TNPSC Thervupettagam

அத்திக்கடவு - அவிநாசி: சவால் நிறைந்த முன்னோடித் திட்டம்!

August 18 , 2024 3 hrs 0 min 9 0

அத்திக்கடவு - அவிநாசி: சவால் நிறைந்த முன்னோடித் திட்டம்!

  • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களாக இருந்தாலும், இந்த மாவட்டங்களின் பல வட்டங்கள் வறட்சியானவையாகவே உள்ளன.
  • நீலகிரி மலைப் பகுதியில் தோன்றி கேரளத்துக்குள் பாய்ந்து மீண்டும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் நுழைந்து ஈரோடு மாவட்டத்தில் பாய்ந்து பவானியில் காவிரியுடன் கலக்கும் பவானி ஆற்றில், தென்மேற்குப் பருவ மழை காலங்களில் மிகையான நீர் பெருக்கெடுக்கிறது.
  • அப்படி பெருக்கெடுக்கும் பவானி நீரை, பில்லூர் அணையில் இருந்து வறட்சியான பகுதிகளின் வழியாக பாயச் செய்தால் குடிநீருக்கும் வேளாண்மைக்கும் உதவியாக இருக்கும் என்ற கருத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டுள்ளது.
  • 1834-ஆம் ஆண்டில் பிரிட்டன் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனால் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் 1957-இல் பவானி திட்டம் என்ற பெயரிலும், 1972-இல் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்ற பெயரிலும் அழைக்கப்படலாயிற்று. திட்டத்தின் பெயர் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்ததுபோலவே இந்தத் திட்டமும் மாறிக்கொண்டேதான் வந்துள்ளது.

உண்மையான திட்டம்:

  • அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இடம்பெற்றுள்ள அத்திக்கடவு என்ற ஊர் கோவை மாவட்டத்தில் பில்லூர் அணைக்கு மேற்கில் உள்ள மலைக் கிராமமாகும்.
  • அந்த ஊரின் வழியாக பில்லூர் அணைக்குச் செல்லும் தண்ணீரை மலைகளைக் குடைந்தோ அல்லது நீரேற்றுத் திட்டத்தின் மூலமாகவோ வனப் பகுதியைக் கடந்து காரமடை பகுதிக்கு கொண்டு வந்தால், பின்னர் சமவெளியில் உள்ள ஓடைகள், நீர்நிலைகள் வழியாக அந்த நீர் தானாகவே அன்னூர், அவிநாசி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைச் சென்றடையும் என்றும் கருதப்பட்டது.
  • இதன் காரணமாகவே இந்தத் திட்டம் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்றழைக்கப்படடது.
  • தொடக்க காலத்திலேயே இந்தத் திட்டம் நீர்ப்பாசனத் திட்டம் என்று அழைக்கப்படாமல், நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் என்றுதான் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் நீர் நேரடியாக வேளாண் நிலங்களுக்கு பாயாது. மாறாக, ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் நிரப்பப்படுவதன் மூலம் விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் உயரும்.

இயற்கைக்கு மாறாக...:

  • தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் மேற்கில் இருந்து கிழக்கு, தெற்கு நோக்கிப் பாய்வதாகவே உள்ளன. ஆனால், அத்திக்கடவு - அவிநாசி திட்டமானது இயற்கைக்கு மாறாக கிழக்குப் பகுதியில் இருந்து நீரை எடுத்து மேற்குப் பகுதிக்குக் கொண்டு செல்வதாக அமையும் சவால் நிறைந்தமுன்னோடித் திட்டமாக அமைந்துள்ளது.
  • கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீரை எடுத்து சமவெளியில் விட்டால் இயல்பாகவே அது கிழக்கு நோக்கிப் பாயும்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒருமுறை செலவு செய்தால் போதும். ஆனால், இயற்கைக்கு மாறாக கடல் மட்டத்தில் இருந்து 193 மீட்டர் உயரத்தில் உள்ள பவானியில் இருந்து நீரை எடுத்து சுமார் 325 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசிக் குளமான மேட்டுப்பாளையம் பெள்ளாதி குளம் வரையிலும் செயல்படுத்தப்படுகிறது.
  • அதாவது பெள்ளாதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் பவானி ஆறு இருந்தாலும் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பெள்ளாதிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
  • அதிகப்படியான திட்டச் செலவு, நீரேற்றத்துக்கு ராட்சத மின்மோட்டார்களை இயக்குவதால் ஆண்டுதோறும் மின்சார செலவினம் ஏற்படுவது பற்றியெல்லாம் கடந்த 2016-ஆம் ஆண்டே கவலைக் குரல்கள் எழுந்து அடங்கின.
  • ஆனால், அதேநேரம் மலைப் பகுதியில் இருந்து திட்டத்தைத் தொடங்கினால் மலைகளை அழிக்க வேண்டியிருக்கும், மரங்களை வெட்ட வேண்டியிருக்கும், இதற்காக மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
  • தற்போது நடைமுறைக்கு வந்துள்ள திட்டம் சுற்றுச்சூழலுக்கு பிரச்னை இல்லாமல், ஒரு மரத்தைக் கூட வெட்டாமல், இயற்கைக்கு சேதாரமில்லாமல் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர் திட்டத்தின் வல்லுநர்கள்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

  • இந்திய நீர்ப்பாசனத் திட்டங்களின் தந்தை என்றழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன் 1834-இல் இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்திருக்கிறார்.
  • தமிழகத்தின் ஆறுகள் அனைத்தும் மேற்கு, வடக்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கும் நிலையில், இந்தத் திட்டம் கிழக்குப் பகுதியில் இருந்து நீரை எடுத்து மேற்குப் பகுதிக்குக் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது.
  • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகளை நிரப்பும் நீரேற்றுத் திட்டமாக இருக்கும் இது மாநிலத்தின் மிகப்பெரிய நீரேற்றுத் திட்டமாகும்.

நன்றி: தினமணி (18 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories