- மே மாதம் நிகழ்ந்த மிகமிக அரிதான வானியல் நிகழ்வால் பூமியின் துருவப் பகுதிகளில் மட்டுமே பொதுவாகக் காணப்படும் அரோரா (aurora) எனப்படும் துருவ ஒளி, வட அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகின் பல நாடுகளில் தென்பட்டது. சூரியனின் மேற்பரப்பில் உருவான சக்திவாய்ந்த காந்தப்புலம், பூமியின் காந்தப்புலத்துடன் மோதியதால் உருவான சூரியப் புயல், துருவ ஒளியை வழக்கத்துக்கு மாறாக உலகின் பல நாடுகளில் தென்படவைத்தது.
- சக்திவாய்ந்த சூரியப் புயலால் உருவாகும் மிகப் பெரிய காந்தப்புலம் பூமியைத் தாக்கும்போது, அது தனது ஒட்டுமொத்த ஆற்றலையும் பூமியின் வளிமண்டலத்தில் இறக்கிவிடுகிறது. அதன் விளைவாக வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் வாயுக்கள் அயனிகளாக மாறி, வளிமண்டலத்தில் ஒளிர ஆரம்பித்து, அரோரா எனப்படும் துருவ ஒளியைத் தோற்றுவிக்கின்றன. அண்டார்க்டிகா, நார்வே, பின்லாந்து போன்ற துருவப் பகுதிகளில் இந்தத் துருவ ஒளி இயல்பான நிகழ்வுதான் என்றாலும், சூரிய வெடிப்பினால் சமீபத்தில் ஏற்பட்ட மாபெரும் காந்தப்புலம், துருவப் பகுதியிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தாழ்வாக உள்ள வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் ஐரோப்பாவின் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்படப் பல நாடுகளிலும் இயல்புக்கு மாறாகத் தோன்றியது.
- இத்தகைய ராட்சச சூரிய வெடிப்புகள் பூமியைவிடப் பல மடங்கு பெரிதானவை என்பதால், பூமியிலிருந்து இவற்றை நேரடியாகப் பார்க்க முடியும். ஆனால், பிரத்யேகமான சூரியக் கண்ணாடிகள் மூலமாக இதைப் பார்க்க வேண்டும். இத்தகைய சூரியப் புயல் மீண்டும் பூமியை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். ஆனால், மற்ற வானியல் நிகழ்வுகளைப் போல, இது மீண்டும் எப்போது நிகழும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது கடினம். தற்போதைய சூரியச் சுழற்சி இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையலாம் என்று அறிவியலாளர்கள் எதிர்பார்க்கி றார்கள்.
- தற்போது ஏற்பட்டதைவிட மிகப் பெரிய சூரியப் புயல் சில மாதங்கள் கழித்தோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ ஏற்படலாம். மேலும், சூரியச் சுழற்சி உச்சத்தை அடையும்போது சூரிய வெடிப்பானது, சூரியனின் மத்திய ரேகையின் அருகில் ஏற்படுவதால், அதன் விளைவாக ஏற்படும் முழுக் காந்தப்புலமும் பூமியை நோக்கியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது!
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 06 – 2024)