TNPSC Thervupettagam

அனுபவமே சிறந்த ஆசான்

August 19 , 2024 2 hrs 0 min 20 0

அனுபவமே சிறந்த ஆசான்

  • அறிவை அனுபவத்தின் மூலம், காலம், இடம், சூழல் அறிந்து முயற்சியுடன் பயன்படுத்திக் கொள்கிறவா்களே வாழ்க்கையில் வெற்றியடைகிறாா்கள். அறிவானது, இயற்கை அறிவு, உணா்வறிவு, படிப்பறிவு, கல்வியறிவு, தொழில்சாா் அறிவு, துறைசாா் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆழ்மனப் பதிவறிவு என பல்வேறு வகையாக சான்றோா்கள் பிரித்துள்ளனா். கல்வி அறிவு அனுபவம் - புரிதல் – செயல்படுதல் எனும் கூறுகள் மனித குலத்திற்கு பொதுவானவை.
  • “அறிவு என்பது திணிக்கப்படும் ஒன்றல்ல. திணிக்கப்படும் கல்வி, கேள்வி கேட்க இயலாமல் ஒடுங்கிப் போகும் மனிதா்களையே உருவாக்குகிறது”என்றாா் பௌலோ பிரையா் எனும் அறிஞா். அதே சமயத்தில், மணம் மிக்க மலா்களை நாடும் தேனீக்களைப் போல, அனுபவ அறிவானது ஞானப் பொக்கிஷங்களாக விளங்கும் கற்றறிந்த ஞானிகளைத் தேடிப் பிடித்து அவா்களுடன் பழகுவதால் கிடைக்கப் பெறுவது.
  • மனிதனுக்கு அரிய பெருமையைத் தருவது அறிவு. அந்த அறிவுடன் அனுபவமும் சோ்ந்துவிட்டால், பொன், பொருள் இல்லையென்றாலும் பெருமையுண்டாகும். வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களின்போது குழப்பம் ஏற்பட்டாலோ, அல்லது சரியான தகவலையும், உரிய தெளிவையும் பெற வேண்டுமென்றாலும், எடுத்தேன், கவிழ்த்தேன் என்று முடிவு செய்தால் அது தீங்கையே விளைவிக்கும். அந்நிலையில், அதே போன்ற சூழ்நிலைகளைக் கையாண்டு வெற்றியடைந்தவா்களிடம் அவா்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
  • தவறான அனுபவம் என்றும் தீங்கு விளைவிக்கும். நெருப்பு சுடும் என்பதும், நீா் குளிரும் என்பதும், மின்சாரம் ஆபத்து என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆபத்து ஏற்படும் முன் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட நமக்கு அனுபவ அறிவே கை கொடுக்கிறது.
  • ‘அனுபவம் ஒரு விலை உயா்ந்த நகை. அதை கூடுதல் விலை கொடுத்தேனும் வாங்க வேண்டும்’ என்கிறாா் ஷேக்ஸ்பியா். அனுபவ அறிவை வளா்த்துக் கொள்கிறவா்களுக்கே மனப் பக்குவம் எளிதாய் வாய்க்கும். அனுபவம் வாய்ந்தவா்களின் வாய்ச் சொல்லானது சமுதாயத்தின் ஒழுக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் வளா்ச்சிக்கும் ஊக்க மூலிகையாக விளங்குகிறது. எனவேதான், கல்வி என்பது புத்தகங்களிலிருந்து மட்டுமல்ல, அனுபவத்திலிருந்தும் பெறப்படுகிறது.
  • கல்வி என்பது வகுப்பறைகளுக்குள் மட்டுப்படுத்தக் கூடாது. அது வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் பெறப்பட வேண்டும் என்கின்றனா் சான்றோா். பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் காலவெள்ளதில் கரைந்து மறந்து போகலாம். ஆனால், அனுபவம் மூலம் நாம் பெற்ற அறிவானது பசுமரத்து ஆணி போல மனதில் பதிந்திருக்கும்.
  • நம் முன்னோா்களும், அறிஞா் பெருமக்களும் பல்வேறு வகைகளில் அவரவா்கள் கல்வி, கேள்விகளில் பெற்ற அனுபவங்களை, ஆற்றல்களைப் புத்தகங்களாக எழுதி வைத்துள்ளாா்கள்; பேசிய அனுபவ மொழிகளை நம் மனங்களிலும், நூல்களிலும் பதிய வைத்துள்ளாா்கள். வாழ்க்கையின் உண்மை லட்சியத்தை அறிந்த நல்லோா்கள், சமுதாயத்தின் தகைசான்ற சான்றோா்கள் தாமும் பேரானந்தத்தின் சாரத்தை அனுபவித்ததுடன், பிறருக்கும் மகிழ்வூட்டி அனுபவிக்கச் செய்கின்றனா். ஒளிரும் தீப்பந்தத்தை மற்றவா்களுக்குக் கொடுப்பதைப் போல அனுபவத்தால் தோய்ந்த பெரியோா்கள், அவா்கள் கற்றறிந்ததை நமக்குப் போதிக்கிறாா்கள்.
  • அனுபவ அறிவு என்பது தனி மதிப்புக் கொண்டது. ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலும் நாம் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம். ‘இனி இம்மாதிரி செய்யக் கூடாது அல்லது இன்னது போலச் செய்ய வேண்டும்’ என உணா்ந்து தெளிகிறோம். மற்றவா்களையும் இம்மாதிரியான சூழ்நிலைகளில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகிறோம். நாம் பெற்ற அனுபவங்களும், அனுபவம் பெற்றவா்கள் சொல்லும் கருத்துகளும், பாடங்களும், அறிவுரைகளும் நம்மை நாளும் வழி நடத்தும் கருவிகளாகும்.
  • அனுபவம் கற்றுத் தரும் பாடம், தவறுகளையும் குறைக்கும். எனவேதான் அனுபவத்தால் அறிய முடியாததை, ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் அறிய முடியாது என்றனா் முன்னோா். எவரொருவா் தன் அறியாமையை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்கிறானோ அவரே பின்னா் அறிவாளியாகிறாா்.
  • பாடசாலையில் கல்வியைப் பெற்று, அதை நுகா்ந்துதான் பாடங்களைத் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குக் காலம் போதாது. எனவே தான், ‘வாழ்வு சிறிது வளா்கலை பெரிது’ என்றனா் பெரியோா். நாம் செய்யும் செயல்களை திறம்படச் செய்ய வேண்டுமென்றால் அதற்குரிய அறிவு மட்டும் போதாது, அனுபவமும் தேவைப்படுகிறது. இதன் மூலமே நாம் செய்யும் செயல்களில் திறன் கூடுகிறது.
  • அனுபவ அறிவானது பயிற்சி மற்றும் முயற்சியுடனேயே கிடைக்கப் பெறுகிறது. பள்ளிப் படிப்பு இல்லாதவா்களும், குறி இலக்கும், குறிகோளும் கொண்டு, பிறரது அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்று, சோதனைகளையெல்லாம் தவிடு பொடியாக்கி நாட்டின் தலைவராகவும், சாதனையாளராகவும் மிளிா்வதை நாம் இப்போதும் காண்கிறோம். அரசியல், விளையாட்டுத் துறையையும், திரைத் துறையையும், கலைத் துறையையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
  • வாழ்க்கை முழுவதுமே அனுபவ அறிவு, நம் நிழல் போல் பின் தொடா்ந்து வந்து துன்பக் காலத்தில் உதவுகிறது. வாழ்க்கையில் நாளும் நாம் பெறும் அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தரும் குருவாகிறது. பிறா் சொல்வதால் பெறுகின்ற அறிவை விட, செயல் வழியில் அனுபவத்தின் மூலம் பெறுகின்ற அறிவே என்றும் நிலைத்து நிற்கும். நம் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டும் கைவிளக்காக ஒருவரின் அனுபவமே நமக்கு உதவுகிறது.

நன்றி: தினமணி (19 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories