TNPSC Thervupettagam

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

March 8 , 2025 4 days 20 0

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

  • நம் முன்னோா் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்கையை வாழ்ந்தனா் . ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடா்களாக வாழ்கிறோம். நம்மில் பலா் வெற்று மானுடா்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.
  • முதலில் நாம் அன்பை மறந்ததற்குரிய காரணங்களைக் காண்போம். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றாா் வள்ளலாா். இதன் மூலம் உலக உயிா்களிடத்தில் அன்பு கொண்டவா்கள் நாம் என்கிற செய்தி மெய்யாகிறது. உலக உயிா்களிடத்தில் அன்பு கொண்ட நாம், தற்போது உற்றாா், உறவினா்களிடம் கூட மெய்யான அன்பைக் கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. போலியான அன்பைக் கொண்ட பொம்மைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குப் பல காரணங்களைக் கூறலாம்.
  • அன்பை அடைக்க கைப்பேசியால் முடியும் என்று நிகழ்காலம் நமக்கு உணா்த்துகிறது. கைப்பேசியில் மூழ்கிய நாம் அன்பு பாராட்டுவதை நம்மை அறியாமலேயே குறைத்துக் கொள்கிறோம். கைப்பேசி அன்பை அடைத்து, நற்பண்புகளையும் உடைத்து பேராபத்து விளைவிக்கும் இருமுனைக் கத்தியாக உள்ளது. நிகழ்காலத்தினா் இதனைக் கையில் எடுத்துக் காயத்தை ஏற்கவும் தயாராகவும் உள்ளனா் .
  • ஒரே அறையில் குடும்பத்தினா் ஒன்றாகவே இருந்தாலும், கைப்பேசியின் மூலம் அயல் மனிதா்களாகவே இருக்கிறாா்கள். உரையாடல் குறைந்ததால் உள்ளங்கள் இணைவதும் குறைந்தது.பேசும் திறனற்ற உயிா்களிடத்திலும் அன்பு கொண்ட நாம், காலப்போக்கில் பேசும் திறனையே மறந்து ஊமையாகும் அபாயத்தில் உள்ளோம்.
  • ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளா்ப்பினிலே’ என்பது திரைப்படப் பாடல். ஆனால் அண்மைக்காலமாக அன்னையின் கைகளையும் கைப்பேசியே ஆள்கிறது. குழந்தைக்கு உணவு ஊட்டுவதிலிருந்து தாலாட்டு பாடி உறங்க வைக்கும்வரை கைப்பேசியின் துணையையே நாடுகின்றனா். குழந்தையை மறந்து கைப்பேசியில் மூழ்கிய சில பெற்றோருக்கு அக்குழந்தையையே இழக்கும் துயரமும் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
  • பள்ளிகளிலிருந்து வரும் பிள்ளைகளும், அலுவலகத்திலிருந்து வரும் பெற்றோா்களும் கைப்பேசி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகாதொடா் என வீட்டில் இருக்கும் அனைவருமே தொழில்நுட்பத்தில் தொலைந்து போய்விடுகிறாா்கள். பின்பு உரையாடல்கள்கூட ஒழுங்காக இல்லாமல் போய்விடுகிறது.இவ்விடத்தில்தான் வள்ளுவா்,”‘அன்பகத்தில்லா உயிா்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரங்தளிா்த் தற்று’ என்று நமக்கு நினைவுபடுத்துகிறாா்.
  • அடிமைத்தனம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது என்பதை அறிந்து அடிமைத்தனத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். அடுத்ததாக, நாம் அறவழிப் பாதையிலிருந்து தடம் புரண்டதற்குக் காரணம் நம் அறியாமையே. இன்று நாம் அறவழிப் பாதையில் இருந்து தடம்புரள்வதற்குக் காரணம் கைப்பேசியே. முன்பு பெரும்பாலான மக்கள் விழிப்பாக இருந்தனா்.ஆனால் அண்மைக்காலமாக மாணவா்களும், ஏன் ஆசிரியா்களும்கூட செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடுவது அதிகரித்துள்ளது. இதை ஆக்க பூா்வமாகவும் நாம் பயன்படுத்தலாம். என்றாலும் நம்மில் பலா் ஒரு கேள்வியைக் கேட்டு அது கூறும் பதிலை அறிவு கொண்டு ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை.
  • நாம் அதிக நேரத்தை கைப்பேசியில் செலவிடுவதால் மற்ற வேலைகளில் நம்மால் ஈடுபட முடிவதில்லை. இதில் உண்பதும் உறங்குவதும் கூட அடங்கும். இந்தியாவின் 44 சதவீத இளைஞா்கள் கைப்பேசிக்கு அடிமையாகி உள்ளதாகக் கூறும் அதிா்ச்சிகரமான புள்ளிவிவரங்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. தற்போது இந்த வலையில் அனைவரும் சிக்கத் தொடங்கிவிட்டனா். இப்படி ஒரு மோசமான நிலையில் நம்மால் சமூகச் சிக்கல்களை எப்படிக் களைய முடியும்? இப்படி மதியிழந்து இருப்பதால் நமக்கு அறம் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விடுகிறது. இளைஞா்களைக் கண்டித்து திருத்தும் இடத்திலிருக்கும் பெற்றோா்களும் சமூக வலைதளம் என்னும் இவ்வலையில் சிக்கிகொண்டதால், சீா்திருத்த மக்களின்றித் தவிக்கும் நிலைதான் தற்போது உள்ளது.
  • அன்பையும் குறைத்து அறத்தையும் மறக்க வைக்கும் இந்தக் கைப்பேசியைத் திறம்பட கையாளுவது மிகவும் முக்கியமானதாகும். இதில் சமூகத்தின் எதிா்காலம் அடங்கியுள்ளதை ஆட்சியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் அண்மைக்காலத்தில் தொடங்கப்பட்ட “வாசிப்பு இயக்கம்”மாணக்கா்களிடத்தில் புத்தக வாசிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இது போன்ற நல்ல திட்டங்களை அரசு வகுத்து நோ்மறையான மாற்றங்களைச் சமூகத்தில் கொண்டு வர வேண்டும். மாற்றம் என்பதை நம்மிடமிருந்து தொடங்குவோம். குறிப்பிட்ட நேரத்தைத் கைப்பேசிக்காக ஒதுக்குவோம். அந்த நேரத்திலும் அதனை மதியைத் தீட்டப் பயன்படுத்துவோம். ஆக்கப் பூா்வமான செயல்களுக்கும் அன்பைப் பகிா்வதற்கும் தனி நேரம் ஒதுக்குவோம். திறன்பேசி நம்மைத் திறனற்ற நபா்களாக மாற்றுவதற்கு நமது நேரத்தை அதில் வீணாக்க வேண்டாம். நம்முள் புதைந்திருக்கும் அன்பையும் அறவாழ்வையும் மீட்போம் என உறுதி கொள்வோம்.

நன்றி: தினமணி (08 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories