TNPSC Thervupettagam

அதிக விமானங்களை வாங்குகிறது இந்தியா ஏன்

November 12 , 2023 233 days 199 0
  • நடுத்தர மக்கள் அதிகம் உள்ள இந்தியாவில் பெரும்பாலானோர் சாலை அல்லது ரயில் மூலமாக பயணித்துவரும் நிலையில், விமான போக்குவரத்துத் துறை விரிவாக்கம் நாட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியா விமானப் போக்குவரத்துத் துறையில் அதிக முதலீடு செய்து வருகிறது.
  • உலகில் மற்ற எந்தவொரு நாடும் இந்தியா அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான விமானங்களை வாங்கவில்லை. இந்த ஆண்டில் மட்டும் இந்திய விமான நிறுவனங்கள் 1,000 ஜெட் விமானங்களை வாங்குகின்றன. இதற்காகக் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளன.
  • தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து அடுத்த ஆண்டு மட்டும் 10.9 கோடி பேர் பயணிக்கவுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக மக்கள் பயணிக்கும் அமெரிக்காவின் ஹார்ட்ஸ்ஃபீல்டு - ஜேக்சன் அட்லான்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக, 2வது இடத்தில் தில்லி இந்திரா காந்தி விமான நிலையம் இருக்கும்.
  • பயணங்களுக்கு பெரும்பாலும் ரயிலையே நம்பியுள்ள இந்தியாவில்தான் இதுவும் நடக்கிறது. இந்தியாவில், 20 பேர் ரயிலில் பயணித்தால் ஒருவர் மட்டுமே விமானத்தில் பறக்கிறார்.
  • பெரும் முதலீடுகளை உள்ளடக்கிய விமானப் போக்குவரத்து சேவை, உலக அரங்கில் இந்தியாவின் பெருமிதங்களுள் ஒன்றாக மாறியுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துவரும் வேளையில், நடுத்தர வர்க்கத்தின் கனவுகளையும் பூர்த்தி செய்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது.
  • பெரும்பாலான இந்தியர்களின் விமானப் பயணம் அவர்களின் நிதி வரம்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 3% பேர் வழக்கமாக விமானப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் இவர்கள் வெறும் 4.2 கோடி பேர். இவர்களில் வணிக நிர்வாகிகள், மாணவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் இந்திய எல்லைகளுக்குள் ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்லப் பயன்படுத்துகின்றனர். வணிகம் மட்டுமின்றி சுற்றுலாவும் இதில் அடக்கம்.
  • இந்தியாவில் விமானசேவை விரிவாக்கம் இதுவரை லாபமற்றதாகவே இருந்த நிலையில், லாபத்தை ஈட்ட முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விமான போக்குவரத்துத் துறை உள்ளது.   

விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாடு

  • 2012 ஆம் ஆண்டு இந்திரா காந்தி விமான நிலையத்தின் பயணிகள் நுழைவு வாயிலில், பாரம்பரியத்தையும் எதிர்காலத் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில் புத்தரின் விரல் முத்திரை லச்சினைகள் பிரமாண்ட வடிவில் அமைக்கப்பட்டன.
  • கடந்த ஜூலை மாதம் 4-வது ஓடுபாதையும், மேம்படுத்தப்பட்ட டாக்ஸி சேவையும் தொடங்கப்பட்டது, இந்திரா காந்தி விமான நிலையத்தை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தியது. 2006 ஆம் ஆண்டு முதல் இந்திரா காந்தி விமான நிலையத்தை மேம்படுத்தியதில் ஜிஎம்ஆர் என்ற உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வதைத் தவிர்க்கும் வகையில் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்தது. ஜெட் விமானங்களின் எரிபொருளை சேமிக்கும் வகையில், தரையிறங்கிய விமானங்களை இழுத்துச் செல்ல மின்கலனில் (பேட்டரி) இயங்கும் டாக்ஸிபோட்களை பயன்படுத்தியது. மேலும், பயணிகளின் பெட்டிகளை கையாள்வதற்காக தானியங்கி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரு மணிநேரத்தில் 6,000 பெட்டிகளைக் கொண்டு சேர்க்க முடியும். இவையனைத்தும் இந்தியாவின் மதிப்பு மிக்க உள்கட்டமைப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
  • இந்திய விமான சேவை விரிவாக்கத்திற்குத் தேவையான விமானங்கள், அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பாவின் ஏர்பஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமிருந்தே வாங்கப்படுகின்றன. இவை இரண்டும் உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களாகும்.
  • தற்போது டாடா கைவசம் மாறியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்காக கடந்த பிப்ரவரியில் ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் 220 விமானங்களும் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவு 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 5.8 லட்சம் கோடி.
  • இதேபோன்று, இண்டிகோ நிறுவனமும் கடந்த ஜூன் மாதம் 500 புதிய ஏர்பஸ் ஏ320 விமானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

விமானப் பயணிகள் விகிதம் உயர்வு

  • இந்திய விமானப் போக்குவரத்து வளர்ச்சியின் பெரும்பகுதி உள்நாட்டு விமான நிறுவனங்களிடையே உள்ளது. இது 2022 முதல் பயணிகளின் எண்ணிக்கையை 36% -ஆக அதிகரித்துள்ளது.
  • கரோனா பெருந்தொற்று முடக்கத்துக்குப் பிறகு வெளிநாட்டு பயணிகள் வருகை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. எனினும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது. ஆண்டு முழுவதும் ஒரு கோடி வெளிநாட்டுப் பயணிகள் கூட இல்லை. இதனால், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் வகையில், விமான கட்டணங்கள் குறைக்கப்பட்டன. அஜர்பைஜான், கென்யா, வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு தில்லியிலிருந்து இயக்கப்படும் நேரடி விமான சேவைக்கான கட்டணம் 21 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.
  • உலகின் பரபரப்பான 10 வான்வழித்தடத்தில் இந்தியாவிலுள்ள தில்லி - மும்பை வழித்தடமும் ஒன்றாகும். அமெரிக்காவே பொறாமைப்படக்கூடிய வகையில் தில்லியைப் போன்றே மும்பையிலும் விமான நிலைய கட்டமைப்புகள் உள்ளன.
  • பாஜக தலைமையேற்றதன் பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள் இதனை 230 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப விமான போக்குவரத்துத் துறையில் முதலீடுகளும் அதிகரித்துள்ளன. 

அனைவருக்கும் விமானப் பயணம் சாத்தியாமா

  • பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிகார் மாநிலத்தின் தர்பங்கா பகுதியில், விமான நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தில்லி - பெங்களூருவுடன் தொடர்பிலுள்ள மாநிலமாக பிகார் மாறியுள்ளது. இங்கிருந்து நாள்தோறும் 900 பயணிகள் பயணிக்கின்றனர். நேபாளம் உள்பட வடகிழக்கு பகுதிகளுக்கு நாட்டின் மற்ற பகுதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
  • உள்ளூர் பகுதிகளுடனான தொடர்பு அதிகரிப்பதால், விமானப் பயணம் ஆடம்பரமானதாக இல்லாமல், அவசியமானதாக மாறியுள்ளது என்பது விமானத்தில் பயணிப்பவர்கள் கருத்தாக உள்ளது.
  • இந்தியாவில் பெரிய விமான நிறுவனங்கள் என்பது குறைவாக இருப்பதால் அந்த நிறுவனங்களுக்கு இடையே பெரிய போட்டிகள் எதுவும் இல்லை. மேலும் சிறிய நிறுவனங்கள் நிதிச் சூழலில் சிக்கி மேலும் மோசமடைந்து வருகின்றன. கடந்த மே மாதம் கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் திவாலானது. விமானிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் விமானங்களை இயக்க ஆகாசா ஏர் விமான நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கரோனா தொற்றுநோய்க்கு முந்தைய 10 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு சுமார் 15 சதவீதமாக இருந்தது.
  • இந்தியாவில் முன்பைவிட விமானப் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்திருந்தாலும், அவை நடுத்தர வர்க்கத்தாலும் எட்டிப்பிடிக்க முடியாததாகவே உள்ளது. விமானத்தில் ஆடம்பர முதல் வகுப்பில் அமெரிக்காவுக்கு  செல்ல ஆகும் செலவைவிட பெரும்பாலான இந்தியர்களின் ஆண்டு வருமானம் குறைவு.
  • தற்போதைய முயற்சிகளால், உலகளவில் விமானப் போக்குவரத்தில் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த துறையில் வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமானால் மேலும் பல துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும்.
  • ஆனால், நடுத்தர, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்  அதிகம் உள்ள இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு இது பயன்படுமா என்றால் கேள்விக்குறிதான்.

நன்றி: தினமணி (12 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories