TNPSC Thervupettagam

அதீத செல்லமும் அடங்க மறுக்கும் இளம் தலைமுறையும்

January 22 , 2024 219 days 193 0
  • வட மாநிலத்திலிருந்து பிழைப்புக்காகச் சில மாதங்களுக்கு முன் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் இருவரின் குடும்பங்களைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியும் 12 வயதுச் சிறுவனும் நட்புணர்வுடன் பழகியிருக்கிறார்கள். ஆனால், அப்பழக்கம் எல்லை மீறித் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் பாலியல் உறவு கொள்ளும் நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. தான் கருவுற்றிருப்பதையே சிறுமி அறியாமல் இருந்திருக்கிறாள். இது குறித்து இரண்டு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தபோதுதான் இதன் தீவிரத்தன்மை புரிய, சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
  • இந்தச் செய்தி நம்மை அதிர வைத்ததோடு பல்வேறுவிதமான கேள்விகளையும் எழுப்புகிறது. 12 வயதுமைனர்சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுமையையும் அதிரவைத்த டெல்லி நிர்பயா பாலியல் குற்றவாளிகள் இருவர்மைனர்என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுதலையாகி வெளியில் வந்ததும் என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன. ஆனால், இந்தமைனர் சிறுவர்களின் நடவடிக்கைகளை எவ்விதத்திலும் ஒருமைனரின் செயலாக ஏற்க இயலாது.
  • சிறுவர்கள் இத்தகைய சிந்தனைகளுக்கு எவ்வாறு ஆட்படுகிறார்கள் என்று சிந்தித்தோமானால், உண்மையிலேயே நம் சமூகம் இப்பிரச்சினை குறித்த அறியாமையில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அல்லது அறிந்தும் இப்பிரச்சினையின் தீவிரம் குறித்தோ சிறார்களின் எதிர்காலம் குறித்தோ எவ்வித அக்கறையும் சிந்தனையும் அற்றவர்களாகவே இருப்பார்களாயின், இது மிகவும் கவலைகொள்ளத்தக்கது. கூலி வேலைக்காக மாநிலம் கடந்து வந்திருக்கும் தொழிலாளர்களிடம் தங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் குறித்துப் பெரிதாக என்ன சிந்தனை இருந்துவிடப் போகிறது?

பெற்றோர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

  • உண்மையிலேயே வளரிளம் பருவக் குழந்தைகள் பற்றிய அறியாமையில் பெற்றோர் இருக்கிறார்கள் எனில், இது குறித்துக் கண்டிப்பாக வெளிப்படையாகப் பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இங்கு பெரும்பாலும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்கள்அது ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாயினும் - முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து ஏற்படுவதைவிடவும் நன்கு அறிமுகமான, பழக்கமான, மிக நெருங்கிய நண்பர்கள், உறவுகள் மூலமே நிகழ்கின்றன. முன்னரே அறிமுகமானவர்கள் என்பதால் குழந்தைகள் பெரும்பாலும் அவர்களை முழுமையாக நம்புகிறார்கள். ஆனால், குழந்தைகளின் நம்பிக்கையும் ஆளுமையும் முற்றிலும் சிதைக்கப்படுவதுடன், அவர்களின் மன ஆளுமையும் இங்கு பெரும் கேள்விக்குள்ளாகிறது.
  • இதை வெளியில் சொன்னால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் எனவும் அவர்கள் மிரட்டிப் பணிய வைக்கப்படுகிறார்கள். தங்களுக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் இந்தக் குழந்தைகளைக் கயவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். காலப்போக்கில் இத்தகைய மோசமான பாலியல் வன்முறைக்குச் சிறிது சிறிதாகக் குழந்தைகள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ‘பிஞ்சில் பழுத்ததுஎன்ற சொல்லாடலுக்கு ஏற்ப இப்பழக்கம் வளரிளம் பருவத்தினரிடையே தவிர்க்க இயலாத ஒன்றாகத் தொடர்கிறது. இந்தக் குழந்தைகள் வளர வளரத் தாங்கள் இவ்வாறு கற்ற, பழகிய மோசமான பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல், வேறு வேறு நபர்கள் மீதும் அதை நடைமுறைப்படுத்தத் துணிகிறார்கள். இத்தகைய பாலியல் நடைமுறைக்கு அடிமையாவதுடன், பின்னர் குற்றவாளிகளாகவும் மாறிப் போகிறார்கள்.

பெற்றோர் தரப்பில் உள்ள நியாயம் என்ன

  • பாலியல் குற்றங்கள் ஒருபுறம் எனில், பெற்றோரும்கூடப் பல வகைகளில் குற்றவாளிகளாகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்லும் சூழலில், தங்கள் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் எனக் கண்காணிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இன்றைக்கு எழுந்திருக்கிறது. பெரும்பாலும் இப்போது ஒற்றைக் குழந்தைகளாக இருப்பதால், தங்கள் குழந்தைகளை ராஜ மரியாதையுடன் வளர்க்கவே இன்றைய பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுப்பது, அவர்கள் கேட்பவை அனைத்தையும் தங்கள் சக்திக்கும் பொருளாதார நிலைக்கும் மீறிச் செலவழித்து வாங்கித் தருவது என நடந்துகொள்கிறார்கள். குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோர் படும் சிரமங்கள், துன்பங்கள் எதுவும் தெரிவதில்லை. தாங்கள் விரும்பிக் கேட்கும் அனைத்தும் எப்படியோ தங்கள் கைகளுக்கு வந்துசேர்வதால், குழந்தைகள் எதைப் பற்றியும் கவலைகொள்வதில்லை.
  • பள்ளிப் பருவத்திலேயே தங்கள் பெற்றோரின் இருசக்கர வாகனத்தை ஓட்டப் பழகுவதன் மூலம், தங்களுக்கும் சொந்தமாக ஒரு ஸ்கூட்டர், பைக் போன்றவை வேண்டுமென பிள்ளைகள் நச்சரிக்கத் தொடங்குகிறார்கள். தங்கள் குடியிருப்புப் பகுதியிலேயே வண்டியைத் தாறுமாறாக ஓட்டப் பழகியதன் விளைவு, தாங்களும் பைக் ரேஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தலைக்கு ஏறுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் பைக் ரேஸ் நடத்துவது, சாகசம் செய்வது எனத் தங்களைப் பந்தய வீரர்களாகக் கருதி நடந்துகொள்கிறார்கள். யார் தடுத்தபோதும் மாறாத பிடிவாதமாக அது தொடர்கிறது. பிறகென்ன? டி.டி.எஃப். வாசன்கள் உருவாக, அவர்களின் அடிப்பொடிகளும் அதையே பின்பற்றி விபத்துகளில் சிக்குவதுடன் சில நேரங்களில் உயிரிழப்புகள் வரையும் நீள்கிறது.
  • இந்த வரிசையில் விலை உயர்ந்த திறன்பேசிகள், கணினிகள் என நீண்ட பட்டியல் உண்டு. தங்கள் குழந்தைகளுக்காக, அவர்கள் நலனுக்காக, அவர்கள் விருப்பத்துக்காக என இவ்வளவு தூரம் தங்களை வருத்திக்கொள்ளும் பெற்றோர், உண்மையிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு நன்மையைத்தான் செய்கிறார்களா என்பதை ஒருகணம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். இதில் பலரும் முதல் தலைமுறையாகக் கல்வி கற்று வந்தவர்கள் என்பதால், ‘தாங்கள்தான் வறுமையிலும் இல்லாமையிலும் துன்பம் அனுபவித்தோம்; தங்கள் குழந்தைகளாவது அப்படியல்லாமல் வசதியாகவும் எல்லா நலன்களும் பெற்று வாழட்டும்எனத் தவறான முடிவெடுத்து, செல்லம் கொடுக்கும் பெற்றோர்களின் விகிதம் இங்கு அதிகம். தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது என உறுதியாக இருப்பவர்கள் இவர்கள். உண்மையில், எந்தக் கஷ்டமும் இல்லாமல் ஒருவர் இவ்வுலகில் வாழ முடியுமா? பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories