்து உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பை உருவாக்கினார். மொத்தமாக 25 பகுதிகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள், 1,17,369 சொற்கள் இருந்தன.
  • அதன்மீது 147 நாட்கள் விவாதம் நடந்தன. அப்போது சுமார் 36 லட்சம் வார்த்தைகள் அவையில் பதிவாகின. அதிகபட்சமாக அண்ணல் அம்பேத்கர் மட்டும் 2,67,544 வார்த்தைகளைப் பேசியதன் மூலம் அவரது கடின உழைப்பும் முயற்சியும் பாராட்டப்படுகிறது. நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் இராஜேந்திர பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அமலுக்கு வந்தது. அண்ணல் அம்பேத்கரின் புத்தக வாசிப்பும், புரட்சியும், இந்திய அரசியல் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

அனைவருக்கும் கல்வி

  • உலகத் தலைவர்களில் அதிகம் படித்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பெற்ற பட்டங்களின் பட்டியலை பார்த்தாலே நமக்கெல்லாம் வியப்பு ஏற்படும். அனைவருக்கும் கல்வி கட்டாயமாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தான் மட்டும் கல்வி பெற்றால் போதாது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற முனைப்போடு தனது சொந்த முயற்சியில் கல்விநிலையங்களை உருவாக்கிப் பட்டியலின மக்களின் கல்வி வளர்ச்சிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.
  • ஆரம்பக்கல்விக்கு மட்டுமல்லாது உயர்கல்விக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். உயர்கல்வியிலும் கூட அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த படிப்புகளில் சேரும்படி பட்டியலின வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். உயர்கல்வி தொடர்பான பிரச்சனைகளில் அரசை வழிநடத்த மத்தியக்கல்வி ஆலோசனை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டுமெனக் கூறிய புரட்சியாளர் அம்பேத்கர் அந்த வாரியத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் போது பெண்களுக்குக் கட்டாயம் இடமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
  • கட்டாயக்கல்வி என்பதே நாட்டின் முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதால் அதனை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மாணவர்களுக்கு அரசு தாராளமாக உதவித்தொகை அளித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

பெண் கல்விக்கு வித்திட்டவர்

  • பெண்கள் கல்வி பெறவேண்டும் என்பதில் புரட்சியாளர் அம்பேத்கர் மிகுந்த அக்கறை கொண்டவராய் இருந்தார் என்பதற்கு அவர் நியூயார்க்கில் ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது எழுதிய கடிதம் ஒன்று சான்றாக விளங்குகிறது. மகர் சமூகத்தைச் சார்ந்த தனது நண்பர் ஒருவரின் தந்தைக்கு அந்த கடிதத்தை அவர் எழுதியிருந்தார். இராணுவத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அவர் தன்னுடைய மகளை நான்காம் வகுப்பு வரை படிக்க வைத்திருந்தார்.
  • அது அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அதிசயமான ஒன்றாக இருக்கிறது என்று பேசியுள்ளனர். அவருக்கு எழுதிய கடிதத்தில் பெண்களைப் படிக்க வைக்க வேண்டியதன் தேவையைப் பற்றி மகர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் சொல்லுங்கள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணை தொடர்ந்து படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திருந்தார். ஆண்களோடு பெண்களையும் இப்படி படிக்க வைத்தால் மகர் சமூகம் மிக விரைவிலேயே முன்னேறிவிடும் என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து, மறுமணம், ஜீவனாம்சம், பாலியல் உரிமை போன்ற அம்சங்கள் அடங்கிய இந்து சட்டமசோதாவை நிறைவேற்ற பெரிதும் முயன்றார். இதற்கு நேரு தலைமையிலான அரசு ஒத்துழைப்பு அளிக்காததால் மன வேதனை அடைந்த அம்பேத்கர் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார். “பெண்களின் பிரச்சனையும் தீண்டத்தகாதவர்கள் பிரச்சனையும் ஒன்றுதான். இருவர் மீதும் தீட்டு என்கின்ற கருத்து திணிக்கப்பட்டிருக்கிறது. பெண்மீது ஆண் திணித்திருக்கின்ற எல்லாவற்றையும் மீறாத வரை பெண்களுக்கு விடுதலை இல்லை” என எழுதிய புரட்சியாளர் அம்பேத்கர். பெண்களின் உரிமைக்காக தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மிகக்குறுகிய காலமே சட்ட அமைச்சராகப் பணியாற்றினாலும், சுதந்திர இந்தியாவின் சட்டப்பாதைக்கு மகத்தான வழிகாட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

புத்தகமும் - புரட்சியும்

  • உலகில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1927இல் புரட்சியாளர் அம்பேத்கர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மாணவராக வலம் வந்த அதே பல்கலைக்கழகத்தில் சில காலம் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். புரட்சியாளர் அம்பேத்கர் தன்வாழ்வில் சந்தித்த சாதிக் கொடுமைகளை ‘விசாவுக்காக காத்திருக்கின்றேன்’ எனும் தலைப்பில் நூலாக எழுதினார். இந்த நூல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாடமாக கற்பிக்கப்படுகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மாணவராக இருந்தபோது எழுதிய ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வுக் கட்டுரை தற்போது பொருத்தமாக இருப்பதற்குக் காரணம், அப்போதிருந்ததுபோலவே சாதி அமைப்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான். இந்திய சாதி அமைப்பின் வேர் எங்கே இருக்கிறது என்பதை இந்த ஆய்வுக் கட்டுரையில் அம்பேத்கர் கண்டறிந்து முன் வைத்திருக்கிறார்.
  • புரட்சியாளர் அம்பேத்கர் புத்தகங்களாக எழுத வேண்டும் எனத் திட்டமிடப்பட்டவை ஏழு தலைப்புகள். அவை 1. புத்தரும் அவரது தம்மமும் 2. புத்தரும் கார்ல் மார்க்சும் 3. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் 4. இந்து மதத்தின் புரட்டுகள் 5. இராமர் - கிருஷ்ணரின் புரட்டுகள் 6. திரிமூர்த்திகளின் புரட்டுகள் 7. மகளிரின் எதிர்ப் புரட்சிகள் என்பவையே. இப்புத்தகங்களை எழுதுவதற்காக ஏராளமான குறிப்புகளை அம்பேத்கர் திரட்டினார். சிறிய நோட்டுப் புத்தகங்களிலும் உதிரி தாள்களிலும் அவை இடம்பெற்றிருந்தன. சில குறிப்புகள் தட்டச்சு செய்யப்பட்டும் இருந்தன. இத்தகைய குறிப்புகளை அம்பேத்கர் கோப்புகளிலும், காகித உறைகளிலும், தலைப்புகள் எழுதப்பட்டு எடுத்து வைத்து இருந்தார். இப்புத்தகங்களை ஒவ்வொன்றாக ஆனால் தொடர்ச்சியாக வெளியிட வேணடும் என அவர் விரும்பினார்.
  • அவருடைய இந்த விருப்பம் நிறைவேறவில்லை. மேலே குறிப்பிட்ட ஏழு புத்தகங்களில் 1. புத்தரும் அவரது தம்மமும் 2. புத்தரும் கார்ல் மார்க்சும் 3. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் 4. இந்து மதத்தின் புரட்டுகள் ஆகிய நான்கையும் அவர் எழுதி முடித்து இருந்தார். அவர் எழுதியவற்றுள் ‘புத்தரும் அவரது தம்மமும்’ எனும் புத்தகத்தை முதலில் வெளியிட எண்ணங் கொண்டார். இப்பணியை 1951 ஆம் ஆண்டு தொடங்கினார். இப்புத்தகத்தை எழுதி முடிக்க அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. ‘புத்தரும் கார்ல் மார்க்சும்’ என்ற சிறுநூலை 1956 இல் வெளியிட்டபோது, உலகம் ஆச்சரியமாகப் பார்த்தது. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தக வாசிப்பாளராகவும், எழுத்தாளராகவும், புரட்சியாளராகவும், போராட்டக்காரராகவும் தன் இறுதி காலம் வரையில் பயணித்தவர். தன் இறுதி செய்தியாக ‘கற்பி’ என்பதையே அழுத்தம் திருத்தமாக கூறினார்.

நன்றி: தினமணி (14 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories