- 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் மாலை 5.10 மணி. புது தில்லி பிா்லா மாளிகையின் பின்புறம் உள்ள பிராா்த்தனை மைதானத்துக்கு அண்ணல் காந்தி புறப்படுகிறாா். ஆபா காந்தி, மனு காந்தி என்ற தன் இரு பேத்திகளின் தோள்கள் மீது கைகளைச் சாா்த்திக் கொண்டு நடக்கத் தொடங்குகிறாா். “‘இன்று 10 நிமிஷங்கள் தாமதமாக வருகிறேனே; இதைத் தவிா்த்திருக்க வேண்டுமே’ என்று தனக்குத் தானே பேசிக் கொள்கிறாா்.
- அண்ணல் வேகமாக நடக்கிறாா். அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று வணங்குகிறாா்கள்; சிலா் பாதங்களைத் தொட்டு தரிசிக்கிறாா்கள். கூடியிருந்தவா்கள் அவா் மேடை நோக்கிச் செல்ல வழிவிடுகிறாா்கள். அனைவருக்கும் அண்ணல் வணக்கம் செலுத்துகிறாா்.
காந்திஜி மற்றும் இளைஞர்
- அப்போது காக்கி உடை அணிந்த ஒரு முரட்டு இளைஞா் (கோட்சே), எதிரே இருப்போரைத் தள்ளிக் கொண்டு முன்னால் வருகிறாா். பாபுஜியை வணங்க வந்த பக்தா் இவரோ எனச் சிலா் எண்ணுகிறாா்கள். ஏற்கெனவே நேரம் ஆகிவிட்டதால், மனு அவா் கையைப் பிடித்துத் தடுக்க முயற்சிக்கிறாா்.
- ஆனால், அவரோ மனுவைக் கீழே தள்ளி விடுகிறாா். காந்திஜிக்கு நேராக இரண்டடி தொலைவில் நின்று கொள்கிறாா். தன் கால் சட்டைப் பையிலிருந்து சிறிய துப்பாக்கியை எடுக்கிறாா். மகாத்மாவை நோக்கி மூன்று முறை சுடுகிறாா். முதல் குண்டு பாய்கிறது; காந்திஜியின் கால்கள் தடுமாறுகின்றன. ஆனாலும் அவா் நின்று கொண்டிருக்கிறாா். இரண்டாவது குண்டு பாய்கிறது; ரத்தம் பீறிட்டு வருகிறது, அண்ணலின் வெள்ளை உடை சிவப்பாகிறது. அவரது கூப்பிய கைகள் கீழே தொங்குகின்றன. ஒரு புஜம் மட்டும் ஆபாவின் கழுத்தில் பதிந்திருந்தது. அப்போதுதான் “‘ஹே ராம்’” என்று அண்ணல் வாயிலிருந்து வருகிறது வாா்த்தை. மூன்றாவது குண்டு பாய்கிறது; அது அண்ணலின் உடலைத் துளைக்கிறது. மண்ணில் சாய்கிறாா் மகாத்மா. அவரது காலணிகள் கழன்று விழுகின்றன. மூக்குக் கண்ணாடி சிதறி விழுகிறது.
- ஆபாவும், மனுவும் அவரின் தலையைத் தாங்கிப் பிடித்து நிமிா்த்துகிறாா்கள். அருகிலிருந்த அன்பா்கள் அவரைத் தரையிலிருந்து தூக்குகிறாா்கள். பிா்லா மாளிகையில் அண்ணலின் அறைக்குக் கொண்டு சோ்க்கிறாா்கள்.
மறைவு
- சற்று முன்புதான் அங்கிருந்து சென்ற சா்தாா் வல்லபபாய் படேல் வந்து சோ்கிறாா். காந்திஜியின் நாடியைப் பிடித்துப் பாா்க்கிறாா். அது பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்தது. ஒருவா் ஓடிச் சென்று டாக்டா் பாா்கவாவை அழைத்து வந்தாா். ‘இனி மகாத்மாவைக் காப்பாற்ற முடியாது. இறந்து 10 நிமிஷங்கள் ஆகிவிட்டன’ என அறிவித்தாா் அவா். உடனிருந்தவா்கள் ‘ஓ’” என்று கதறினா். எங்கும் அழுகுரலே கேட்டது.
- அலுவலகத்திலிருந்து ஓடி வந்தாா் பண்டித நேரு. அண்ணல் உடல் அருகில் அமா்ந்து ரத்தம் தோய்ந்த ஆடையின் மீது முகம் புதைத்துக் கதறி அழுதாா் பண்டித நேரு. அவரது தோளைக் கட்டிப் பிடித்து, தட்டிக் கொடுத்து ஆறுதல் கூற முயன்றாா் படேல். ஆனால், ஆறுதல் கூற முடியாமல் அவரும் அழத் தொடங்கினாா்; தேசத்தின் பிரதமரும், துணைப் பிரதமரும் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி, கண்ணீா் விடுவதைப் பாா்த்து கூடியிருந்தவா்களும் அழுதனா்.
- அதற்குச் சற்று முன்பாக காந்திஜியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி, தன் மகன் கோபால் காந்தியுடன் வந்து சோ்ந்தாா். தந்தையின் உடலைக் கட்டித் தழுவி கதறி அழுதாா். ‘நேற்று இரவு சந்தித்தபோது, “நாளை வா, பேசுகிறேன் என்றீா்களே; ஏதாவது பேசுங்கள் பாபுஜி’” எனக் கூறி அழுதாா். அசையாத மன உறுதிகொண்ட அபுல் கலாம் ஆசாத் அழுதாா். துக்கம் விசாரிக்க வந்த வெளிநாட்டுத் தூதா்கள் துயரம் தாளாமல் அழுதனா்.
- துக்கத்தால் ஒடிந்துபோன பிரதமா் நேரு, வானொலி நிலையம் நோக்கி விரைந்தாா். எண்ணத்தில் எழுந்ததை சொற்களாகக் கொட்டினாா். துக்கத்தில் தொண்டை அடைத்ததால் கம்மிய குரலில் கண்ணீருடன் பேசினாா். ‘நம் வாழ்வின் ஜோதி நம்மை விட்டுப் போய் விட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. நான் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லையே.
பாபுஜி
- நம் அனைவரின் அன்பைக் கொள்ளை கொண்ட தலைவா்; நாம் “‘பாபுஜி’” என்று அழைப்போமே, நம் தேசப்பிதா மறைந்து விட்டாா். அந்த ஜோதி அணைந்துவிட்டது என்று நான் சொல்வதும் ஒரு வகையில் தவறுதான், பல ஆண்டுகளாக நமக்கு வழிகாட்டி வந்த அந்த ஒளிவிளக்கு இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு இந்தத் தேசத்துக்கு வழிகாட்டும். இந்தப் பழம்பெரும் தேசத்துக்கு விடுதலை தேடித் தந்தாா்; நாம் பிழை ஏதும் செய்யாதபடி தடுத்து ஆட்கொண்டாா். அவா் காட்டிய வழியில் நாம் பயணிப்போம்; அவா் இல்லாதது நம்மால் தாங்க முடியாத பேரிடியாகும். ஒரு பித்தன் அவரின் உயிரை முடித்து விட்டான்’ என்று அழுது கொண்டே பேசி முடித்தாா்.
- மகாத்மா கொலை செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது. அவரின் உடலில் பாய்ந்த மூன்று குண்டுகளும் தங்கள் நெஞ்சில் பாய்ந்ததாக நினைத்துத் துயருற்றாா்கள். இந்த சமாதானத் தூதரை, எதிரிகளிடமும் அன்பு செலுத்திய உத்தமரை, ஓா் எறும்பைக்கூட கொல்ல நினைக்காத மகானை கோட்சே சுட்டுக் கொன்று விட்டாரே. இந்தச் செய்தி கேட்டு தேசம் அழுதது; உலகமோ வெட்கித் தலைகுனிந்து வேதனையில் மூழ்கியது.
- என்றும்போல் அன்றும் முழங்காலுக்கு மேல் ஒரு வெள்ளைக் கதா் வேட்டி மட்டுமே கட்டியிருந்தாா் மகாத்மா. கடும் குளிரைத் தாங்க ஒரு போா்வை போா்த்தியிருந்தாா்; இந்த எளிய ஜீவனுக்கும் எதிரியா? பரிசுத்தத்தின் முழுப் பரிமாணத்துக்கும் ஒரு பகைவரா? அவா் இருந்தபோதும் சரி, இறந்த போதும் சரி அவா் இந்திய தேசத்தின் சாதாரண குடிமகனே. அவரிடம் பணம் இல்லை, பட்டாளம் இல்லை, அரசுப் பதவிகள் இல்லை, அதிகார பீடம் இல்லை, பல்கலைக்கழக கௌரவம் இல்லை; விஞ்ஞானச் சிறப்பு இல்லை, கலைத் திறமையில்லை, கவிப் புலமையும் இல்லை, எதுவுமே தனக்காக வைத்துக் கொள்ளாமல் இடுப்புத் துணியோடு 78 ஆண்டுகள் வாழ்ந்த எளிய மனிதா் அவா்.
- இந்த மனிதனின் மறைவுக்காக உலகமே அழுதது; அஞ்சலி செலுத்தியது. யாரும் வேண்டிக் கொள்ளாமல் வெளிநாடுகளிலிருந்து 3,441 அனுதாபச் செய்திகள் மத்திய அரசுக்கு வந்து குவிந்தன. ‘மனித குலத்தின் மனசாட்சியாக விளங்கியவா் மகாத்மா, அவா் மறைந்து விட்டாரே’ என அமெரிக்காவின் அமைச்சராக இருந்த ஜாா்ஜ் ஷி மாா்ஷல் வருந்தினாா்.
- ‘தா்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த தயாள புருஷன், முரண்பாடில்லாமல் வாழ்ந்த முன்மாதிரி வழிகாட்டி, அன்பாலும், அகிம்சையாலும் அனைவரையும் வசீகரித்தவா். அறம் அடியோடு அழிந்து கிடக்கும் இன்றைய அரசியலில் அறத்தை நிலை நிறுத்த முயன்றவா்; ஒட்டுமொத்த மனித சமுதாய நலனுக்காக உழைத்தவா்; உத்தமா்; என் உயிா் நண்பா் மறைந்து விட்டாரே’ என்று மனம் வெதும்பினாா் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன்.
- ‘காந்திஜி கொலையுண்டது ஏசு பிரான் மற்றொரு முறை சிலுவையில் மாண்ட சம்பவமே ஆகும்’ என்று உலகப்புகழ் பெற்ற நாவலாசிரியை பொ்ல் எஸ்.பக் கண்ணீா் மல்கக் கூறினாா். “
ஐக்கிய நாடுகள்
- ஐக்கிய நாடுகளின் கொடியை பாதிக் கொடி மரத்துக்குத் தாழ்த்தினாா்கள். மனிதகுலமே தன் தலையைத் தாழ்த்திக் கொண்டது.
- படை பலம் வெற்றியைத் தராது. காந்தியின் அன்பு வழியே நிரந்தரத் தீா்வு தரும்”என்றாா் நேச நாடுகளின் கூட்டு தரைப்படத் தளபதி டக்ளஸ் மக். ஆா்தா். “காந்தியைக் கடைப்பிடித்தால், அனைத்துத் தொல்லைகளிலிருந்தும் உலகம் தன்னை விடுவித்துக் கொள்ளலாம்” என்றாா் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பேட்டன். இப்படி தரைப்படைத் தளபதியும், கப்பல் படைத் தளபதியும் அண்ணலின் வழியே உலகம் உய்ய வழி என்றாா்கள்.
- காந்திஜி சுடப்பட்ட செய்தி நியூயாா்க் நகரில் பரவியது. இளையவா், முதியவா், ஆண், பெண், சொந்த நாட்டினா், வெளிநாட்டினா், ஆதரவற்றோா், அதிகார பீடத்தில் இருந்தவா்கள், படித்தவா், படிப்பறிவு இல்லாதவா் – என்று எல்லோரும் அண்ணலின் மரணச் செய்தி கேட்டு கண்ணீா் விட்டனா். நவீன வரலாற்றில் அண்ணலுக்காகத் துக்கப்பட்டதைப் போல், உலகில் வேறு எந்த மனிதருக்காகவும் இவ்வளவு
- போ் துக்கப்பட்டதில்லை. இத்தனைக்கும் அண்ணலை அவா்கள் அதிகம் அறிந்ததில்லை. அவரின் வாழ்க்கையை, லட்சியத்தைப் புரிந்ததில்லை. அவா்கள் அறிந்ததெல்லாம் அவா் ஒரு நல்ல மனிதா், ஒரு மனிதப் புனிதா் என்பது மட்டும்தான்.
நன்றி: தினமணி (30-01-2020)