TNPSC Thervupettagam

அன்பிற் சிறந்த தவமில்லை!

July 4 , 2024 191 days 174 0
  • அன்றாடம் செய்தித்தாள்களின் பக்கங்களைப் புரட்டுகிறபோது உலகளவில் வன்முறைச் சம்பவங்கள் குறித்த செய்திகளுக்குக் குறைவில்லை. மனவிகாரங்களினால் ஏற்படுகிற சிறுசிறு சச்சரவுகள் தொடங்கித் தேசங்களுக்கு இடையிலான காலங்காலமாகத் தொடர்ந்து வரும் பூசல்கள் வரையிலும் வன்முறைக் கொடுஞ்செயல்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன என்பதை அந்தச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அதன் பின்னணியில் தெரிவது மானுட வாழ்வின் அடிப்படையான அன்பின் வறுமையே.
  • கற்பனையிலும் கனவிலும் முகிழ்க்கிற, பொழுதுபோக்கின் பொருட்டுத் தோன்றுகிற கேளிக்கைக் காட்சி ஊடகங்களிலும் இவ்வறுமை படர்ந்திருக்கிறது. அவற்றில் தோன்றும் கதாபாத்திரங்கள் அன்புடையவர்களாகத் தெரியவில்லை. கற்கால வேட்டைச் சமூகத்தில் முதிர்வடையாத மனிதன் வாழ்ந்த வேளையில் தன் பசிக்காக மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்திய கொலைக் கருவிகளையே இன்றைக்கும் தன் ஆயுதங்களாகக் கொண்டு மனித வேட்டையாடுதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.
  • காலங்காலமாக எதிர்ப்புணர்ச்சியினாலும் பகைமேலீட்டாலும் எழுகிற மிருகவெறியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மானுடத்தின் பாதை நமக்கு நன்றாகப் போதித்திருக்கிறது.
  • கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், தலைக்குத் தலை, உயிருக்கு உயிர் என்று தொடர்ந்து வந்த பழிக்குப் பழியென்னும் படுபாதகத்திலிருந்து விலகி, தன்னை ஹிம்சித்த எதிரியிடம் பேரன்பு காட்டுவதும் அவர்களுக்கு எப்போதும் நன்மை செய்வதும்தான் மானுட நேயத்தின் வெளிப்பாடு என்று ஆதிமனிதன் உணர்ந்து கொண்டான்.
  • அந்த அடிச்சுவட்டில் இருந்துதான் மனித வாழ்வு ஐந்தாவது அறிவினைக் கடந்து ஆறாவது அறிவிலிருந்தும் நகர்ந்து ஏழாவது அறிவினை நோக்கி நடைபோடத் தொடங்கியிருந்தது.
  • தன் வயிற்றுப் பசிக்காகக் கூடப் பிறவுயிர்களுக்கு இன்னா செய்வதில்லை என்ற உயர்ந்த நோக்கம் பிறந்தது. உடலால் மட்டுமின்றிச் சொல்லாலும் எண்ணத்தாலும் பிறவுயிர்களை ஹிம்சிக்காத பெருங்குணத்தை இலக்கியங்கள் அருளுணர்வு என்று போற்றிக் காட்டுகின்றன. அந்த அருளுணர்வின் வழியாகத் தடம் மாறாமல் நடந்து காட்டியவர்களையே நாம் வரலாற்று நாயகர்கள் என்று போற்றிக் கொண்டாடி வருகிறோம். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த' அவர்களே தெய்வத்துள் வைத்துப் போற்றப் பெறுகிற சிறப்பினைப் பெறுகிறார்கள்.
  • அறியாமையினாலும் மூண்டெழுந்த பகையுணர்ச்சியினாலும் தன்னை உயிர்வதை செய்தவர்களைத் தன்னுடைய பிதாவிடம், "இவர்கள் அறியாமல் செய்யும் பாவங்களை மன்னித்து விடுங்கள்' என்று அவர்களுக்காகப் பரிந்து பேசி அந்த வாதைகளைத் தாங்கிக் கொண்ட தேவகுமரனாகிய இயேசு பெருமான் தொடங்கி, அரச சுகங்களை ஒதுக்கி விட்டு வாழ்வின் உண்மைதேடித் துறவு புகுந்து உலக மானுடத்திற்கு நல்வழிகாட்டிய புத்தர் பெருமான் போலவும், கத்தியில்லாமலும் இரத்தமில்லாமலும் சத்தியத்தினாலேயே ஒரு பெரிய புரட்சியைச் செய்து நம் காலத்தில் மானுட விடுதலைக்கான வழிகாட்டி என்று வாழ்ந்து காட்டிய காந்தியடிகள் வரையிலும் இந்த அருளாளர்கள் நமக்குத் தரும் செய்தி என்ன? அன்பென்னும் பெருவாழ்வுதானே.
  • அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவற்றின் மூலமாகப் பகை தோன்றுகிறது. இந்தப் பகை மேலும் மேலும் வளர்ந்து கொலை போன்ற பெரும்பாதகச் செயல்களுக்கு வழிவகுத்து விடுகிறது. மனித மனத்தில் ஏற்படக் கூடிய இந்த இழிகுணங்களை நீக்குவதை அறமென்று அடிப்படையிலிருந்து கற்றுத் தருகிறார் திருவள்ளுவர். அந்த அறம் அன்பிலிருந்துதானே தோன்றுகிறது? ஆயிரம் பேரைக் கொன்று குவித்துத் தன்னுடைய திறனை வெளிப்படுத்துவதா வீரம்? தன்னுள் தோன்றுகிற இந்த எதிர்க்குணங்களை வென்று காட்டுவதன்றோ உண்மையான வீரம்!
  • அன்பிலிருந்து விலகுகிற சுயநலமே பகைக்கு வித்திடுகிறது. எல்லாக் குற்றச் செயல்களையும் தூண்டுகிறது. ஆனால் அன்பைத் தழுவிய அறம் உலகப் பொதுமைக்கே வழியாகிறது. அதனால்தான் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என்றும் அன்புடையார் தம்முடைய என்பினையும்கூடப் பிறர்க்கு உரியதாகச் செய்து விடுவர் என்றும் அன்பின் உலகளாவிய பெருமையைக் காட்டுகிறார் திருவள்ளுவவர்.
  • ஓரறிவு உயிராகிய முல்லைக்கொடியின் துயர் தீர்ப்பதற்காக ஆறறிவு உயிராகிய பாரிமன்னன் தேரைக் கொடையாகத் தந்த பறம்புமலைச் சாரலிலிருந்துதான் கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று உரத்துப் பாடினார். ஆனால் இன்று ஒரு நாட்டிற்குள் - ஊருக்குள் - ஒரு குடும்பத்திற்குள்ளேயே பகையும் வெறியும் படுபாதகங்களும் மண்டி நிகழ்கின்ற வன்முறைச் செயல்கள் எத்தனை எத்தனை?
  • அச்சத்தினாலும் அருவருப்பினாலும் ஆத்திரத்தினாலும் அன்பு காட்டப்பட வேண்டிய உறவுகள் பகைக்கு ஆட்படுகின்றன. ஆனால் நம் பழங்கால வாழ்வு எப்படிப்பட்டது?
  • வெம்மை அளிக்கும் சூரியனையும் பேரலை கொண்டோங்கும் கடலினையும் மண்டியழிக்கும் பெருநெருப்பினையும் கொடிய இடிமழை வெள்ளத்தினையும் மட்டுமல்ல சின்னஞ்சிறிதாய்ச் சீறிவரும் பாம்பினையும் இவைபோன்ற பிறவற்றையும் கண்டு அஞ்சித்தான் வாழ்ந்தோம். ஆனால் பின்னாலே அன்பினால் தேர்ந்து இவற்றோடு வாழப் பழகி இவை நமக்களிக்கும் நன்மையினையும் நாடக் கற்றுக் கொண்டோமே.
  • அன்பிலிருந்து தோன்றித்தானே இவையெல்லாம் பக்தியோடு வணங்குதற்கானது? அதனால்தான் பக்தியின் தொடக்கநிலை அச்சத்தால் தோன்றி, அன்பினால், நன்மையினால் உண்டானது என்று உலக சமயங்கள் அனைத்தும் உறுதி கூறுகின்றன. வேதங்கள் இந்திரனையும் வருணனையும் சூரியனையும் தெய்வங்களாகப் போற்றுவதும் விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் பலவகை அஞ்சந்தரு பொருள்களை அஞ்சி வழிபட்டதும் இந்த உண்மையினை நிலைநாட்டும். பாபிலோனியர், உரோமர், கிரேக்கர், எகிப்தியர், பிற மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த பழங்கால மக்கள் எல்லோரும் தொடக்க நாளில் இவ்வாறே அச்சத்தின் வழியே பக்திவசப்பட்டனர். அன்பு அச்சத்தைப் போக்கிப் பக்தியைத் தந்துவிடுகிறது.
  • ஏனைய உயிர்கள் பிற உயிர்களின்மீது எழுகிற அச்சத்தின் காரணமாகவே அவை தன்னைக் கொன்றுவிடுமோ என்று அறியாமையால் அவற்றைத் தாக்கிக் கொல்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாமும் அந்த நிலைக்கு ஆளாவது பொருந்துமா? அதுவும் இருபத்தோராம் நூற்றாண்டில் இத்தனை அறிவியல் தொழில்நுட்பங்கள் நிறைந்திருக்கிற இந்த யுகத்தில் நாம் கற்கால மனிதர்களைப் போல நடந்து கொள்வது பொருத்தமானதாக இல்லையே.
  • சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை விலக்கவே நமக்குக் கல்வியும் ஒழுக்கமும் போதிக்கப்படுகிறது. சட்டம் அதற்குத் துணையாக இருந்து காவல் செய்கிறது. குற்றங்களைக் குறைப்பதற்கு ஒழுங்கு நடவடிக்கைகளும் கூட இருக்கின்றன. என்றாலும் எப்படி இவ்வாறு தொடர்ச்சியாக மனிதர்களாகிய நாம் அறியாமையால் குற்றங்களில் வீழ்ந்து விடுகிறோம். அன்புக் குறைவினால்தானே.
  • உயிர்நிலையிலிருந்து தோன்றவேண்டிய அடிப்படைப் பண்பு அன்பு. இத்தகைய அன்புடையவர்கள்தான் இரத்தமும் சதையும் உணர்வும் ஒழுங்கும் பெற்ற முழுமையான மனிதர்கள். அதற்கு மாறாக உயிர்நிலை அன்பில்லாதவர்கள் தோலினால் எலும்பினைப் போர்த்தியிருக்கக் கூடியவர்களாகவே விளங்குகிறார்கள் என்று அவர்களை உயிர்த்தன்மையற்றவர்களாகவே காட்டுகிறார் திருவள்ளுவர்.
  • தாயன்பு நம்மைப் பிற உயிர்களைத் தாய் போலவே நேசிக்கக் கற்றுத் தருகிறது. தந்தையன்பு எல்லா உயிர்களுக்கும் இன்பம் செய்யும் நல்வழியைக் காட்டித் தருகிறது. குருவின் அறிவன்பு உலக மாயைகளிலிருந்து விலகி நிற்கச் செய்து நன்மையிலே செல்லக் கற்றுத் தருகிறது. யாவற்றுக்கும் மேலான தெய்வ அன்போ நம்மையே இந்த உலகத்தின் மேன்மைக்காகத் தியாகம் செய்துவிடுகிற மெய்ஞானப் பெருநிலைக்கு உயர்த்துகிறது. இந்த அன்பில் நமக்கு எங்கு குறைவு ஏற்பட்டது என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.
  • எல்லா சமயங்களும் "அன்பே தெய்வம்' என்கின்றன. தெய்வத்தை மறுக்கிறவர்களும் கூட அன்பினை மறுத்துவிட முடியாதே. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் அன்புதான் சிவம் என உறுதியிட்டுக் கூறுகிறார். புற மாயைகளை விடுத்து இறையருளின் அன்பிலே ஆழ்ந்தவர்கள்தானே ஆழ்வார்கள் ஆனார்கள். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராய் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குபவராய், கூடும் அன்பினால் கும்பிடுவதைத் தவிர வேறு வீடும் கூட வேண்டா விறலின் விளங்கியவர்களைத்தானே நாம் நாயன்மார்கள் என்று போற்றுகிறோம்.
  • அன்பு மதம் என்ற ஒன்றை உருவாக்கி மகாகவி பாரதியார்,
  • என் மதத்தைக் கைக்கொள்மின்
  • பாடுபடல் வேண்டா
  • ஊனுடலை வருத்தாதீர் உணவு
  • இயற்கை கொடுக்கும்
  • உங்களுக்குத் தொழில் இங்கே
  • அன்பு செய்தல் கண்டீர
  • என்று உரக்கச் சொல்லி அன்பினைத் தவவாழ்வாகவே மாற்றி மனதிற்கு வழிகாட்டுகிறார்.
  • செய்கதவம் செய்கதவம் நெஞ்சே
  • தவம்செய்தால்
  • எய்த விரும்பியதை எய்தலாம்-
  • வையகத்தில்
  • அன்பிற் சிறந்த தவமில்லை
  • அன்புடையார்
  • இன்புற்று வாழ்தல் இனிது
  • என்கிறார் பாரதி. இன்றைய உலகின் துயரங்களுக்கெல்லாம் என்ன காரணம்? அன்புக் குறைவு. அதை நிறையச் செய்தால் இந்த உலகின் எல்லாத் துயரங்களும் பேதங்களும் வேற்றுமைகளும் நீங்கிப் போகுமே.. அன்புத் தவம் உலகெங்கும் ஓங்கட்டும்.

நன்றி: தினமணி (04 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories