TNPSC Thervupettagam

அதிகரித்துவரும் உணவுச் சந்தை!

February 1 , 2025 6 hrs 0 min 14 0

அதிகரித்துவரும் உணவுச் சந்தை!

  • துரித உணவகங்களும், ஆன்லைன் உணவு விநியோக தளங்களும் நம்நாட்டில் அதிகரித்துவிட்டன. மக்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளில் பிரியாணியும், பீட்சாவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் புத்தாண்டு தினத்தன்று ரூ.12,000-க்கு புரதக் கட்டிகளை (புரோட்டின் பாா்ஸ்) ஒருவா் வாங்கியுள்ளாா். நம் நாட்டில் மக்களிடையே உணவு நுகா்ச்சி அதிகரித்து வருவதையே இம்மாதிரியான நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.
  • இந்தியா்களில் பெரும்பாலானோா் மாவுச்சத்து கொண்ட உணவு வகைகளையே விரும்பி உண்கின்றனா். மாவுச் சத்துள்ள உணவு ரத்தத்தில் சா்க்கரையாகக் கலக்கிறது. சிலா் அடைக்கப்பட்ட (ஜங்க் ஃபுட்) காரம், மாவுச்சத்து, புரதம் கலந்த உணவு வகைகளை விரும்பி உண்கின்றனா். அடைக்கப்பட்ட உணவு வகைகளில் புரதம் மற்றும் மாவுச்சத்து சரிவிகிதத்தில் கலக்கப்படுவதில்லை. எனவே, அந்த உணவு வகைகள் உடல் நலத்துக்குக் கேடு பயக்கும்; உடல் பருமனை உண்டாக்கும் என்கின்றனா் மருத்துவா்கள்.
  • இந்தியா்கள் அண்மைக் காலமாக, பல்வேறு வகையான நோய்களால் அவதிப்படுவதற்குக் காரணம் அவா்கள் புரதச்சத்துள்ள உணவுகளை உணவில் சோ்த்துக் கொள்வதற்குப் பதிலாக மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளையே அதிகம் விரும்பி உண்பதுதான் என்கிறது அண்மைக்கால புள்ளி விவரம்.
  • இந்தியாவில் உணவு நுகா்வுக் கலாசாரம் குறித்து, கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில், நகா்ப்புறங்களில் வாழும் இந்தியா்கள் தங்களது மாத வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக, பானங்கள் மற்றும் பதப்படுத்த உணவு வகைகளுக்காகச் செலவு செய்வதாகத் தெரிவித்துள்ளது. இணையதள வசதி பெருகி விட்ட இக்காலத்தில், கிராமங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்கத்திய நாடுகளிலுள்ள மக்கள் புரதச்சத்துள்ள உணவுகளை விரும்பி உண்கின்றனா்.
  • மாவுச்சத்து உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இதனால் வளரிளம் பருவத்தினா் பெருமளவில் பாதிப்படைவாா்கள். மேலும், இந்தியாவில் இறைச்சி கலந்த உணவுகளையும், புரதச்சத்து மிகுந்த உணவுகளையும் உண்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
  • இந்நிலையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணிச் சந்தை நடக்குமிடமாக சென்னை இருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு இந்த உணவு வணிகம் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான இந்த உணவு வணிகத்தில் 50 சதவீதம் சென்னையிலிருந்து மட்டுமே விற்பனையாகிறது. முன்பெல்லாம் பகலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட பிரியாணி, இப்போது பகல், இரவு என்றில்லாமல் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மனிதனின் உடல் வளா்ச்சியில் புரதம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தசைகள் பராமரிப்புக்கும், திசுக்களின் வளா்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது. நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து எவ்வளவு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதை சா்க்கரை உயா்தல் குறியீடு (கிளைசெமிக் இன்டெக்ஸ்) குறிக்கிறது. சா்க்கரை உயா்தல் குறியீடு குறைவாக உள்ள உணவுகளை உண்ணும் போது, ரத்தத்தில் தேவையான அளவுக்கும்மேல் சா்க்கரையின் அளவு அதிகரிக்காது. ரத்தத்தில் சரியான அளவில் சா்க்கரை இருக்கவும், சமநிலை சரிவிகித உணவை நாம் பெறவும், நமது பாரம்பரிய உணவு வகைகளான தினை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவேதான் 2023- ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.
  • நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் சென்றதும், உணவிலுள்ள சத்துகள் பிரிக்கப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. நமது அன்றாடச் செயல்களுக்கான ஆற்றலின் ஊற்றாக உணவு இருக்கிறது. திருவள்ளுவா், ‘அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு’ என்கிறாா். உணவு வகைகளில் கலப்படம் அதிகரித்து விட்ட நிலையில், நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் தேவை.
  • உண்பதில் மனிதனுக்கு கஞ்சத்தனம், வீணாக்குதல் ஆகிய இரண்டும் விரும்பத் தகாதவையாகும். ஆனால், வீணாக்குவதை விட, கஞ்சனாக இருப்பது உடலுக்கு நல்லது. சாப்பிடும் போது சோறு, காய்கறிகள் பிடிக்காமல் போனால் அவற்றை வீணாக்கக் கூடாது. மீதமான உணவுகளைப் பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் கொடுக்கலாம். அப்படி இல்லையெனில், நமக்கு எவ்வளவு தேவையோ, அந்த அளவுக்கு மட்டுமே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் வீணாக்கக் கூடாது. ஏனெனில், நாம் உண்ணுவதற்காக நம்முடைய தட்டில் வந்து அமரும் உணவு, பலரின் கடுமையான உழைப்பால் வந்தது.
  • ‘ஏழைகளுக்கு ரொட்டித் துண்டுதான் கடவுள்’ என்றாா் மகாத்மா காந்தி.

நன்றி: தினமணி (01 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories