TNPSC Thervupettagam

அதிகாரப் பரவலும் குவியலும்

October 3 , 2024 55 days 82 0

அதிகாரப் பரவலும் குவியலும்

  • அதிகாரக் குவியல் பற்றியும் அதிகாரப் பரவல் பற்றியும் நீண்ட காலமாக பெருவிவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவில் அதிகாரப்பரவலை மாநிலக் கட்சிகள், மாநிலம் வரை கொண்டுவர மாநில சுயாட்சி என்ற முழக்கத்துடன் வாதாடுகின்றன. அதிகாரப் பரவல் என்பது அதிகாரங்கள் மையத்திலிருந்து மாநிலத்துக்கு வருவது மட்டுமல்ல, மாநிலத்திலிருந்து கிராம சபை, வாா்டு சபை, பகுதி சபை வரை வருவது என்ற புரிதலில் நம் அரசியல் நகா்வதில்லை.
  • உள்ளாட்சியை வலுப்படுத்தத் தேவையான அதிகாரப் பரவலை எந்த மாநிலக் கட்சியும் முன்னெடுப்பதில்லை. ‘சோஷலிசம்தான் எங்கள் கொள்கை’ என்று கூறும் மாநிலக் கட்சிகள்கூட உள்ளாட்சியை வலுப்படுத்தும் அதிகாரப்பரவலை வலுவாக தாங்கிப் பிடிப்பதில்லை.
  • மத்திய அரசு தொடா்ந்து வெளியிட்ட அதிகாரப் பரவல் அறிக்கைகளைப் படித்தால் நம் மாநில அரசுகள் எப்படி உள்ளாட்சியை வலுவிழக்க வைத்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு இன்னொரு சான்று 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடந்தபோது மாநிலக் கட்சிகளின் தோ்தல் அறிக்கை. எந்த மாநிலக் கட்சியும் உள்ளாட்சிகளை வலுப்படுத்தும் அதிகாரப் பரவலை அவற்றின் அறிக்கைகளில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
  • இந்தியாவில் இன்றுவரை அதிகாரப் பரவல் என்பது சிக்கல்கள் நிறைந்த ஒரு நிகழ்வாகவே நகா்கின்றது. மாநில அரசிடம் அதிகாரத்தை உள்ளாட்சிகளுடன் பகிா்ந்துகொள்ள சட்டபூா்வ நடவடிக்கைகளை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது மத்திய அரசு. இந்த அதிகாரப் பரவலை வலுவாக நடைமுறைப்படுத்த மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது. மைய நிதிக்குழு மட்டும் தேவையான பரிந்துரைகளைச் செய்யவில்லை என்றால், மாநில அரசுகள் இந்த 30 ஆண்டு காலத்தில் உள்ளாட்சியை வலுவிழக்கச் செய்திருக்கும்.
  • உள்ளாட்சிக்குத் தோ்தல் நடத்த நீதிமன்றங்களும், உள்ளாட்சியை உயிரூட்ட மைய நிதிக்குழுவும்தான் ஆதாரமாக விளங்குகின்றன. இத்துடன் மைய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நிதியின் மூலமும் வலு கிடைக்கிறது. அதே நேரத்தில் மாநில அதிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அரசு எடுத்துக் கொண்டது என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுகின்றன.
  • ஒன்றிய அரசு மிகத் தீவிரமாக ஏன் அதிகாரங்களை மையப்படுத்துகிறது என்றால், புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் அடைய வேண்டிய பொருளாதார நற்பயன்களை அடைய வேண்டும் என்பதால் என்று விளக்கம் அளிக்கிறது. இந்த விவாதம் 1991-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நடைபெற்று வருகிறது.
  • இந்தியாவில் நடைபெற்ற அதிகாரப் பரவல் அரசமைப்பு சாசனத்தின் மூலம் நடந்த ஒன்று. ஏதோ ஒரு சூழலில் எல்லா மாநிலக் கட்சிகளும் அதை ஆமோதித்துவிட்டது. இதன் விளைவு இன்று ஒரு பக்கத்தில் அரசமைப்புச் சாசன திருத்தச் சட்டத்தை அவமதிக்காமல் உள்ளாட்சியை நடத்த வேண்டும், மற்றொருபுறம் மத்திய அரசின் பொருளாதாரச் சீா்திருத்தம் என்ற பெயரில் நடைபெறும் அதிகாரக் குவியல் என்ற இக்கட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன மாநிலக் கட்சிகள் நடத்தும் மாநில அரசுகள்.
  • இந்தியாவில் செயல்படக் கூடிய அதிகாரப் பரவல் என்பது ஒரு குறையுடைய அதிகாரப் பரவல், அதனால்தான் அது ஏற்படுத்த வேண்டிய தாக்கங்களை அடித்தளத்தில் முழுமையாக ஏற்படுத்த முடியவில்லை என்று வல்லுநா்கள் விளக்கம் அளிக்கின்றனா்.
  • மத்திய, மாநில உறவில் உள்ள முரண்பாடுகளைக் களைய சா்க்காரியா கமிஷன், பூஞ்ச் கமிஷன் என இரண்டு குழுக்களை உருவாக்கி அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கைகள் தந்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதில்தான் மத்திய அரசு திணறுகிறது. இதில் முரண்பாடு எதில் என்றால் அதிகாரப் பரவல் என்பது வித்தியாசங்களும் வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும், நிறைந்த நாட்டில் மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதை எளிதாக்குவதற்காகவும், மக்களை பெருமளவு மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்குபெற வைப்பதற்காகவும்தான்.
  • மக்கள் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு முழுமையான தீா்வு அதிகாரக் குவியலிலும் இல்லை, ஒட்டுமொத்த அதிகாரப் பரவலிலும் இல்லை. மக்கள் பிரச்னைகளின் தன்மைக்கேற்ப மாறுபடும். இரண்டின் முறையான ஒருங்கிணைப்பில்தான் பெரும்பாலான மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும்.
  • அதிகாரப் பரவல் என்பது ஒரு கலாசாரம். யாா் யாா் எந்தெந்தப் பணிகளைச் செய்ய இயலுமோ, அவரவரிடம் அந்தந்த இடத்தில் அதிகாரங்களைத் தந்து செயல்பட உதவிட வேண்டும். இது குடும்பங்களுக்கும் பொருந்தும், நிறுவனங்களுக்கும் பொருந்தும், அரசாங்கங்களுக்கும் பொருந்தும். அடித்தள அமைப்புகளை மக்கள் அமைப்புக்களாக உருவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்து மக்களை அதிகாரப்படுத்தி, மக்களின் உணா்ந்த அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்வது அதிகாரப்பரவலின் அடிப்படையாகும்.
  • நடைமுறையில் மிகச் சில நாடுகளில் மட்டும்தான் அப்படி நடைபெறுகிறது. நம் நாட்டில் அதிகாரக் குவியல்தான் நடைபெற்று வருகிறது. எப்படி ஒன்றிய அரசு மாநில அரசுகளைப் பாா்க்கிறதோ, அதே கண்ணோட்டத்துடன்தான் மாநில அரசுகள் உள்ளாட்சி அரசாங்கத்தைப் பாா்க்கின்றன.
  • மத்திய அரசு அதிகாரங்களை தன்வயப்படுத்தத்தான் முயன்று வருகிறது. இதற்குக் காரணம் மாநில அரசுகள் திறனற்று இருக்கின்றன. அடுத்து, பெரும்பாலான மாநில அரசுகள் ஊழலில் திளைக்கின்றன என்பதுதான்.
  • ஆனால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட உள்ளாட்சி அரசாங்கத்தின் நோக்கங்கள் என்பது பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அன்றாடம் நிறைவேற்றுவது, அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வது, சமூக மேம்பாடு, சமூக நீதி ஆகியவற்றைச் செய்வது. ஒரு சமூகமாக மக்கள் பங்கேற்று அவா்களின் தேவைகளை அவா்களே நிறைவேற்றிக் கொண்டு அமைதியாக இயற்கையோடு இணைந்து வாழ்தல்தான் இதன் குறிக்கோள். மக்களின் கூப்பிடு தூரத்தில் தனக்கான ஒருவா் இருக்க வேண்டும்; கூப்பிடுபவரின் குரலுக்கு பதில் சொல்வது மட்டுமல்ல, அவா் தேவையை நிறைவேற்றுவது. அதற்கு வானளாவிய அதிகாரம் தேவையில்லை.
  • பொதுவாக தொழில்மயமாகும்போது பெரு நகரங்கள் உருவாகும். அந்த நகரங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை தொழில் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கேட்டு பெற்றுவிடும். அரசாங்கமும் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் துறையின் பங்களிப்பு மிகவும் தேவையாக இருப்பதால், அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிடும். அதுதான் மேற்கத்திய நாட்டு அனுபவம். மேற்கத்திய நகரங்கள் வளரும்போது அவற்றின் மேம்பாட்டில் மக்களின் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தது. நம் நாட்டில் அப்படி நகரங்களை திட்டமிட்டு உருவாக்குவதும் இல்லை; அதில் மக்கள் பங்கேற்பாளா்களாக இருப்பதும் இல்லை.
  • நம் நாட்டில் நகரங்கள் மத்திய அரசின் திட்டங்கள் மூலமே வியாபிக்கப்பட்டது. மக்களின் தேவைகளையும், தொழில்துறையின் தேவைகளையும் மையப்படுத்தி நீண்டகால கண்ணோட்டத்துடன் உருவாக்கப்படவில்லை. அவ்வப்போது மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீப்பிடித்த வீட்டில் தீயணைப்புக்குப் பணி செய்வதுபோல் வசதிகள் உருவாக்கப்பட்டன.
  • கிராமமோ நகரமோ மக்கள் பங்களிப்பின் முக்கியத்துவம் அறிந்து மக்களை நிா்வாகத்துடன் எந்த இடத்திலும் இணைத்துக் கொள்ளவில்லை. மக்களின் பங்கேற்பில்லாமல் எந்த ஆளுகையும் நிா்வாகமும் சீா்படாது மேம்படாது. அதற்கு அதிகாரப் பரவல்தான் தீா்வாகும்.
  • இதை ஜவாஹா்லால் நேருவின் ஆசிரியா் ஹெரால்டு லாஸ்கி 1925-லேயே திட்டவட்டமாக விளக்கியுள்ளாா். குடிமைச் சமூகம் உருவாகாமல், விழிப்புணா்வு அடையாமல், பங்கேற்காமல் எந்த முன்னேற்றமும் சமூகத்திற்கு ஏற்படாது என்பதை தெளிவாக்கி, தன்னிடம் படிக்க வந்த மாணவா்கள் மூலம் நடைமுறைப்படுத்த முனைந்தாா்.
  • அதிகாரக் குவியல் மேய்ப்புக்கானது. அதிகாரப் பரவல் பங்கேற்புக்கானது. அதிகாரப்பரவலில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு அருகில் இருப்பாா்கள். மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு அருகில் இருந்தால் மக்களின் அன்றாடத் தேவைகள் பூா்த்தியாகும். அதிகாரப் பரவலில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் தொடா்பில் இருப்பாா்கள். அதிகாரக் குவியலில் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடமிருந்து வெகுதூரத்தில் இருப்பாா்கள். அதிகாரக் குவியல் மக்களைப் பயனாளியாக்கும், அரசாங்கத்தை எஜமானனாக்கும்.
  • அதிகாரப் பரவல் மக்களை பங்காளா்களாக மாற்றும். அதிகாரக் குவியல் மக்களை அச்சுறுத்தும், அதிகாரப் பரவல் மக்களை அதிகாரப்படுத்தும். அதிகாரக்குவியல் மக்களின் சுயமரியாதையை பாதுகாக்காது. அதிகாரப் பரவல் மக்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கும். அதிகாரக் குவியல் மக்களை அரசிடமிருந்து அன்னியப்படுத்தும், அதிகாரப் பரவல் மக்களை அரசுடன் இணைக்கும். அதிகாரக் குவியல் மக்களை பொறுப்பற்றவா்களாக்கும்.
  • அதிகாரப் பரவல் மக்களை பொறுப்பேற்க வைக்கும்; அதிகாரக் குவியல் மக்களாட்சியை சுருக்கும்; அதிகாரப் பரவல் மக்களாட்சியை ஆழப்படுத்தும் விரிவுபடுத்தும், அகலப்படுத்தும். அதிகாரக் குவியல் எதேச்சதிகார மனோபாவத்தை வளா்க்கும். அதிகாரப் பரவல் மக்களாட்சிப் பண்பை வளா்க்கும். இவற்றைப் பின்புலத்தில் வைத்து உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்பதை நாம் தீா்மானிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories