அதிகரிக்கும் போலியோ
- வறுமை, போர்ச் சூழலில் உள்ள நாடுகளில் போலியோ பாதிப்பு தொடர்வதாக ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெஃப்’ தெரிவித்துள்ளது. அக்டோபர் 24, உலக போலியோ நாளை முன்னிட்டு யுனிசெஃப் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வு முடிவில், ‘2023இல் 541 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்பில் 85 சதவீதம் வறுமை நிலை, போர் பாதிப்பு உள்ள 21 நாடுகளில் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.
- போலியோவை எதிர்த்துப் போராடும் 21 நாடுகளில் ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக மிகுந்த பின்னடைவில் உள்ளன. குறிப்பாக சூடானில், போலியோ தடுப்பூசி போடும் விகிதம் போருக்கு முன் 85 சதவீதத்தில் இருந்து 56 சதவீதமாகச் சரிந்ததுள்ளது.
- போலியோ பாதிப்பு ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. போலியோ தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் எந்த வயதிலும் இந்நோய் தாக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யுனிசெஃப் இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் பேசும்போது, “போலியோ பாதிப்பு அதிகரித்துவருவது, அந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஆபத்தல்ல, அண்டை நாடுகளுக்கும் இது அச்சுறுத்த லாகவே பார்க்கப்படுகிறது. போலியோவுக்கு எதிராக முழு உந்துதலோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையும் போலியோவிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 11 – 2024)