TNPSC Thervupettagam

அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: அறம் குறைவதுதான் பிரச்சினையா?

February 7 , 2019 2150 days 2324 0
  • கடந்த 15 வருடங்களில் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகள் பலவற்றிலும் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டில் ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் 9 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், உலக அளவில் 21 சதவீதமாகவும் இது அதிகரித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.
  • கர்ப்பிணிக்குச் சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல் ஏற்படும்போது, அந்தக் கர்ப்பிணியையும் குழந்தையையும் காப்பாற்றும் ஒரு நடைமுறையாக சிசேரியன் பிரசவம் உள்ளது. சிசேரியன் செயல்முறைக்கு வந்த பின்னர், தாய்-சேய் இறப்பு விகிதம் உலகளவில் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் 15 வருடங்களுக்கு முன்னால் பிரசவ நேரத்தில் தாய்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை இருந்தது. இந்த விகிதம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் 130 வரை குறைந்திருக்கிறது. குறைப்பிரசவத்தில் சிசேரியன் மூலம் பிறந்த - 600 கிராம் எடையில் இருந்த - குழந்தையைக்கூட எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற முடிந்திருக்கிறது.
  • ஆகவே, பிரச்சினை சிசேரியனில் இல்லை. அது எங்கே, எதற்காகச் செய்யப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது.
நாணயத்தின் மறுபக்கம்
  • தற்போது தனியார் மருத்துவமனைகளில் லாப நோக்கத்துக்காகவே கர்ப்பிணிகளிடம் பொய்க் காரணங்களைச் சொல்லி, சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்படுவதாகப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்களும் கடுமையான விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில்கூட சிசேரியன் தேவைப்படுபவர்களுக்கு அரசு மருத்துவர்கள் தங்களுடைய சொந்த மருத்துவமனைகளுக்கு அல்லது அவர்கள் பணிபுரியும் தனியார் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
  • மருத்துவத் துறையில் அறம் சார்ந்த மனித சேவை குறைந்து வணிக நோக்கம் புகுந்துவிட்டதால்,  சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துவிட்டன என்று சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
  • ஆனாலும், அதுவே முழுமையான காரணம் என்று நியாயப்படுத்தவும் முடியவில்லை. காரணம், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக நடைபெறும் சிசேரியன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • அறம் பேணும் தனியார் மருத்துவமனைகளிலும் இது அதிகரித்துள்ளது. உலக அளவில் பார்த்தோமானால், பொதுமக்களுக்கு எல்லா மருத்துவ வசதிகளையும் இலவசமாக வழங்கும் பிரிட்டன், சீனா, கனடா போன்ற பல நாடுகளிலும் சிசேரியன் சிகிச்சைகள் வருடந்தோறும் அதிகரித்தவாறு உள்ளன. இந்தச் சூழலில், இதற்கெல்லாம் இப்போதைய பெண்களிடம் காணப்படும் வாழ்க்கைமுறை தவறுகள்தான் முக்கால்வாசி காரணம் என்று ‘மெட்ஸ்கேப்’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையைச் சுலபத்தில் புறம்தள்ள முடியவில்லை.
பாரம்பரியம் தவறிய வாழ்வியல்முறை
  • சுகப்பிரசவம் ஆக வேண்டியதெல்லாம் தேவையில்லாமல் சிசேரியனில் முடிவதற்கு இன்றைய இளம் பெண்களுக்குச் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான உடற்தகுதி குறைந்துவருவதுதான் அதிமுக்கியமான காரணம் என்கிறது அந்த அறிக்கை.
  • நம் பாரம்பரியம் தவறிய வாழ்வியல்முறையின் நீட்சியாக இதைப் பார்க்க வேண்டும் என்றும் அது சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, தற்போதைய இளம் பெண்களுக்கு உணவுமுறை மாறிவிட்டது; உடற்பயிற்சி இல்லாமல் போய்விட்டது.
  • இவற்றின் விளைவால் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஹார்மோன் பிரச்சினை போன்றவை இவர்களுக்கு இளமையிலேயே வந்துவிடுகின்றன. இவற்றுடன் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப்பேறு, பணிக்குச் செல்லும் பெண்களிடம் அதிகரித்துவரும் புகை, மதுப் பழக்கம் எனப் பல காரணிகள் அணி சேர்ந்து கர்ப்பிணியின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பதால், இயற்கைப் பிரசவத்துக்குத் தடை உண்டாகிறது; சிசேரியன் அவசியப்படுகிறது.
  • இப்போதைய பெண்களுக்குப் பணிச்சுமை மற்றும் பிற சுமைகள் காரணமாக மன அழுத்தம் ரொம்பவே பாதிக்கிறது. இது பிரசவ நேரத்தில் அவர்களுக்குச் சுரக்க வேண்டிய பல ஹார்மோன்களுக்குத் தடை போடுகிறது. அதனால் பிரசவ வலி ஏற்படுவதில் தாமதமாகிறது. அப்போது வேறு வழியில்லாமல் சிசேரியன் தேவைப்படுகிறது.
  • மேலும், பெண்கள் கர்ப்ப காலத்தில் காய்கறி உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த இயற்கை உணவுகளைச் சாப்பிட வேண்டும். ஆனால் இந்தத் தலைமுறையினர் கொழுப்பு மிகுந்த துரித உணவுகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். இதன் விளைவால் அவர்களுக்குக் கடைசி மும்மாத கர்ப்பத்தில் பனிக்குடத் திரவம் குறைந்துபோகிறது. இதுவும் சுகப்பிரசவத்துக்குத் தடையாக நிற்கிறது.
  • யூனிசெஃபின் அறிக்கையின்படி, வறுமை காரணமாக மட்டுமல்லாமல், தவறான உணவுப் பழக்கத்தாலும் இந்தியாவில் 45% பதின்பருவத்தினருக்கு ஊட்டச் சத்துக் குறைவும் ரத்தசோகையும் இருக்கின்றன. பெண்களுக்கு இவை தீர்க்கப்படாமலேயே திருமணம் ஆகும்போது, கர்ப்பகாலச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, பிரசவத்தின் கடைசி கட்டத்தில் எதிர்பாராமல் அதிக உதிரப்போக்கு ஏற்பட வழிவகுப்பதால், சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல் சிசேரியன் தேவைப்படுகிறது.
கர்ப்பிணியின் ஒத்துழைப்பு
  • அடுத்து, சுகப்பிரசவம் ஆவதற்குப் பிரசவ வலி வரும்போது கர்ப்பிணியின் ஒத்துழைப்பு மிக அவசியம். பிரசவத்தின் இரண்டாம் கட்டத்தில் கர்ப்பிணிகள் ‘லித்தாட்டமி’ எனும் நிலையில் காத்திருக்க வேண்டும்.
  • உடற்பருமன் உள்ள கர்ப்பிணிகள் இதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், முந்தைய காலத்தில் பெண்களுக்கு நிறைய உடலுழைப்பு இருந்தது; பிரசவத்துக்குத் துணைபுரியும் இடுப்புக்குழி தசைகள் வலுவாக இருந்தன; எதையும் தாங்கும் மனதைரியம் இருந்தது. ஆனால், இன்றைய இளம்பெண்களுக்கு உடலுழைப்பு மிகவும் குறைந்துபோனதால், அவர்களின் இடுப்புக்குழி தசைகளுக்கு வலிமை இல்லை.
  • பிரசவ வலியைத் தாங்கும் சக்தி இல்லை. சென்ற தலைமுறையில் ஒரு நாள் முழுவதும் பிரசவ வலியைத் தாங்கிக்கொண்டு, சுகப்பிரசவம் ஆன பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், தற்போது ஒரு மணி நேரம்கூட அந்த வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத கர்ப்பிணிகள் பலர் சிசேரியன் சிகிச்சையை அவர்களே வலியுறுத்துகிறார்கள்.
  • வெளிநாடுகளில் ஒரு பெண் கர்ப்பமானதுமே சிசேரியனை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பதை காணொலியில் விளக்கிவிடுகிறார்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, நீச்சல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவமனையில் வகுப்புகள் நடத்துகிறார்கள்; பயிற்சிகள் தருகிறார்கள்.
  • மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரங்களில்கூட கர்ப்பிணிகளுக்கு உடற்பயிற்சி வீடியோக்களைக் காண்பிக்கிறார்கள். வீட்டு வேலைகளை அவர்களே செய்வதற்கு ஊக்கப்படுத்துகிறார்கள். இந்தியாவில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்குப் பெரும்பாலான கர்ப்பிணிகள் தயாரில்லை. அவர்களே தயாராக இருந்தாலும், பிரசவ நேரத்தை நாள் நட்சத்திரங்களின்படி நிர்ணயிக்கும் குடும்பத்தினர் அதற்குத் தயாராக இல்லை. இயற்கைப் பிரசவம் இல்லற சுகத்தைக் குறைத்துவிடும் என்றெண்ணி சிசேரியனுக்கு வற்புறுத்தும் கணவர்களும் உண்டு.
  • ஆகவே, சிசேரியன் சிகிச்சைகள் அதிகரிப்பதற்கு மருத்துவத் துறையில் அறம் குறைந்த நிலைமையைத் தாண்டியும் கர்ப்பிணியின் உடல்ரீதியான காரணங்களைத் தாண்டியும் நம் நவீன வாழ்வியல் முறைகளும் தொடக்கப்புள்ளி வைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் பலனால், அந்நியக் கலாச்சாரங்களுக்கு அதிக இடம் கொடுக்காமல், நம் பாரம்பரிய பண்பாட்டு வாழ்வியல்முறைகளுக்கு மீண்டு வந்தால், அரசு மற்றும் அறம் மிகுந்த மருத்துவமனைகளிலாவது சிசேரியன் செய்யப்படுவது குறையும் என்று நம்பலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories