அன்றாடமும் மொழியும்
- அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
- ஒவ்வோர் உயிரினமும் அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ற அளவிலான புலன்களை, புலன் உறுப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் புலன் அனுபவங்களைச் சேகரிக்கும் நினைவாற்றல் கொண்ட நரம்பு மண்டலங்களையும் பல உயிரினங்கள் பெற்றுள்ளன. உதாரணமாக நாய்கள், அதிசயிக்கத்தக்க வகையில் நினைவாற்றலுடன் செயல்படுகின்றன. இதுபோன்ற அம்சங்கள் பல உயிரினங்களிடையே இருந்தாலும் மனிதர்களின் நரம்பு மண்டலம் மிக அதிக வளர்ச்சி பெற்றதாக இருக்கிறது.
- மனிதர்களின் நரம்பு மண்டலம், அதன் தலைமைச் செயலகமான மூளை ஆகியவற்றால் நிறைய புலன் தகவல்களைச் சேகரிக்க முடிகிறது. ஆனால், அவ்வாறு சேகரித்த தகவல்களை நினைவில் கொண்டுவந்து இயங்குவதற்குப் பயிற்சி தேவைப்படுகிறது.
- மேலும், இவ்வாறான புலன் அனுபவங்களைப் பொதுவானவையாகப் பெறும் மனிதர்கள் குழு, அவற்றைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது. இந்த நோக்கங்களின் காரணமாக மொழி தோன்றுகிறது. அனைவரும் வானில் பார்க்கும் ஒன்றைச் சூரியன் எனக் குறிப்பிடுவதன் மூலம் பொதுவான அனுபவம் மொழியாக மாற்றிப் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
- மொழியற்ற இயக்கத்திலிருந்து, மொழிவயப்பட்ட இயக்கத்துக்கு நகர்வது மிகப் பெரிய பாய்ச்சல் எனலாம். புலன் உணர்வுத்தளத்தில் இயங்கும்வரை எந்தத் தகவல் பரிமாற்றமும், சைகைகளோ, வேறு குறியீடுகளோ கொண்ட பரிமாற்றம், குறுகிய எல்லைக்குள்தான் இயங்குகிறது. அது சமூகப் பொதுமை கொண்டதாக மாறுவதில்லை. அதற்கு மாறாகப் புலன் உணர்விலிருந்து கிளைக்கும் புரிந்துணர்வைச் சொற்களாக மாற்றும்போது அதன் பகிரும் ஆற்றல் பன்மடங்காகிறது.
- குறிப்பாக, ஓர் உடலின் தன்னுணர்வாக உள்ள சுயம், ஒரு பெயரை ஏற்கும்போது மொழியின் தன்னிலையாக மாறுகிறது. “நான் ராஜன்” என்று சொல்லும்போது, நான் என்ற தன்னிலைச் சுட்டின் பெயராக ராஜன் மாறுகிறது. “நான் என்பது தன்னிலை, நீ என்பது முன்னிலை, அவர் என்பது படர்க்கை” என்று தமிழ் இலக்கணம் கூறுவதால், தற்சுட்டான ‘நான்’ என்பதால் குறிக்கப்படுவதைத் தன்னிலை என்று கூறுகிறோம்.
- புலன் உணர்வின் தளத்தில் மனித உடல் தன்னுணர்வு கொண்டால்கூட அது சுயமாகவே இயக்கம் கொள்கிறது. அது நம் உடலில் நினைவுசேகரத்தால் உருவாகும் சுயம். அந்த சுயம், மொழியில் நான் என்று கூறும்போது தன்னிலையாக மாறுகிறது. தன்னிலை மொழியில் குறிப்பிடப்படும் பிற அனைத்துடனும் உறவு கொள்கிறது. சக மனிதர்கள் சமூகத்துடனான உறவும் சரி, இயற்கையின் அனைத்து அம்சங்களுடனுமான உறவுகளும் சரி மொழியின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றன.
- சமூகத்தை ஒருங்கிணைப்பது, அதன் செயல்பாடுகளை வடிவமைப்பது மொழியாகவே இருக்கிறது. பல அருவமான சிந்தனைகள், அன்பு, அறம், நீதி, தர்மம், சமூக நீதி எனப் பல மொழியாலான கருத்தாக்கங்கள் தோன்றி, சமூகக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. மொழியின் இலக்கணமே கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதைத் திட்டவட்டமாகப் பிரித்துச் செயல்களைக் கட்டமைக்கிறது.
- எனவே, ஒரு தனி மனிதரின் தன்னுணர்வாகவும், சமூகத்தின் கூட்டுத் தன்னுணர்வாகவும் மொழியே இரண்டையும் இணைத்துத் தன்னிலையாக்கம் செய்து இயங்குகிறது.
மொழியின் அடுக்குகளில் அன்றாடமும் கதையாடல்களும்:
- மனிதர்கள் புலன் உணர்வின் தளத்தில் இயங்கினாலும், அந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட திசையில் செலுத்துவது என்பது மொழியாகவே இருக்கிறது. சமூக உறவுகளில் யாருடைய சொல்லுக்கு யார் கட்டுப்பட வேண்டும் என்பதே அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குகிறது. விரிவான கதையாடல்கள் மூலம் இந்த உறவுகள் உருவாக்கப்பட்டாலும், அன்றாட நடைமுறையில் அவை இயல்பாக்கம் பெற்று மிகக் குறைந்த சொற்களுடனேயே செயல்படுகின்றன. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்படுவது என்பது ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று கூறத் தெரியாதவர்களுக்குக்கூட இயல்பான நடைமுறையாகிறது.
- இதன் விளைவாக, அன்றாட வாழ்க்கையில் புழங்கும் சொற்கள் என்பவை மிகவும் குறைவாகவே இருக்கும். ‘வாங்கள்’, ‘போங்கள்’ என்று பத்திருபது வினைச்சொற்களில் பலரது அன்றாட வாழ்க்கை நிறைவடைந்துவிடலாம். ஆனால், சமூகத்தின் அதிகார மையங்களில் மொழி செறிவூட்டப்பட்டு ஏராளமான சொற்கள் சொல்லாடல்களையும், கதையாடல்களையும் உருவாக்கியபடி இருக்கும்.
- மொழியை அதிகம் கற்றவர்கள், அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பார்கள். அவர்களே சமூக விதிகளையும், அரசியல் அமைப்புகளையும் சொற்களின் மூலம் உருவாக்குவார்கள். மொழியின் அடர்த்தியே சமூகத்தின் கூட்டுத் தன்னுணர்வாகவும், வரலாற்று ஆற்றலாகவும் வடிவம் எடுக்கிறது.
- உதாரணமாக, சம்ஸ்கிருத மொழி என்பது மிக அடர்த்தியான இலக்கண விதிகளால் கட்டமைக்கப்பட்டது. சம்ஸ்கிருதம் என்ற சொல்லுக்கே சம்யது + கிருதம், அதாவது ‘சிறப்பாகச் செய்யப்பட்டது’ என்பது பொருள் என்று கூறுவார்கள். இந்த மொழியைச் சரியாகப் பேச இயலாதவர்கள் அல்லது பிற மொழிகளுடன் கலந்து பேசுபவர்களையே ‘மிலேச்சர்கள்’ என்று குறிப்பிட்டதாக வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர் கூறுகிறார்.
- நாளடைவில் மிலேச்சர்கள் என்ற வார்த்தை அந்நியர்களைக் குறிப்பதாக மாறிவிட்டது. ஒரு மானுடத் தன்னிலையின் சமூக அடையாளம் அதன் மொழியின் அடிப்படையில் அமைகிறது என்ற உண்மையை இது துல்லியமாக்குகிறது.
மொழிக்கு அப்பால் தேடப்படும் சுயம்:
- மொழியின் மூன்று பரிமாணங்கள் முக்கியமானவை ஆகின்றன. ஒன்று, அன்றாட வாழ்வின் பயன்பாட்டுக்கான மொழி. மற்றொன்று, சமூகக் கட்டமைப்பை, தன்னுணர்வைச் சாத்தியமாக்கும் வரலாற்றின் இயக்கமான மொழி. மூன்றாவது, தனது மொழியாலான தன்னிலையைச் சுமையாக நினைத்து, பேரியற்கையுடன் தன் சுயத்தைக் கலக்க நினைக்கும் ஆன்மிக மொழி. பொதுவாக, மொழியை அறிவாக நினைக்கும்போது, மொழிக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை, உயிராற்றலை இதயத்துடன் தொடர்புபடுத்துவது வழக்கம்.
- ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று லட்சிய உறவை வர்ணிக்கும் பாடல் ஒன்று பிரபலமானது. அந்தப் பாடலின் போக்கில் மொழியற்ற நிலையில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்வதான உருவகம் வரும். அப்போது ‘சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை...
- சொல்லாத சொல்லுக்கு விலை யேதும் இல்லை’ என்ற வரிகளும் வரும். இப்படி அன்றாட வாழ்வின் அடிப்படையாகவும், பெரும் சமூக ஒழுங்குகளின் வரலாறாகவும், இந்த இரண்டு பரிமாணங்களிலிருந்தும் விடுபடத் துடிக்கும் உணர்வாகவும் மொழி இயங்குகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 01 – 2025)