அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு: பெட்ரோல், டீசலை விட்டுட்டீங்களே துரை..!
- நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் பணவீக்கம் 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. முந்தைய மாதத்தில் பணவீக்க அளவு 5.49 ஆக இருந்தது.
- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சற்று கவலைக்குரியதாக பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ‘‘தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம், வெள்ளி ஆகிய ஐந்து பொருட்கள்தான் பிரச்சினைக்குரியதாக உள்ளன. இந்த பொருட்களின் தேவை, வரத்து சீராக இருப்பதில்லை என்பதால், இதன் விலை வேறுபாடு பணவீக்கத்தை பாதிக்கிறது’’ என்று தெரிவித்து உள்ளார். இதில் அவர் சொல்ல மறந்தது பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். எல்லா பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது பெட்ரோல், டீசல் விலையாகும்.
- நிதித்துறை செயலர் பட்டியலிட்டுள்ள பொருட்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து சென்று விற்கப்படும். அதற்கான போக்குவரத்துக்கு வாகனங்களை பயன்படுத்தும்போது ஆகும் பெட்ரோல், டீசல் செலவு, அத்தியாவசியப் பொருளின் விலையோடு சேர்ந்து விடுகிறது.
- பல பெட்ரோல் நிலையங்களில் சாதாரண பொதுமக்கள் 50 ரூபாய்க்கு அரை லிட்டர் பெட்ரோல் மட்டுமே நிரப்பிக் கொண்டு அன்றாட பணிகளில் ஈடுபடும் நிலையை இன்றைக்கும் காண முடிகிறது. பெட்ரோல் நிலையங்களில் 50 ரூபாய்க்கு கீழ் பெட்ரோல், டீசல் நிரப்புவதில்லை. அதற்கான வாய்ப்பு இருந்தால், அதையும் பயன்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். மாளிகையில் இருந்து பார்க்கும்போது இதுபோன்ற சாதாரண மக்களின் சிரமங்கள் கண்களுக்கு புலப்படாது. மக்களோடு இருந்து பார்த்தால் மட்டுமே ஏழை எளிய மக்களின் சிரமங்களும் புரியும்.
- தற்போது பெட்ரோலின் உற்பத்தி செலவுக்கு இணையாக வரி சேர்க்கப்பட்டு, அதன் விற்பனை விலை இரட்டிப்பாகி விடுகிறது. மத்திய, மாநில அரசுகள் போட்டிபோட்டு வரிவிதிப்பதன் விளைவே விலை உயர்வுக்கு வித்திடுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்திக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த போது, அனைத்து தரப்பினரும் அந்த முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ஆனாலும் அந்த முடிவை கைவிடவில்லை. விலைவாசி தாறுமாறாக உயர்ந்து பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்ற பிறகே பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தும் முடிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பின்னர் விலைவாசியும் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
- இன்றைக்கும் பெட்ரோல், டீசலை ஒதுக்கிவைத்துவிட்டு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. நாட்டின் சரக்கு போக்குவரத்தின் ஆணிவேராக உள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வின்மீது கவனம் செலுத்தி, நியாயமான வரிவிகிதங்களை நிர்ணயித்தால் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் விலையை எதிர்பார்த்த அளவுக்குள் கட்டுப்படுத்தி வைக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 – 2024)