- இந்தியத் தலைநகர் டெல்லியில் கடைகளில் அமில விற்பனைக்குத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருப்பது, அமில வீச்சு பாதிப்புக்கு உள்ளானவர்களையும், அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமில வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானவரும் அதிலிருந்து மீண்டுவந்து, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கான உதவிகளைச் செய்துவரும் செயற்பாட்டாளருமான ஷாஹீன் மாலிக், டெல்லியில் அமில விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
- இந்த மனுவை ஜூலை 27 அன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, சந்தீப் நரூலா அமர்வு, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காகவும் அமிலம் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறி மாலிக்கின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.
- அதே நேரம் சட்டவிரோதமாகவும் உரிய விதிகளைப் பின்பற்றாமலும் அமில விற்பனையில் ஈடுபடுவோர் அல்லது அமிலத்தைத் தவறான காரணங்களுக்காகப் பயன்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அமில விற்பனையை முற்றிலும் தடை செய்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த ஆய்வை மேற்கொள்ள டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
- உச்ச நீதிமன்றம் 2013இல் வெளியிட்ட உத்தரவின்படி, அமில விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் முறைப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். அமிலம் வாங்குபவர்களின் அடையாள ஆவணங்களையும் அமிலத்தை வாங்குவதற்கான காரணத்தையும் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், மனித உரிமைச் சட்ட வலைப்பின்னல் என்னும் அரசுசாரா நிறுவனம் 2020இல் நடத்திய கணக்கெடுப்பின்படி, டெல்லியில் பல்வேறு கடைகள் இதுபோன்ற விதிகளைப் பின்பற்றாமல் அமில விற்பனையில் ஈடுபட்டுவருவதை அம்பலப்படுத்தியது.
- தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2020இல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 182 அமில வீச்சுத் தாக்குதல்கள் நடைபெற்றன; 2021இல் இந்த எண்ணிக்கை 176ஆகக் குறைந்திருக்கிறது. ஆனால், 2018 முதல் 2021 வரை, டெல்லியில் மட்டும் 32 அமில வீச்சுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
- 2020இல் இரண்டு தாக்குதல்கள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அடுத்த ஆண்டிலேயே இந்த எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்திருப்பது அமில விற்பனை தொடர்பான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதில் நிலவும் போதாமைகளை உணர்த்துகிறது. கடந்த மார்ச் மாதம் டெல்லியில் 17 வயதுச் சிறுமி அமில வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
- வீடுகளிலும் அலுவலகங்களிலும் கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்காக அமிலம் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இது போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு அமிலத்துக்கு மாற்றாக வேறு ஆபத்தில்லாத பொருள்களைப் பயன்படுத்த முடியும் என்பதைச் செயற் பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஆண்டு டெல்லி மாநகராட்சி, கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய அமிலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது ஒரு முக்கியமான நகர்வு.
- சில அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அமில விற்பனை தொடர அனுமதிக்கும் அரசும் நீதிமன்றமும் அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைத் தமது தலையாயக் கடமையாகக் கருத வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டங்களும் விதிமுறைகளும் அனைவராலும் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் புதிய சட்டங்களும் விதிகளும் பிறப்பிக்கப்பட வேண்டும். அமிலத் தாக்குதல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது அனைவருக்கும் உள்ள பொறுப்பு.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 08 – 2023)