TNPSC Thervupettagam

அன்றாட வாழ்வும் வன்முறையும்

October 28 , 2024 3 hrs 0 min 6 0

அன்றாட வாழ்வும் வன்முறையும்

  • அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது. ​
  • மானுட சுய தன்னுணர்வின் வாழ்நாள் காலம் மரணத்தை நோக்கியதாக இருப்பதன் காரணமாக இயற்கையின் காலமான அன்றாடத்​திலிருந்து பிரிந்து, கூட்டுத் தன்னுணர்வின் காலமான வரலாற்றுக் காலத்தை அது கைக்கொள்​வதற்குக் காரணமாகிறது. உயிரியல் தொடர்ச்சி என்பது இனப்பெருக்​கத்தின் மூலம் உறுதி​செய்​யப்​பட்​டாலும் அது தன்னுணர்வு கொண்ட சுயத்தின் தொடர்ச்​சியல்ல என்பதையும் கண்டோம். ஏனெனில், எல்லா உயிரி​களும் இனப்பெருக்கம் செய்கின்றன. அவையெல்லாம் இயற்கையின் காலப் பரிமாணத்​தில்​தான், அன்றாடத்​தில்தான் அடங்கி​யுள்​ளன.
  • சில நுண்ணு​யிர்​களின் இருப்பின் காலம் ஒரு நாளுக்கும் குறைவாகக்கூட இருக்​கலாம். அமெரிக்​காவில் காணப்​படும் டொலானியா அமெரிக்கானா என்கிற பூச்சி அரை மணி நேரம்தான் வாழும். அந்த அரை மணி நேரத்தில் ஆண் பெண்ணைத் தேடி உறவு கொண்டு​விட்டு இறந்து​விடும். பெண் டொலானியா தோன்றிய ஐந்தே நிமிடங்​களில் ஆணுடன் இணைந்து முட்டை​யிட்டு​விட்டு இறந்து​விடும்.
  • இனப்பெருக்கம் என்கிற பரிமாணத்தில் பிற உயிரினங்​களுடன் மானுடம் அன்றாடத்தைப் பகிர்ந்​து​கொண்​டாலும், மரணத்தை நோக்கிய இருப்​பாகத் தன்னை உணரும்போது அது தன்னுணர்வு கொள்கிறது. மரணத்​திலும் மனித உயிரி, பிற உயிரினங்​களுடன் ஒரு பொதுமையைக் காணத்தான் செய்யும். ‘பட்டுப் பூச்சி வாழ்க்கையது, எட்டு நாள்தானே! பறந்து வரும் ஈசலுக்கு, ஒரு நாள்தானே! அவை பறக்கலையா? சிறகு விரிக்​கலையா? வாழ்வை ரசிக்​கலையா?’ என்கிற புலமைப்​பித்தன் எழுதிய திரைப்படப் பாடலைக் கேட்டிருப்​போம்.
  • அவை பறப்பதும், சிறகை விரிப்​பதும் உண்மை​தான். வாழ்வை ரசிக்குமா என்று உறுதி​யாகச் சொல்ல முடியாது. ஏனெனில், மனிதனின் நரம்பு மண்டலம் சாத்தி​ய​மாக்கும் நினைவுசேகரம்தான் நினைவுகளை, அதன் மூலம் தன்னுணர்வை, தன்னுணர்வின் ரசனை போன்ற​வற்றைச் சாத்தி​ய​மாக்கு​கிறது. இந்தத் தன்னுணர்​வுதான் மரணத்தை எண்ணிக் கலங்கவும் வைக்கிறது.
  • மரணத்தைக் கடந்தும் நீடிக்க விரும்பும் மனிதர்​களுடைய சுய தன்னுணர்வின் புகலிடம் கூட்டுத் தன்னுணர்வின் வரலாற்றுக் காலம். மானுடத்தின் ஒருங்​கிணைந்த சமூக வாழ்வை நினைவுசேகரம், அறிவுசேகரம் கொண்டு மேம்படுத்துவது வரலாறு. அவ்வாறு செயல்பட அடிப்​படையாக இருப்பது மானுடர்​களின் கூட்டுத் தன்னுணர்வு, பொது நன்மை கருதும் சிந்தனை. இதன் மூலம் ஒருவர் செய்யும் நற்செயல்கள் அவர் வாழ்நாள் கடந்தும் நீடிப்பது சுய தன்னுணர்வை நியாயப்​படுத்து​கிறது.
  • தன்னுணர்வின் அடிப்படை விளைவு என்னவென்றால் செயல் தேர்வு. மானுடத் தன்னுணர்வு தன்னை உடலிலிருந்து பிரித்துக் காண்ப​தால், அதனால் ‘என்னுடைய உடல்’ என்று கூற முடிவ​தால், அதற்குத் தேர்வு சாத்தி​ய​மாகிறது. உடல் ஒரு செயல்​பாட்​டினைத் தூண்டி​னாலும், தன்னுணர்வால் அதைத் தடுத்துவிட முடியும். இன்னொருவர் கையிலிருக்கும் சாக்லெட்டை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்று குழந்தைக்குத் தோன்றலாம். அவ்வாறு செய்வது தவறு என்று அதற்குச் சொல்லிக் கொடுக்​கிறோம்.
  • அதனால், கொடுத்​தாலும் வேண்டாம் என்று மறுக்கும் பக்கு​வத்தை அது பெறுகிறது. பெற்றோர் அனுமதித்த பிறகே வாங்கிக்​கொள்​கிறது. இவ்வாறான நன்னெறிகளின் மூலம் சமூக வாழ்வை, அதனை ஒழுங்​கமைக்கும் கூட்டுத் தன்னுணர்வை, பண்பாட்டைச் சாத்தி​ய​மாக்கிக் கொள்கிறது மானுடம். பிற உயிரினங்​களுக்குச் சாத்தி​யமில்லாத தேர்வு, புலன் தூண்டு​தலைக் கட்டுப்​படுத்​திக்​கொள்ளும் தேர்வு மனிதர்​களுக்குச் சாத்தியம் என்பதால், விலங்​கு​களின் வன்முறை மனிதர்​களிடையே இல்லை என்று கருதப்​படு​கிறது.
  • பண்பாடில்​லாமல் வன்முறையை நாடுபவர்களை மிருகம், விலங்கு என்று கூறி இழிவு​படுத்துவது மானுட வழக்கம். மாமிசம் தின்னும் விலங்​குகள் பிற விலங்​குகளை வேட்டை​யாடிக் கொன்று தின்பதால் இப்படி ஒரு கெட்ட பெயர் விலங்​கு​களுக்கு. ஆனால் பாருங்கள், புலி பசித்தால்தான் மானைக் கொல்லும். பசி தீர்ந்த பிறகு நாளைக்குப் பசிக்​குமே, அடுத்த வாரம் பசிக்குமே என்று மான்களைக் கொன்று மாமிசத்தைச் சேர்த்து வைக்காது. அதன் வன்முறையின் பரிமாணம் அன்றாடம் சார்ந்தது. வரலாற்றுக் காலம் சார்ந்​ததல்ல.
  • கூட்டுத் தன்னுணர்வின் வரலாற்று அடையாளம் இல்லாத​தால், விலங்​கினங்கள் படை திரட்டித் தங்கள் இனத்தையே கொல்வது இல்லை. தற்கொலை செய்து​கொள்​வதும் இல்லை. இவை இரண்டுமே உடலிலிருந்து வேறுபடுத்​திக்​கொண்டு தன்னுணர்வு கொள்ளும் மானுடத்​துக்​குத்தான் சாத்தி​ய​மாகிறது. அதிலும் வரலாற்று உணர்வினால் கட்டமைக்​கப்​படும் மத அடையாளங்கள், இன அடையாளங்கள், தேசிய அடையாளங்கள் ஆகியவற்றின் பெயரால்தான் படுகொலைகள் அதிகம் நடக்கின்றன. நாஸிசம் ஆரிய இன அடையாளத்தின் பெயரால், யூதர்களை விஷ வாயு சேம்பர்​களில் கொத்துக் கொத்தாகக் கொன்றது. அதனால் உருவான யூதர்​களின் தேசமான இஸ்ரேல், இன்று பாலஸ்​தீனக் குடிமக்களை, குழந்தைகளை இரக்கமின்றிக் கொல்கிறது.
  • இந்தக் கட்டுரை எழுதப்​படும் நேரத்தில் எத்தனை பேர் காஸாவிலும், லெபனானிலும் ஏன் இஸ்ரேலிலும் கூட ஏவுகணைகள் தாக்கி இறந்து கொண்டிருக்​கிறார்கள் என்று கூற முடியாது. குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயாளிகள் என அன்றாட வாழ்க்கையை வாழ்ந்​து​வரும் சாதாரண மனிதர்கள் எங்கிருந்தோ வீசப்​படும் ஏவுகணை​களால் கொல்லப்​படு​கிறார்கள். இந்த வன்முறை அன்றாட வாழ்வின் பரிமாணத்​தின்​மீது, தன்னுணர்வு உருவாக்​கிக்​கொள்ளும் வரலாற்றுக் காலம் நிகழ்த்தும் வன்முறை என்றுதான் நாம் கருத வேண்டும்.
  • அப்போதுதான் முக்கியமான அறவியல் கேள்வி எழுகிறது. மானுடத் தன்னுணர்வு அன்றாடத்தின் காலப் பரிமாணத்தில் இயங்க வேண்டுமா, வரலாற்றுப் பரிமாணத்தைப் பற்றிக்​கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. கூட்டுத் தன்னுணர்​வும், வரலாற்றுணர்வும் ஆகப் பெரிய வன்முறையை, அணு ஆயுதங்​களால் பேரழிவை உருவாக்​குமென்​றால், அன்றாடம் என்ற பரிமாணத்​திலேயே தன்னுணர்வு வாழலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories