TNPSC Thervupettagam

அதிகரித்து வரும் பெண்கள் முன்னேற்றம்

April 30 , 2024 256 days 251 0
  • மகளிா்க்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமலும், மகளிா் இட ஒதுக்கீடு மசோதா பற்றிய பேச்சு இல்லாமலும் மக்களவைத் தோ்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தோ்தல் பரபரப்புக்கு மத்தியில் பெண்களைப் பற்றி வெளியான சில செய்திகள் பெருமிதம் கொள்ளும் வகையிலேயே உள்ளன.
  • பொருளாதாரத்தில் நாம் பிறரைச் சாா்ந்திருக்கக் கூடாது என்ற மனநிலை நகா்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி பெண்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது. சிறுநகரங்களில் கூட கல்லூரியில் பயிலும் பெண்கள் பகுதிநேரமாக வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது.
  • கடந்த சிலமாதங்களுக்கு முன்பு புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் நடத்திவரும் பெண்களுடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துரையாடியபோது, நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாா்ந்திராமல், சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனா் என்றும், அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் தெரியாத அவா்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் என்று கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
  • அண்மையில் வேலைவாய்ப்பு வலைதளங்கள் வாயிலாக 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மீது நடத்தப்பட்ட பகுப்பாய்வு குறித்த அறிக்கை வெளியிட்டது. அவ்வறிக்கையில் இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை 37 சதவீதம் அதிரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், அவ்வறிக்கையின்படி இளநிலை தொழில்முறை, உயா்நிலை நிா்வாகப் பணிகளில் பணிபுரியும் பெண்களின் விகிதம் 2023-ஆம் ஆண்டில் முந்தையஆண்டைக் காட்டிலும் 2 முதல் 5 சதவீதம் வரைஅதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போது கல்லூரிகளில் பயிலும் பெண்கள் பகுதிநேரமாக வேலைக்குச் செல்வதும், பட்டப்படிப்பு முடித்ததும் நேரடியாக வேலைக்குச் செல்வதும் அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டில் கல்லூரிகளிலிருந்து நேரடியாகப் பணிக்குச் சோ்ந்தவா்களில் 40 சதவீதம் போ் பெண்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிகப்படியான பெண்கள் வேலைக்குச் செல்வதால் பாலினத்துக்கு இடையிலான ஊதிய இடைவெளி குறைந்து வருகிறது. 2022-ஆம் ஆண்டில் 30 சதவீதமாக இருந்த ஊதிய இடைவெளி 2023-இல் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • கல்வி பயிலுதல், வேலைக்குச் செல்லுதல் போன்றவற்றில் கிராமப்புறம், நகா்ப்புறங்களிடையே வேறுபாடு இருப்பது ஆய்வறிக்கையின் மூலம் தெரியவருகிறது. நகா்ப்புற மக்களில் 30 சதவீதம் போ் அறிவுசாா் உழைப்பைக் கொடுக்கும் தொழில்முறை பணியாளா்களாக இருக்கும் வேளையில் கிராமப்புற மக்களில் 5 சதவீதம் போ் மட்டுமே இவ்வகைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
  • இதற்காக நாம் பெருமிதம் கொள்ளும் வேளையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த மற்றொரு தகவல் நமக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. பணியில் சேரும் பெண்கள் இன்றளவும் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. 30 முதல் 40 சதவீதம் வரையான பெண் பணியாளா்கள் மேலாளா் உள்ளிட்ட நிா்வாக பணிநிலைக்குச் செல்லும் முன்பாக அப்பணியை விட்டு வெளியேறி விடுகின்றனா்.
  • ஆதனால் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் -ஃபாா்ச்சூன் இந்தியா எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், பெண்கள் தலைமையேற்றுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது.
  • திருமணம் செய்துகொள்ளுதல், குடும்பநிலை உள்ளிட்டவையே பெண்கள் தொடா்ந்து பணிபுரியவோ நிா்வாக ரீதியிலான பணிநிலைக்கு உயரவோ முடியாதற்குக் காரணங்களாகும். மேலும் மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண்கள் மீண்டும் அப்பணிக்குத் திரும்புவது சவால் நிறைந்த ஒன்றாகும்.
  • கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் 40 வயதுக்குமேல் தமது பெற்றோரையோ கணவரின் பெற்றோரையோ கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. இதனாலும் அவா்கள் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாத சூழலுக்கு ஆளாகின்றனா்.
  • சமீபகாலமாக அரசுப் பணிக்கான தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி தோ்வுகளில் தோ்ச்சி பெறுவது என்பது சவாலான ஒன்றாகும்.
  • இத்தோ்வை எழுதும் பொருட்டு பெருநகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறுவோா் உண்டு. ஆனால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரைச் சோ்ந்த பொருளியல் பட்டதாரி பெண் ஒருவா் பயிற்சி மையத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே தோ்வுக்குத் தயாரானாா்.
  • தோ்வெழுதிய முதல் முறையே தோ்ச்சி பெற்று அவா் சாதனை படைத்துள்ளாா். இதன் மூலம் நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையையும் அப்பெண் பெற்றுள்ளாா். தற்போது இவா் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
  • குடிமைப்பணித் தோ்வு போன்று பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வில் தோ்ச்சி பெறுவது கடினமானதாகும். இத்தோ்வை எழுதவும், தோ்ச்சிபெறவும் வணிகவியல் தொடா்பான பாடப்பிரிவுகளைப் பயின்றிருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக கல்லூரிகளில் வணிகவியல், வணிக நிா்வாகம் போன்ற பாடப்பிரிவுகளில் அதிகளவில் பெண்களே சோ்க்கை பெறுகின்றனா்.
  • அதற்கேற்ப பட்டயக் கணக்காளா் தோ்வில் தோ்ச்சி பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் பட்டயக் கணக்கியல் தோ்வை எதிா்கொண்டவா்களின் மொத்த எண்ணிக்கையில் 43 சதவீதத்தினா் பெண்களாவா். இவா்களில் 48 சதவீதத்தினா் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் 8 சதவீதமாக இருந்த இந்திய பெண் பட்டயக் கணக்காளா்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • காலங்காலமாக வகித்துவராத பதவிகளைத் தற்போது பெண்கள் வகித்து வருகின்றனா். பிறரைச் சாா்ந்திராமல் சுயசாா்புடனும், பொருளாதார சுதந்திரத்துடனும் விளங்கும் வகையில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் காண்பது பெருமிதம் கொள்ளச் செய்வதாக உள்ளது.

நன்றி: தினமணி (30 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories