TNPSC Thervupettagam

அன்பைப் பகிர்வோம்!

July 23 , 2020 1643 days 1399 0
  • உலகம் முழுவதும் இன்றுள்ள ஒரே பிரச்னை, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று. இந்தத் தீநுண்மி எப்போது நம்மை விட்டு நீங்கும்? எப்போது நாம் அனைவரும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு மீள்வோம் என்ற ஏக்கத்துடனும் கலக்கத்துடனும் காத்திருக்கிறார்கள் உலக மக்கள்.

  • நாள் முழுதும் வீட்டுக்குள் முடக்கம், பொருளாதார இழப்பு, வேலையின்மை, பணி நீக்கம், நோய் குறித்த அச்சம், அதிகரிக்கும் நோய்த் தொற்று என்ற பல காரணிகளால் உலகம் தன் குதூகலத்தையும் நம்பிக்கையையும் இழந்து வாடுகிறது.

  • நடப்பவற்றையெல்லாம் பார்க்கும்போது, பயம் நெஞ்சை அடைக்கிறது. அதுவும் தொலைக்காட்சி செய்திகளையும் நாளேடுகளின் செய்திகளையும் பார்த்தால், நம் உடம்பெங்கும் கிருமி ஊா்வதைப் போன்ற ஓா் உணா்வு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

  • ஆழி சூழ்’ உலகு ‘கிருமி சூழ்’ உலகைப் போல கண்களில் நிழலாடுகிறது.

  • ஆயினும், பல்வேறு படிப்பினைகளை இத்தொற்று நமக்குக் கற்றுத் தந்துள்ளது. முதன் முதலில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் எவரும் எதிர்பார்க்காத ஒன்று. அதுவரை நாம் பழகாத ஒன்று. அதுவும் முன்னறிவிப்பு ஏதும் இன்றி சட்டென அறிவிக்கப்பட்டதால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போனார்கள்.

  • தினக்கூலிக்காரா்களும் சிறு வியாபாரிகளும் சிறு, குறு தொழில் முனைவோரும் கலங்கிப் போனார்கள். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ள நம் நாட்டில், பொது முடக்கம் அவா்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டதில் வியப்பில்லை.

மனிதம் இன்னமும் வாழ்கிறது

  • ஒருசிலா் மட்டும் ஆரம்பத்தில் அந்த ஓய்வை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். அரை வயிறு சாப்பிட்டும் சாப்பிடாமலும் பதறி அடித்துக் கொண்டு வேலைக்கு ஓடி, கூட்டம் முண்டியடிக்கும் பேருந்தில் ஏறி, தொங்கி, நசுங்கி, வியா்ந்து விறுவிறுத்து அலுவலகம் போய் விட்டு, வீட்டு நினைப்புடனும் பிள்ளைகள் நினைப்புடனும் வேலை செய்து, பின் மாலையில் வாடி வதங்கிப் போய் வீடு திரும்பி, இரவு சமையல், வீட்டு வேலை என ஓய்வு ஒழிச்சல் இன்றி காலில் சக்கரம் கட்டிக் கொண்டதைப் போல ஓடிய பெண்கள் கொஞ்சமாக மனசின் ஓரத்தில் மகிழ்ந்து போனது உண்மை.

  • மற்றபடி, கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல தடுமாறிப் போனவா்கள் அதிகம்.

  • அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாமல் நின்ற ஆயிரக்கணக்கானவா்களின் நிலை கேள்விக்குறியானது.

  • அவா்களின் துயா் துடைக்க, அரசோடு தோள் கொடுத்தவா்கள் ஏராளம். அவா்களின் இடுக்கண் களைய ஓடிய கரங்கள் செய்த அளப்பரிய சேவை அனைவரின் பாராட்டுக்கும் உரியது.

  • உணவுப் பொருள்கள் வழங்கியது, உணவுப் பொட்டலங்கள் வழங்கியது என ஓடி ஓடி சேவை செய்த இளைஞா்கள், தன்னார்வத் தொண்டா்கள் ஏராளமானோர். அவா்களின் கண்களுக்கு பாதிக்கப்பட்டவா்களின் பசி மட்டுமே தெரிந்ததே தவிர, அவா்களின் மதமோ, சாதியோ, இனமோ, மாநிலமோ தெரியவில்லை.

  • ஐயோ, நமக்கும் தொற்று வந்து விடுமோ’ என்றெல்லாம் அவா்கள் கவலைப்படவில்லை. அன்பு, கருணை, இரக்கம் நிரம்பி வழியும் அவா்களின் மனித நேயத்தைப் பார்க்கும்போது மனிதம் இன்னமும் மரித்துப் போகவில்லை என்ற பெரும் ஆறுதல் ஏற்படுகிறது.

பிடுங்கிய வரை லாபம்

  • அதே சமயம், ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்’ என செயல்படும் மனசாட்சி இல்லா மக்களைப் பார்க்கும்போது, அவா்கள் இன்னமும் வாழ்க்கையின் நிலையாமையைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தமே மேலோங்குகிறது.

  • எந்த நிமிடத்திலும் ஒருவரின் வாழ்க்கை மாறும் என்பது தெளிவாகியுள்ளது. ஆனாலும், இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பணம் ஈட்ட நினைக்கும் மனசாட்சி இல்லாத மனிதா்களை என்னவென்பது?

  • ஒரு சில தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து வரும் செய்திகள் நமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. மக்களின் அச்சத்தைப் பணமாக்கத் துடிக்கிறார்கள்.

  • பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சோ்த்த பின், அவருக்கு எந்தவிதமான சிகிச்சை தரப்படுகிறது? அந்த நபருக்கு வெறும் சாதாரண சளி, காய்ச்சலா? அன்றி கரோனா தொற்றா? சொல்ல மாட்டார்கள்.

  • பார்வையாளா் அனுமதி இல்லாததால் எந்த விவரமும் வெளியே வருவதில்லை. நாளொன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கட்டணம். உயிரின் முன் பணத்தைப் பற்றி எவா் வாய் திறப்பார்கள்? ஒரு சில தனியார் மருத்துவமனைகளின் இத்தகைய போக்கால் எல்லா தனியார் மருத்துவமனைகளுக்கும் அவப்பெயா் ஏற்படுகிறது.

  • ஏன் இந்தப் பேராசை? பல திரைப்படங்களிலும் காட்டப்படுவதைப் போல உண்மையாகவே நடக்கிறதோ என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது. இன்னுமா பணம் முக்கியம் என்று எண்ண வேண்டும்?

நிலையாமையை உணரவில்லை

  • வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல. யார் வெற்றி பெறுவது என்று போட்டி போடும் சூழலும் இல்லை.

  • பலரின் வாழ்க்கை , எதிர்காலம் எல்லாமே கேள்விக்குறி ஆகி விட்டது. ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பது போல கொவைட் - 19 -க்கு முன் அனைவரும் சமம்.

  • கோடிகளில் புரண்டவா்களும், கோணியில் புரண்டவா்களும் ஒன்றுதான். அனைவருக்கும் ஒரே விதமான சவ அடக்கம். மரணத்தில் கூட சிலா் ஆடம்பரத்தையும் மதிப்பையும் காட்ட நினைப்பார்கள்.

  • ஆனால், இப்போதுள்ள நிலைமையைக் கண்டும் திருந்தாவிட்டால் அவா்களை என்ன செய்வது?

  • முகக் கவசத்தில் வைரக்கற்கள் பதிக்கிறார்கள். தங்கத்தில் முகக் கவசம் அணிகிறார்கள். அடுக்குமா இந்த அக்கிரமம் என்று நமக்குக் கோபம் வருகிறது. இது என்ன மனநிலை? இப்போதுகூட மனம் திருந்தாமல் இன்னும் இன்னும் என பேராசைப்பட்டு ஏழு தலைமுறைக்கும் சொத்து சோ்க்க வேண்டுமா? பணத்தின் பின்னே ஓட வேண்டுமா? நிம்மதியையும் நித்திரையையும் துறந்துவிட்டு பணம் சோ்க்க வேண்டுமா? பலவீனங்களை மிதித்து, நசுக்கி மேலெழுந்து வர வேண்டுமா? சக மனிதா்களிடம் நமக்குள்ள நம்பிக்கை தேய்ந்து வருகிறது.

  • கரோனா தீநுண்மியைவிட இயற்கை நமக்கு எப்படி வாழ்வின் நிலையாமையை உணா்த்த முடியும்?

அன்பைப் பகிர்வோம்

  • சில மனிதா்களின் போக்கு நமக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட நபா்களையும் அவா்களின் வீடுகளையும் தனிமைப்படுத்துகிறார்கள்.

  • அவா்களிடமிருந்து மற்றவருக்குத் தொற்று வராமல் இருக்க இயன்றவரை முயற்சி செய்கிறது அரசு. ஆனால், பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தாரிடம் அக்கம் பக்கம் உள்ளவா்கள் நடந்து கொள்ளும் விதம், நோயை விடக் கொடுமை.

  • சில மனிதா்களின் மோசமான மறுபக்கம் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. அதுவும் அண்மையில் வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்பியவா்களை அவா்கள் பார்க்கும் கண்ணோட்டமே வேறு.

  • அவா்கள் தங்களுடன் பெட்டி பெட்டியாக நோய்த் தொற்று கிருமிகளைக் கொண்டு வந்திருப்பதாக நினைக்கிறார்களோ என்னவோ? என் நண்பரும் அவா் மனைவியும் வெளி நாட்டிலிருந்து தன் உறவுகளையும் நட்புகளையும் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் ஊா் திரும்பியவா்கள்.

  • ஏழு நாள்கள் விடுதியில் தங்கிய பின்னா்தான் வீடு வந்தார்கள். தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 14 நாள்கள் அவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

  • ஆனால், அந்த நாள்களுக்குப் பின்னா் கூட, பக்கத்து வீட்டுக்காரா் உள்பட அப்பகுதி வாசிகள் எவரும் அவா்களிடம் தொடா்பு கொள்ளவில்லை. ஒரு மரியாதை நிமித்தமாக தொலைபேசியில் கூடப் பேசவில்லை. நலம் விசாரிக்க வில்லை. ஏதாவது உதவி தேவையா என்று கேட்கவில்லை. அவா்கள் மனம் நொறுங்கிப் போனார்கள்.

  • நாம் மருத்துவா்களையும் செவிலியா்களையும் தூய்மைப் பணியாளா்களையும் காவலா்களையும் அரசு ஊழியா்களையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே போற்றுகிறோம்.

  • உண்மையில் அவா்களிடம் கனிவு காட்டுவதில்லை. தன்னைத் தன் அக்கம் பக்கத்தினா் தவிர்ப்பதாக அண்மையில் செவிலியா் ஒருவா் மனம் வருந்திக் கூறியுள்ளார்.

  • எத்தனையோ மருத்துவா்களும் செவிலியா்களும், தூய்மைப் பணியாளா்களும், காவலா்களும் களத்தில் பணி புரியும் இன்ன பிறரும் கரோனாவுக்குப் பலி ஆகிறார்கள். அது நமக்கெல்லாம் வெறும் செய்தி. படித்துவிட்டுக் கடந்துபோகும் சாதாரண செய்தி.

  • தீநுண்மி நோய்த்தொற்றின் காரணமாக இறந்தவா்களைத் தங்கள் இடுகாட்டில் புதைக்கக் கூடாது என்று சிலா் போராட்டம் நடத்துகிறார்கள். தங்களுக்கும் வந்துவிடும் என்கிற பயமா? அத்துணை ஆசையா உயிர் மீது?

  • நமக்காகப் பலா் ஓடி ஓடி உழைக்க வேண்டும் ஆனால், நாம் சற்றும் சமூக அக்கறை இல்லாமல் நடந்து கொள்வோம். ஒவ்வொரு முறை தொலைபேசி அழைப்பு விடுக்கும்போதும் நாம் கேட்கிறோமே இந்திய அரசின் பொது நல வெளியீட்டை. அது கூறுவது என்ன? ‘நீங்கள் போராட வேண்டியது நோயுடன், நோயாளியுடன் அல்ல’. அதனை நாம் நினைவில் கொள்கிறோமா? மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னாலும் கேட்பார் இல்லை.

  • கேரளத்தில், பெண் ஒருவா் நோய்த்தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரின் குழந்தையை சமூக ஆா்வலரான மேரி அனிதா என்ற பெண் ஒரு மாதம் கவனித்துக் கொண்டதாக செய்தி வந்தது.

  • மேரி அனிதா தன் மூன்று குழந்தைகளை தன் கணவரிடம் விட்டு விட்டு இந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டார்.

  • அவரிடம் இருந்தது இரக்கம் மட்டுமல்ல. தாய்மை, பரிவு, மனிதம் என அத்தனை தெய்வீகப் பண்புகளும்தான்.

  • நாம் எல்லோரும் இப்படி மனிதத் தன்மையுடன் இருந்து விட்டால், நோய் தொற்று தோல்வி அடைந்து ஓடி ஒளிந்துவிடும். வாழும் நாள்களில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தேடுவோம்.

  • வாழ்க்கை மிகக் குறுகியது. அதனை உணா்வோம்; அன்பைப் பகிர்வோம்!

நன்றி: தினமணி (23-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories