TNPSC Thervupettagam

அபராத உயர்வு தீர்வல்ல!

September 19 , 2019 1752 days 1008 0
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., முத்தலாக் விவகாரம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து எனப் பல கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • இப்போது மோட்டார் வாகன திருத்தச் சட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அபராதம் கடுமையாக உள்ளது என்பதே உண்மை.
புதிய சட்டம்
  • புதிய சட்டம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
  • போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகனத்தை ஓட்டினால் இனி ஒரு பெரும் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
  • அதாவது, இந்தத் தொகை சாதாரணமாக ஒருவர் தங்கள் வாகனத்துக்கு ஒரு மாதத்துக்குப் போடும் பெட்ரோல், டீசலுக்கான தொகையைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
  • உதாரணமாக, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இனி ரூ.5,000 அபராதமாகச் செலுத்த வேண்டும்.
  • பொதுவாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் ரூ.100 லிருந்து ரூ.10,000 வரை உள்ளது. தலைக்கவசம்  அணியாமல்  பிடிபட்டால் அதற்கான அபராதம் ரூ.100-ஆக இருந்தது.
  • ஆனால், இப்போது அது ரூ.1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, அபராதம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
  • தில்லியில் போக்குவரத்து விதிகளை மீறிய ஒரு வாகன ஓட்டிக்கு அவர் வைத்துள்ள இரு சக்கர வாகனத்தின் விலையைவிட அதிகமாக அபராதம் போடப்பட்டது. லாரியில் அதிக சுமை ஏற்றிவந்ததற்காக லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ.1,47,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் லுங்கி அணிந்திருந்ததற்காக  லாரி ஓட்டுநருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி விநோத சம்பவங்கள் தொடர்கின்றன.
சவால்கள்
  • போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை மிகக் கடுமையாக உள்ளதால் குஜராத், கர்நாடகம், உத்தரகண்ட் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் இதை முழுமையாகச் செயல்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.
  • சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே விதிகள் கடுமையாக்கப்பட்டு, அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வாதம் சரியானதுதான். ஆனால், சாதாரண மக்கள் இதை எப்படித் தாங்குவார்கள் என்பதுதான் கேள்வி.
  • அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் போடாமல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிப்பது போக்குவரத்து விதிமீறல்கள் மீதான மொத்தக் குற்றங்களில் சுமார் 5 சதவீதம்தான்.
  • இப்போது இவற்றுக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டிருப்பதால், போக்குவரத்துப் போலீசாரிடம் சிக்கினாலும் அதிகாரப்பூர்வ அபராத ரசீது போடுவது குறைந்துவிடும். அதாவது, ஊழலுக்கே வழிவகுக்கும்.
  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக கட்டணம் அபராதமாக விதிக்கப்படுவதாக அமைச்சர் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
  • ஆனால், அந்த நாடுகளில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிக்கும் போலீஸார் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.  மேலும், அங்கு தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளதால் அதற்கு ஏற்றவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் மிக நேர்த்தியாகப் போடப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிக்க போலீஸார் எண்ணிக்கையும் அதிகம் இல்லை, மக்களின் தனிநபர் வருமானமும் அதிகரிக்கவில்லை.
  • வாகன ஓட்டிகளுக்கு உரிமம் வழங்குவதில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சரியான நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. அரைகுறையாக ஓட்டத் தெரிந்தவர்களும் எளிதில் உரிமம் பெற்று விடுகிறார்கள்.
  • வாகனங்களை ஓட்டிக் காண்பிப்பதுடன் உரிமம் பெறுபவர்களின் பணி முடிந்து விடுகிறது. அவர் முறையாகப் பயிற்சி பெற்றவரா, அவருக்கு போக்குவரத்து விதிகள் முழுமையாகத் தெரியுமா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. இவை சட்டத்தில் இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
  • போக்குவரத்து ஆய்வாளர் நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களைப் பரிசீலித்து உரிமம் வழங்க வேண்டும் என்றால் அதற்கான போதிய நேரம் அவருக்கு இருப்பதில்லை.
  • அதனால் அவர் 5 நிமிஷங்களில் ஒருவரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து முடிவு செய்து விடுகிறார்.உரிமம் வாங்க வருபவரின் திறமையைச் சோதிக்க ஐந்து நிமிஷங்கள் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது.
பரிந்துரைகள்
  • இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 1.5 லட்சம். சுமார் 3 லட்சம் பேர் பலத்த காயமடைந்து முடமாகிவிடுகின்றனர்.
  • வெளிநாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெற வாகனத்தை ஓட்டிக் காண்பித்தல், கண் பரிசோதனை தவிர போக்குவரத்து தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.  அந்த நாடுகளில் 45 சதவீதம் பேர்  தேர்ச்சி பெறுவதில்லை.
  • ஆனால், இந்தியாவில் இதுபோன்ற கடுமையான நடைமுறை இல்லை.
  • நமது நாட்டில் பல நகரங்களில் சாலைகள் தரமாக இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வேகத்தடை இருக்கும் இடங்களிலும், போக்குவரத்து சிக்னல் இருக்கும் இடங்களிலும் வண்ணக்கோடுகள் மூலமான எச்சரிக்கை இல்லை.
  • சில இடங்களில் போக்குவரத்துக்கான சிக்னல்களும் சரிவர இயங்குவதில்லை. இரவு நேரங்களில் சாலைகளில் விளக்குகள் இல்லாததால் போதிய வெளிச்சமின்மையும் விபத்துகளுக்குக் காரணமாகிறது.
  • எனவே, சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு அபராத கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே தீர்வு ஆகாது.
  • போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகளும் மக்களும் முறையாகப் பின்பற்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

நன்றி : தினமணி (19-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories