அதிர்ந்து கொண்டே இருந்த அரசியல் களம்
- ‘தேர்தல்களின் ஆண்டு’ என்று உலக அளவில் விளிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலும் மாநில சட்டமன்றத் தேர்தல்களும் பல திருப்புமுனைகளுக்கு வழிவகுத்தன. சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், பாஜக தனது பலத்தைப் பறைசாற்றிக்கொண்ட ஆண்டு இது. இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும் மாறி மாறி நிலவிவந்தது அதன் பின்னடைவுக்குக் காரணமானது.
பயணங்களும் திருப்பங்களும்:
- பிப்ரவரி 27இல் நடந்த மாநிலங்களவைத் தேர்தலிலேயே தனது வெற்றிக் கணக்கை பாஜக தொடங்கியிருந்தது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களும் காலை வாரினர். மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது. 240 பேர் கொண்ட மாநிலங்களவையின் பெரும்பான்மைக்கு (121) இன்னும் நான்கு உறுப்பினர்கள்தான் தேவை என்ற நிலைக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்தது.
- 2023 மே 3இல் தொடங்கிய மணிப்பூர் கலவரத்தின் தீவிரம் 2024ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. அதை மனதில்கொண்டே தனது ‘பாரத் ஜோடோ’ நீதி யாத்திரையை 2024 ஜனவரி 14இல் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து ராகுல் காந்தி தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் வலிமையை அதிகரிக்கவும் இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார். எனினும், இண்டியா கூட்டணியில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவின. ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமாரை நியமிக்க காங்கிரஸ் தயங்குவதாகப் பேச்சு எழுந்த நிலையில், அவர் ஜனவரி 28இல் இண்டியா கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றார்.
- ஏப்ரல் 19இல் மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. முன்னதாகத் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் ஒருவருக்கு இடமளிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது; தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்கலாம் எனக் கருதப்பட்ட ஆணையர் அருண் கோயல், பதவிக்காலம் முடிவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதவிவிலகியது எனப் பல நிகழ்வுகள் பரபரப்பைக் கிளப்பின.
- 2018இல் மத்திய அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர முறை தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசமைப்புச் சட்டக்கூறு 19(1)(a) ஆகியவற்றை மீறியிருப்பதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடைகள் தொடர்பான தகவல்களைப் பொதுவெளிக்குப் பகிர உத்தரவிட்டது மக்களவைத் தேர்தலில் முக்கியத் திருப்புமுனையானது. இந்த அதிர்வுகளுக்கு இடையே குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாவதாக மத்திய அரசு அறிவித்தது. 400 இடங்களை இலக்காகக் கொண்டு தேர்தலைச் சந்தித்த பாஜகவுக்கு 240 இடங்களே கிடைத்தன. இண்டியா கூட்டணி 235 இடங்களில் வென்றது.
- கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்துவிட்டாலும் பாஜக முன்புபோல அசுர பலத்துடன் நாடாளுமன்றத்தில் இயங்க முடியாது என்று பேசப்பட்டது. ஆனால், அடுத்து நடக்கவிருந்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியைச் சுவைத்தால் சமாளித்துவிடலாம் என்று பாஜக கணக்குப் போட்டது. அதைச் செயல்படுத்தியும் காட்டியது!
- இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்பட்ட ஒடிஷா சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதன்முறையாக வென்று ஆட்சியமைத்திருக்கிறது. நீண்ட காலமாக முதல்வர் பதவிவகித்த நவீன் பட்நாயக்கின் சகாப்தத்துக்கும் முடிவுகட்டிவிட்டது. 370 ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வென்று, அதன் தலைவர் ஓமர் அப்துல்லா முதல்வரானார். ஆனால், கூட்டணியில் போட்டியிட்ட 39 இடங்களில் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது, அக்கட்சி மீதான விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
ஆயுதமான விசாரணை அமைப்புகள்:
- அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை முடக்கத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார். இதை முன்னிட்டு முதல்வர் பதவியையும் அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது.
- பிணையில் வெளிவந்த பின்னர் முதல்வர் பதவி அவருக்கு மீண்டும் கிடைத்தாலும், இடையில் முதல்வராகப் பதவியேற்ற கட்சி விசுவாசி சம்பயி சோரனை பாஜகவிடம் பறிகொடுக்க நேர்ந்தது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியினர் பலர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் கைதுசெய்யப்பட்டார். சிறையில் இருந்தபடியே முதல்வராக அவர் நீடித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. பிணை கிடைத்து செப்டம்பர் 13இல் வெளிவந்தார். ஆனால், முதல்வர் பதவியை அமைச்சர் ஆதிஷிக்கு வழங்கிவிட்டு அடுத்த தேர்தலில் அனுதாப வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
- மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவுக்குக் கட்சியின் பெயரும் சின்னமும் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டதுபோல, இந்த ஆண்டில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரிவுக்குக் கட்சியின் சின்னமும் பெயரும் கிடைத்தன. கட்சி நிறுவனரான சரத் பவார் கட்சிக்கு வேறொரு பெயரை வைக்க நேர்ந்தது.
- ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில், பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படும் எனக் கருதப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 90 இடங்களில் 48ஐ வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது பாஜகவுக்குப் பெரும் உற்சாகம் தந்தது. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்தாலும் ஹேமந்த் சோரனை வீழ்த்த முடியவில்லை.
- ஆனால், மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 235ஐக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி. எதிர்பார்த்தபடி பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகிவிட்டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. துணை முதல்வராகிவிட்டாலும் அவர் விரும்பிய உள் துறை அமைச்சகமும் கிடைக்கவில்லை.
- ஆனால், இதை வைத்து அவர் மீண்டும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்குத் திரும்புவாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்குச் சட்டமன்றத்திலேயே உத்தவ் தாக்கரேயை அவர் கடுமையாக விமர்சித்துவருகிறார். ஆனால், அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்ற அடுத்த நாளே ரூ.1,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்தது.
சர்ச்சைகளும் சவால்களும்:
- கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வளவுக்கும் இடையில், இண்டியா கூட்டணிக்குத் தலைமை வகிக்க விரும்புவதாக மம்தா பானர்ஜி கூறியதும் அதற்கு சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்ததும் காங்கிரஸுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகின்றன.
- தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதித் துறை முன்வைத்த குற்றச்சாட்டை வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் களமாட, அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸுடன் காங்கிரஸைத் தொடர்புபடுத்தி பாஜக பதிலடி கொடுத்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒழித்துவிட்டு வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்திவரும் நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைக் கொண்டுவரும் இரண்டு மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
- 2025இல் டெல்லி, பிஹார் சட்டமன்றத் தேர்தல்கள் காத்திருக்கின்றன. ஆக, புத்தாண்டிலும் அரசியல் களம் அதிரும் என்றே நம்பலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 12 – 2024)