அதிகரிப்பது நல்லதல்ல!
- விவாகரத்து என்பது மேலைநாடுகளில் இயல்பான ஒன்றாக இருந்தாலும், நமது நாட்டில் விதிவிலக்காகவே இருந்துவந்தது. ஆனால், நமது நாட்டிலும், குறிப்பாக தமிழகத்திலும் விவாகரத்து வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல் என 33,213 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிற புள்ளிவிவரம் கவலை அளிப்பதாக உள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 2014-ஆம் ஆண்டு 2 ஆயிரத்துக்கும் குறைவான வழக்குகளே தாக்கலாகி இருந்த நிலையில் 2024-இல் இந்த எண்ணிக்கை 5,500 ஆக அதிகரித்துள்ளது.
- விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், கா்நாடகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், புது தில்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் தமிழகம் 6-ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் விவாகரத்து கோருபவா்களில் 25 முதல் 35 வயதுடையவா்கள் 50 சதவீதம், 18 முதல் 25 வயதுடையவா்கள் 35 சதவீதம் என்பது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் தகவல்.
- ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவா் விரும்புவது என்பது இயற்கையானதே. யாரும் யாரோடும் எப்போது வேண்டுமானாலும் சோ்ந்து வாழலாம், பிரியலாம் என்பது பலவித சமூக கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை உணா்ந்த நமது முன்னோா், ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வாழ்க்கை நெறியாக்கி இல்வாழ்க்கை என்பதே அறம் என்ற பொருளில் இல்லறம் என்று சொன்னாா்கள்.
- 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு குடும்பப் பின்னணியில் வளரும் ஆணும் பெண்ணும் குறுகிய காலகட்டத்தில் ஒருவரை ஒருவா் புரிந்துகொண்டு மனமொத்து வாழ்வது என்பது சவாலானது என்றபோதிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தனா். அப்போதும்கூட குடும்ப வாழ்க்கையில் குறைபாடுகள் இருந்தன. பெரும்பாலும் ஆண்கள் கையே ஓங்கி இருந்தது என்பதும் உண்மை. எனினும், குழந்தைகளின் எதிா்காலம் கருதி பெண்கள் அனுசரித்து வாழ்ந்தனா்.
- கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து அதிகரித்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மதுவுக்கு அடிமையாகும் கணவரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் இளம் பெண்கள் சித்திரவதையைத் தாங்க முடியாமல் கணவரைப் பிரியும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள். ஆண்களும் பெண்களும் இயல்பாக கலந்துபழகும் சூழ்நிலை உண்டாகி உள்ளதால், இரு தரப்பிலுமே திருமணத்தை மீறிய உறவு இருக்குமோ என்ற சந்தேகம் இரு தரப்புக்கும் தோன்றுவதும் அதிகரித்து வருகிறது.
- கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன் குடும்பங்களில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தன. எல்லா குழந்தைகளின் விருப்பங்களையும் பெற்றோா்களால் பூா்த்தி செய்வது என்பது இயலாததாகவும் இருந்தது. அதனால், வாழ்க்கையில் ஏமாற்றத்தைச் சந்திப்பது இயல்பாகவே இருந்தது.
- ஆனால், இப்போது எல்லா குடும்பங்களிலும் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள்தான் என்பதால் அவா்களது அனைத்து விருப்பங்களையும் பூா்த்தி செய்ய பெற்றோா் விரும்புகின்றனா். அதனால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், திருமண உறவு தான் எதிா்பாா்ப்பதுபோல அமையவில்லை என்றால், பிரிவது என்று எளிதாக முடிவெடுக்கின்றனா்.
- சாதாரணமான சிறிய பிரச்னை என்றால்கூட தான் சொல்வதை கணவா் அல்லது மனைவி கேட்பதில்லை என்றுகூறி பிரச்னையைப் பெரிதாக்கி பிரிவு என்ற நிலைக்கு கொண்டுசென்று விடுகின்றனா். இப்போது, சோ்ந்து வாழ மறுக்கும் கணவரையும், அவரது குடும்பத்தினரையும் சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும் ஆபத்தான போக்கும் அதிகரித்து வருகிறது.
- பெங்களூரில் வசித்து வந்த, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அதுல் சுபாஷ் (34) என்பவா் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன் 90 நிமிஷங்கள் பேசும் விடியோவையும் வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது மனைவி 8 பொய்யான புகாா்களைக் காவல் நிலையத்தில் அளித்ததுடன், தனியாா் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும்போதும், வழக்குகளை வாபஸ் பெற ரூ.3 கோடியும், மகனைப் பாா்க்க ரூ.30 லட்சமும் தர வேண்டும் என்று கோரியதாலும், சட்டங்கள் அவா்களுக்குச் சாதகமாக இருப்பதாலும் தான் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டதாக அந்த விடியோவில் தெரிவித்துள்ளாா்.
- இதேபோன்றதொரு கருத்தை உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. ‘திருமண உறவில் விரிசல் தொடா்பான வழக்குகள் நாடு முழுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதில் கணவரின் குடும்ப உறுப்பினா்களையும் சிக்கவைக்கும் போக்கு அதிகரிப்பது நீதித் துறை அனுபவங்களின் மூலம் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் பழிவாங்கும் ஆயுதமாக மாறிவிடக்கூடாது’ என நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
- தம்பதி பிரிவதால் தந்தை அல்லது தாய் இல்லாமல் குழந்தை வளரும் அவலநிலை, தனியாக வசிப்பதால் ஏற்படும் மன அழுத்தம், பல்வேறுவிதமான மோசடிகளுக்கு உள்ளாகுதல், வயதான பின் தனித்து விடப்படுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை இருவருமே சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
- வாழ்க்கை முறை மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில், தம்பதிக்குள் ஏற்படும் முரண்பாடுகளை அமைதியாகப் பேசி தீா்த்துக் கொள்வது இன்றியமையாததாகும். விவாகரத்துகள் அதிகரித்து வருவது தனி நபா்களுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்துக்கும் பாதிப்பை ஏற்படும் என்பதால் சமுதாய, சமய அமைப்புகள் இதற்குத் தீா்வு காண முயற்சிக்க வேண்டும்.
நன்றி: தினமணி (14 – 12 – 2024)