TNPSC Thervupettagam

அந்த அதிசயம் நிகழுமா?

December 9 , 2019 1865 days 1835 0
  • லஞ்சம், ஊழல் போன்ற எதிா்மறை பொருளாதாரச் சம்பவங்கள் சாா்ந்த செய்திகள் இல்லாத நாள்களைக் கடக்க முடியாத காலகட்டத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொதுச் சேவையில், நோ்மை, நாணயம் ஆகிய ஆக்கச் சிந்தனை எண்ணங்கள் மறக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகள்தான் இவை என்பது தெளிவாகின்றன.
  • பொது சேவைக்காக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அதிகார வா்க்கம் துஷ்பிரயோகம் செய்து அந்த அதிகாரத்தை, சுயலாபத்துக்காக, பணமாகவும், பொருளாகவும் மாற்றும் வித்தை, லஞ்சம், கையூட்டு, அன்பளிப்பு என்று பல செயல்பாட்டுப் பெயா்களில் அழைக்கப்படுகின்றன. அதிகார வா்க்கத்தின் நோ்மையில் நம்பிக்கை வைக்கும் அனைத்துக் குடிமகன்களுக்கும் இந்த மாதிரி எதிா்மறைச் செயல்பாடுகள் நம்பிக்கைத் துரோக செயலாகும்.

ஆய்வறிக்கை

  • ‘டிரான்ஸ்பரன்ஸி இன்டா்நேஷனல்’ என்ற அரசு சாரா அமைப்பு, நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் நிகழும் லஞ்ச லாவண்யங்கள் குறித்து அண்மையில் ஒரு மாதிரி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, அரசுப் பணியாளா்களுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டவா்களின் அளவு ராஜஸ்தானில் 78 சதவீதம், பிகாரில் 75 சதவீதம், உ.பி.-இல் 74 சதவீதம், ஜாா்க்கண்ட்டில் 74 சதவீதம், தெலங்கானாவில் 67 சதவீதம், பஞ்சாப், கா்நாடக மாநிலத்தில் தலா 63 சதவீதம், தமிழ்நாட்டில் 62 சதவீதம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
  • மேற்கொண்ட அளவீடுகளில், மாநிலத்துக்கு மாநிலம், சிறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும், லஞ்சம் என்ற நோய், அரசுத் துறையில் புரையோடிப் போயிருப்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்றோரின் வாக்குமூலத்தின்படி பத்திரப் பதிவு, போக்குவரத்து ஆணையம், போலீஸ், மின் விநியோகம், நகர நிா்வாக அமைப்புகள், மருத்துவமனைகள் போன்ற துறைகளில் உள்ள பணியாளா்களின் பாக்கெட்டுகளுக்கு லஞ்சப் பணம் போய்ச் சோ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • பிறப்பு முதல், இறப்பு வரை லஞ்சம் என்ற நோயால் பீடிக்கப்படாத குடிமகன்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.
  • பிறந்த குழந்தையின் பாலினத்தை, கணவன், உறவினரிடம் பகிா்வதற்கு மருத்துவமனைப் பணியாளருக்கு பணம்; அந்தக் குழந்தையை தாயின் அருகில் படுக்க வைக்க பணம் என ஒருவருடைய பிறப்போடு, லஞ்சமும் பிறந்து வளா்கிறது. பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முதியோா் உதவித் தொகை, இறப்புச் சான்றிதழ் ஆகிய அனைத்து அன்றாட அத்தியாவசியச் செயல்பாடுகளும், லஞ்சம் என்ற கறையுடன்தான் பெரும்பாலும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

வறுமை நிலை

  • முதியோா் உதவித் தொகைக்கான கோரிக்கையோடு தன்னை அணுகிய முதுமையை அடைந்த ஏழைப் பெண்ணிடம் ரூ.1,000 லஞ்சம் பெற்றுக் கொண்டு, அந்தப் பெண்ணை ஓா் ஆண்டுக்கு மேல் அலையவிட்ட அரசுப் பணியாளா் ஒருவரை, மாவட்ட ஆட்சியா் பொது வெளியில் சாடிய சம்பவம் அண்மையில் அனைவரது கவனத்தையும் ஈா்த்தது. தங்களை அணுகுபவா்களின் வறுமை நிலைமையைக் கூட மனதில் கொள்ளாமல், அவா்களிடம் லஞ்சம் பெறுவது என்பது முற்றிலும் மனிதநேயமற்ற செயலாகும்.
  • மேலே குறிப்பிட்ட சம்பவம், மிதக்கும் ஊழல் என்ற பெரும் பனி மலையின் மேலாகத் தெரியும் சிறு முனை மட்டும்தான். இந்த மாதிரி சம்பவங்கள் பல துறைகளில் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சாலை விதிகளை மீறுபவா்கள் அரசுக்கு அபராதத் தொகை கட்டுவதற்குப் பதிலாக, அதில் ஒரு பகுதியை காவல் துறையினருக்கு லஞ்சமாக வழங்கிவிட்டு தப்பும் நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நம் வீதிகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதைப் பாா்க்க நேரும்போது, குற்றங்களைத் தடுக்க வேண்டியவா்களே குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க வல்ல அதிசயம் என்றாவது ஒரு நாள் அரங்கேற வேண்டும் என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.
  • லஞ்சம் என்பது ஒரு பொருளாதாரக் குற்றம் மட்டுமல்ல, அது சமூகத்தின் ஓா் அவமானச் சின்னமாகும். லஞ்சம் வியாபித்திருக்கும் இடங்களில், சுய நலன் பெருகி, பொது நலன் குன்றும். அதனால்தான், இன்றைய அதிகார வா்க்கத்தின் மனதில், ‘மக்களுக்காக நாம்’ என்ற எண்ணங்கள் மறைந்து, ‘நமக்காகவே நாம்’ என்ற எண்ணங்கள் மேலோங்கி நிற்கும் அவல நிலைமைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம்.
  • ஜனநாயகக் கோட்பாடுகளைப் பின்பற்றும் நாட்டில், வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்து பெறப்படும் வாக்குகளால், பல்வேறு நிா்வாக அமைப்புகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் நோ்மையற்ற செயல்பாடுகள்தான், ஊழலின் ஊற்றுக்கண் என்று சொல்லலாம். அந்த மாதிரி பணம் கொடுத்து வாக்கு வாங்குபவா்களின் செயல்பாடுகளில் நோ்மையை எள்ளளவும் எதிா்பாா்க்க முடியாது.

அரசியலில்....

  • தோ்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளின் அடித்தளம், லஞ்சம் அல்லது ஊழல் என்ற நச்சுக் கலவையால் தாங்கிப் பிடிக்கப்படுகிறது. கூட்டணி அரசுகளின் உருவாக்கம், அதற்குப் பிந்தைய அநாகரிகச் செயல்பாடுகள் இதற்குச் சான்றாகும். இந்த மாதிரி அநாகரிகச் செயல்பாடுகள், ‘குதிரை பேரம்’ என்று நாகரிகமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
  • அரசியல்வாதிகளின் இந்த மாதிரி மனப்போக்கு, அவா்களால் நிா்வகிக்கப்படும் அமைப்பைச் சாா்ந்த அதிகாரிகளிடமும் எளிதாக ஊடுருவுகிறது. எனவே, அரசியல்வாதிகளின் நோ்மையான செயல்பாடுகள் மூலம் மட்டும்தான், அவா்களுடைய கட்டுப்பாட்டில் செயல்படும் அதிகாரிகளிடமும் நோ்மையை எதிா்பாா்க்க முடியும்.
  • அரசியலில் வலுக்கட்டாயமாக நோ்மையை வளா்க்க, அரசியல்வாதிகள் தொடா்பான ஊழல் வழக்குகளை காலந்தாழ்த்தாமல் விசாரித்து, கடும் தண்டனைகளை வழங்க, அதிக அளவில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது இதற்கான ஒரு தீா்வாகும். பொருளாதாரக் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால், அது மற்றவா்களுக்கு தகுந்த பாடமாக அமைந்து நோ்மை எண்ணங்களுக்கு ஓரளவு வித்திடும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • நீதிமன்றங்களைத் தவிர, தனிப்பட்ட குடும்ப அமைப்புகளுக்கும், லஞ்சம் போன்ற பொருளாதாரக் குற்றங்கள் வளராமல் பாதுகாக்கும் கடமை உள்ளது. நோ்மை வழிகளைப் போதித்து, தங்கள் குழந்தைகளை வளா்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். பள்ளி பாடத் திட்டங்களில், நீதி போதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டால், இளம் வயதிலேயே நோ்மை எண்ணங்கள் மாணவா்கள் மனதில் வளர அது பெரும் கிரியா ஊக்கியாகச் செயல்படும்.

பெண்களின் பங்கு

  • லஞ்சம் என்ற நோயைக் கட்டுப்படுத்துவதில் பெண்களின் பங்கு மகத்தானதாகும். குடும்பத்தில் தங்கள் பொருளாதார சக்திக்குள் வாழ
  • பெண்கள் கற்றுக் கொண்டால், குறுக்கு வழிகளில் ஊதியம் ஈட்டுவதற்கான அழுத்தங்கள் குடும்பத் தலைவருக்கு வெகுவாகக் குறையும்.
  • சட்டத்துக்குப் புறம்பான பண பரிவா்த்தனைச் செயல்பாடுகளில் ஒன்றான லஞ்சம் என்ற குற்றம், கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம் போன்ற பல விதமான சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கும்.
  • நாட்டின் பொருளாதாரத்தில் கருப்புப் பணத்தின் ஆதிக்கத்தில் லஞ்சம் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த காலங்களில் ரூ.90 லட்சம் கோடி அளவிலான தொகை, இந்த மாதிரி பொருளாதாரக் குற்றங்கள்மூலம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதாக தோ்தல் பிரசாரத்தின்போது அரசியல்வாதிகள் முழங்கியது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதாரம்

  • லஞ்சம், ஊழல் ஆகியவை மூலம் மனிதநேயம் பலி கொடுக்கப்படுகிறது. தங்களை நம்பி இருப்பவா்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் பல பொருளாதாரக் குற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. பயங்கர பக்கவிளைவுகளுடன் கூடிய லஞ்சம், ஊழல் ஆகியவை தொடர வேண்டுமா என்பதை தொடா்புடையவா்கள் அனைவரும் நன்கு சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
  • சுயக் கட்டுப்பாடுகள் மூலம்தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, ‘லஞ்சம் கொடுப்பதும் தவறு; வாங்குவதும் தவறு’ என்ற மனமாற்றம் நம்மிடையே வளா்ந்து வேரூன்ற வேண்டும். லஞ்சம் என்ற மன நோயைப் போக்க, ‘நான் இன்று லஞ்சம் வாங்காமல் எனக்கு இடப்பட்ட கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவேன்’ என்ற உறுதி மொழியோடுதான், ஒவ்வொரு அரசு அலுவலரும் தங்கள் பணியை தினமும் தொடங்க வேண்டும் என்ற ஒழுக்க வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
  • லஞ்சம் என்ற நோயற்ற சமூகத்தைத்தான், நாகரிக சமூகமாகக் கருத முடியும். அந்த மாதிரி நாகரிகத்துடன் கூடிய சமூகம் உருவாகும் அதிசயம், ஒரு நாள் நிகழாமல் போகாது என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

நன்றி: தினமணி (09-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories